Monday, October 14, 2024

சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்


தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களே! உங்களுக்குத் தாழ்மையான ஒரு வேண்டுகோள். உங்கள் பத்திரிகைகளை நிச்சயம் நீங்கள் உங்கள் நிறுவன நூலகங்களில் ஆவணப்படுத்தி வைத்திருப்பீர்கள். அப்படி வைத்திருந்தால் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வையுங்கள். உங்கள் பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்ய விரும்பும் எவருக்கும் உறுதுணையாக இருங்கள். படைப்புகளைத் தேடி வேண்டுகோள்கள் வரும்போது நிச்சயம் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சேவைக்கு இலவசமாக உதவிகளைச் செய்யத்தேவையில்லை. சேவைக்குரிய நியாயமான கட்டணங்களை நீங்கள் அறவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பத்திரிகைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த உதவி செய்கின்றீர்கள்.

முன்னாள் சுவடிகள் திணக்கள இயக்குநர் K.D.G.விமலரட்ன

நான் முன்பு பல தடவைகள் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மனக்கண் நாவல் பிரதிகளுக்காக தினகரன் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை எவற்றுக்கும் பதில்  கிடைத்ததேயில்லை. பின்னர் இலங்கைச் சுவடிகள் திணக்களத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அக்காலகட்டத்தில் அதன் இயக்குநராகவிருந்த K.D.G.விமலரட்ன அவர்கள் உண்மையிலேயே சிறந்த பண்பு மிக்கவர் மட்டுமல்லர்.உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்தார். அதனால் அவர் எனக்குச் சுவடிகள் திணக்களத்திலிருந்து மனக்கண் நாவல் வெளியான பக்கங்களைப் புகைப்படப் பிரதிகளாக எடுத்து , நியாயமான கட்டணத்துக்கு அனுப்பி உதவினார். அதை ஒருபோதுமே மறக்க மாட்டேன்.

எழுத்தாளர் காத்யான அமரசிங்க

அவ்விதம் அவர் அனுப்பிய மனக்கண் அத்தியாயங்கள் அத்தியாயம் முப்பது மட்டும் கிடைக்கவில்லை. அதன் பிரதி சுவடிகள் திணைக்களத்தில் இல்லை.  அதன் பின்னர் அதனைத்தேடிப் பல தடவைகள் தினகரன் பத்திரிகை ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். பதில்கள் வந்ததேயில்லை. பின்னர் எழுத்தாளர் காத்யான அமரசிங்கவிடம் இது பற்றிக் கூறியபோது அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நூலகத்திலிருந்து அந்த தேடப்பட்ட அத்தியாயத்தை எடுத்து அனுப்பினார். இவரையும் ஒருபோதுமே மறக்க மாட்டேன். இவர்கள் இருவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இன்று அ.ந.கந்தசாமியின் வெளியான ஒரேயொரு முக்கிய நாவலான 'மனக்கண்' நாவலை நீங்கள் யாவரும் வாசிக்க முடிகின்றது.

இத்தருணத்தில் இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்ய வேண்டும். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். அவரும் அ.ந.கந்தசாமியும் இளமைப்பருவத்திலிருந்து நண்பர்கள். அ.ந.க.வின் படைப்புகளைச் சேகரித்து வைத்திருந்தார். அ.ந.க.வின் மதமாற்றம் தேசிய கலையிலக்கியப் பேரவை வெளியீடாக வெளிவரக் காரணம் அவர் அதனைச் சேகரித்து வைத்திருந்ததால்தான். அவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்புகொண்டும் அதனைப் பெற முடியவில்லை. மீண்டும் தொடர்புகொண்டபோது அதனைக் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார்.

இவ்விதம் எழுத்தாளர் ஒருவரின் படைப்புகளை, பத்திரிகைம் சஞ்சிகைகளின் பழைய பிரதிகளைத் தேடுகையில் மேற்படி பத்திரிகை, சஞ்சிகை நிறுவனத்தினர் உதவி செய்தால் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் ஆற்றும் முக்கிய சேவைகளில் ஒன்றாகக் கருதப்படும். இவ்விடயம் பற்றி அவர்கள் சிந்திப்பார்களாக.

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்