Tuesday, October 15, 2024

எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி சூதாட்டக் கடன்களைத் தீர்க்க எழுதிய நாவல் 'சூதாடி', எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறுவது போல் 'குற்றமும் தண்டனை'யும் அல்ல!


எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சு.ரா.வின் 'அந்தரத்தில் பறக்கும் கொடி' என்னும் தொகுப்பிலுள்ளது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் ஒருவர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்லி.  அவரைப் பற்றி கட்டுரைகள் எவை கண்ணில் தட்டுப்பட்டாலும் வாசிக்கத் தவறுவதில்லை. இந்தக் கட்டுரையை முன்பொரு தடவை வாசித்ததாகவும் நினைவு. இம்முறை ஆழ்ந்து வாசித்தேன். இவ்விதம் வாசிக்கையில் சு.ரா அவர்களின் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:

  "....கடன்காரர்கள் அவன் கழுத்தில்  சுருக்கைப் போட்டு இழுக்கின்றார்கள்.  துன்பத்திலும், வறுமையிலும் ,தனிமையிலும் உழல்கிறான்.  அப்போது அவன் எழுதத்தொடங்கிய  நாவல்தான் 'குற்றமும் தண்டனையும்'

இதனை வாசித்தபோது சு.ரா எவ்விதம் இவ்விதமானதொரு வரலாற்றுத் தவறினை விட்டிருக்க முடியும் என்னும் சிந்தனை ஓடிற்று. காலச்சுவடு பதிப்பகம் மிகவும் அவதானமாகப் பிழை, திருத்தம் செய்பவர்கள் என்ற கருத்தொன்றும் நிலவுகின்றது. இது முக்கியமான வரலாற்றுத் தவறு.

ஃபியதோர் தத்தயேவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று குற்றமும் தண்டனையும்' . நான் வாசித்த அவரது முதற் படைப்பும் இதுதான். புனித பீட்டர்ஸ்பேக் நகரத்தின் சமூக,அரசியல் மற்றும் பொருளியற் சூழல் எவ்விதமான பாதிப்புகளை ஒரு மனிதர் மேல் ஏற்படுத்துகின்றன என்பதையும் அதன் விளைவுகளையும், அதனாலேற்பட்ட ஞானத்தின் விளைவாக அம்மனிதனிடத்தில் ஏற்படுத்தும் மானுட இருப்பின் பிரச்சினைகள் பற்றிய கேள்விகளும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விபரிக்கும் நாவல் நகரத்து வாழ்க்கையின் தன்மையினையும் தோலுரித்துக் காட்டுகின்றது.

இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி நிதி நெருக்கடியில் இருந்தார். இந்நாவல் 'தி ருஷ்யன் மெசஞ்சர்' இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்றது. உண்மையில் இந்நாவலின் வெற்றி  ஒருவகையில் அவரது நிதி நிலைமையைச் சீராக்கவே உதவியது எனலாம். ஆனால் இந்நாவல் அவருக்கு ஏற்பட்ட சூதாட்டக் கடன்களைத் தீர்ப்பதற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. அவ்விதம் எழுதப்பட்ட நாவல் 'சூதாடி' (The Gambler) சூதாட்டத்தை மையமாக வைத்து, அவரது சூதாட்டக் குணவியல்பினால் ஏற்பட்ட  கடனை அடைக்க எழுதப்பட்ட நாவலே 'சூதாடி'யே தவிர சு.ரா. கூறுவது போல் 'குற்றமும் தண்டனையும் அல்ல'.

இந்நாவலைக் குறுகிய காலத்தில் எழுத வேண்டுயிருந்ததால் அவருக்கு உறுதுணையாகப் பணிக்கு வந்த ,அவரை விட இருபது வயது குறைவான  இளம்பெண்ணே அன்னா கிரிகோரியேவ்னா ஸ்னிட்கினா ( Anna Grigoryevna Snitkina). இவர் பின்னர் தத்தயேவ்ஸ்கியை மணந்தார். தத்தயேவ்ஸ்கியின்  வாழ்க்கை பொருளாதாரரீதியில் சிறக்கவும், எழுத்துக்களை வெளியிடவும் முக்கிய பங்காற்றினார் என்பர் வரலாற்றாய்வாளர்கள். கூடவே தத்தயேவ்ஸ்கியின் காதல் மனைவியாகவும் விளங்கினார் என்றும் விபரிப்பார்கள்.



No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்