Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -


அண்மையில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டில் வெளியான கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' நூலுக்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுதிய விமர்சனக் குறிப்பு. உடல் நிலை காரணமாக அவரால் அன்று அந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை. அதுவரை எழுதி வைத்திருந்த குறிப்பினை அனுப்பியிருந்தார். அதனை நிகழ்வில் தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார். - வ.ந.கிரிதரன் -

ஒரு நகரத்து மனிதனின் பாடல் என்பது தான் இவர் இந்தத் தொகுதிக்கு வைத்த பெயர். ஆனால் எப்படியோ அது ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (உண்மையில் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் பெயரில்தான் எழுதியிருந்தேன். காரணம் இக்கவிதை நகரமயமாதலால் ஏற்படும் சூழற் பாதுகாப்பு பற்றிய ஒருவனின் புலம்பல் என்பதால். - வ.ந.கிரிதரன் -)

இது இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. முதல் தொகுதி எழுக அதிமானுடா 1992 இல் வெளிவந்திருக்கிறது. அது எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் எழுக அதிமானுடா என்பது எனக்கு பேர்ணாட் ஷா வின் மான் அன்ட் சுப்பர்மான் என்ற நாடகத்தையும் கடவுள் இறந்து விட்டார் என்று கூறிய பிரெடிரெக் நீட்ஷேயின் அதிமானிடனையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவை டாவினின் உயிர் பரிணாம வளர்ச்சியில் நிகழும் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் இருக்கலாம். அரவிந்தரின் பேரறிவு நிலையாகவும் இருக்கலாம்.இவரின் இக்கவிதைத் தொகுப்பு முன்னுரையிலும் சரி, கவிதைகளிலும் சரி அவர் இருப்பைப் பற்றியே எக்சிரென்சஸ் பற்றியே அதிகம் பேசுகிறார். அதுவே அவர் தேடலாகவும் இருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில் ஏறக்குறைய அத்தனையுமே இருப்பைப் பற்றிய தேடலாகத் தான் இருக்கிறது. எனக்கு வாசிக்கக் கிடைத்த மற்ற நூல்களான அமெரிக்கா,  கட்டடக் காட்டு முயல்கள், குடிவரவாளன் ஆகியவை வித்தியாசமானவை. ஆனால் நவீன விக்கிரமாதித்தன் என்ற நாவலும் இருப்பைப் பற்றிய தேடலையே ஏதோ ஒருவகையில் அலசுகிறது. இவர் சொல்லும் இருப்பு வேறு இருத்தலியல் பிரச்சினை வேறு  என்று தான் நினைக்கிறேன். இருப்புப் பற்றிய இவர் கவிதைகள் மெற்றாபிசிக்ஸ் என்ற மெய்யியல் வகையைச் சார்ந்தது. அது ஒன்ரோலொஜி என்ற வேறு ஒரு மெய்யியல் பிரிவுக்கு எடுத்துச் செல்கிறது.

கிரிதரனின் கவிதைகளை மெற்றாபிசிக்கல் கவிதை வகைமையைச் சார்ந்தவை என்று வகைப்படுத்தலாம் என்று தான் முதலில் நான் எண்ணி இருந்தேன். ஆங்கில கவிதை இலக்கிய வரலாற்றில் 17 நூற்றாண்டில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் இந்த வகையான கவிஞர்கள் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களை முதலில் ஜோன் ட்ரைடனும் ஜோன்சனும் பின்னர் ரி எஸ் எலியற்றும் அப்படி வகைப்படுத்தினார்கள். அவர்கள் முரண்கள், உருவகங்கள், படிமங்கள், மெய்யியல் போன்றவற்றை தங்கள் கவிதையில் எடுத்தாண்டார்கள். அவர்களில் ஜோன் டன் என்பவர் மிகவும் பிரசித்த பெற்றவர். அவரின் பின், ஜோர்ஜ் ஹேர்பெட், அண்றூ மாவெல் போன்றோர்கள் இருந்தன. அவர்கள் பேச்சுமொழியை கவிதைகளில் கையாண்டார்கள். எதிர்பார்க்காத படிமங்கள், உவமைகள், முதலானவற்றைக் கையாண்டார்கள். யாப்பைக் கூடத் தளர்த்தி எழுதினார்கள்.

உதாரணமாக, ஜோன் டன்னின்

Death, be not proud, though some have called thee
Mighty and dreadful, for thou are not so; …
And death shall be no more; Death, thou shalt die

The Flea  என்ற கவிதையில் தன் காதலியை படுக்கைக்கு அழைக்கிறார். காலம் குறுகியது அதை நாங்கள் வீணடிக்கக் கூடாது என்று பலவகையில் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

இவர் எடுத்துக் கொண்டு மெற்றாபிசிக்கலை மீவியற்பியல் என்றும் பௌதீக அதீதவியல் என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்களாம். மெய்யியலில் அது ஒரு கிளையாகவும் உள்ளது. அது இருப்பு (being) என்றால் என்ன, உலகம் என்பதன் பொருள் என்ன? போன்ற அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றிற்கான விடை தேடும் அறிவியல் துறையைத் சார்ந்தது அது. அதை ஆரம்பத்தில் மெய்யியலாளர்கள் தேடினார்கள். பின் அறிவியலாளர்கள் தேடினார்கள்.

"இருப்பது" என்ன

அது இருக்கும் விதம் என்ன?

கிரிதரனின் காலவெளி மீறிய கவிஞன் என்ற தலைப்பில் உள்ள கவிதை அப்படியானது. முதலில் காலவெளி மீறிய ஒருவர் இருக்க முடியுமா?

அவர் இருப்பு சார்ந்த கேள்விக்கான பதிலாக கவிதைகளை சமகால அறிவியலைத் துணைக்கு அழைத்து எழுதுகிறார்;. இந்த கவிதை நூலில் பல கவிதைகள் அப்படியானவை. அவற்றை விட வேறு கவிதைகள் இல்லை என்பதல்ல அதன் கருத்து. அதைத் தான் செய்கிறார். உதாரணமாக, அவர் மொழிபெயர்த்த இரண்டு ஆங்கிலக் கவிஞர்களான பைரனும் ஷெல்லியும் இருவருமே றோமான்ரிக் கவிஞர்கள். பாரதிக்குப் பிடித்த கவிகள்.

என் இயற்பியல் விஞ்ஞான அறிவு பத்தாம் வகுப்புடன் நின்று விட்டது. அதனால் அவர் கூறும் இயற்பியல் கோட்பாடுகளான இவர் மேலே போய் பிளாங், ஐன்ஸ்ரைன் சொன்ன

‘நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைக்காட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
அதிமானுடத்தின்னொளிதனையே
ஆட நான் முந்திட மாட்டேனா என்ன, பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைபடமெனவே’

என்றும்

'ஒளி வேகத்தில் செல்வதென்றால் இக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெல்லாம் பூச்சியமே'

என்கிறார்.  அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பேசும் குவாண்டம் இயற்பியல், ஐன்ஸ்ரைனின் சார்புக்கோட்பாடு ஆகியவற்றை வைத்து அவர் இருப்புப் பற்றி ஆராயும் அல்லது நோக்கும் பார்வை கவிதையில் புது முயற்சி என்று நினைக்கிறேன்.

இன்னொரு கவிதையில்


அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கிறதடி நம் காலவெளி
கூம்புக்காலவெளியில் நாம் கும்மாளமடிக்கின்றோமடி
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்

....

நீ அலையா கண்ணம்மா!
நீ துகளா கண்ணம்மா!
நீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ!
நீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ!

இப்படிப் போகின்றது கவிதை.

‘சூன்யத்தைத் துளைத்து வருமொளிக்கதிர்கள்
நோக்குங்கள்! நோக்குங்கள்!  நோக்கம்தான்
அஞ்சுதல்ல கதிர்கள் அட
அண்டத்தை யார்க்கும் அஞ்சுவமோ
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம், வருகின்றோம், வருவோம்
காலப் பரிமாணங்கள் வெளியினிலே
காவியே வந்தோம்
சூன்யங்கள் கண்டு சிறிதேனும்
துவண்டு போனோமோ?

காலவெளிக் கைதிகளே நாம் என்றும் நாமறியா காலவெளி அது என்றும் பல இடங்களில் சொல்லுகின்றார்.

E = MC2 போன்று எல்லாம் பேசுகிறார். நீங்கள் வாசித்து அவருடன் கவிதையில் அளாவளலாம்.

காலவெளி மீறிய கவிஞன் என்ற தலைப்பில் உள்ள கவிதை அப்படியானது.  முதலில் காலவெளி மீறிய ஒருவர் இருக்க முடியுமா? ஆனால் கவிஞன் கற்பனை உள்ளவன். அவனால் இருக்க முடியும். அதுவும் இவர் ஒரு விஞ்ஞானம் படித்தவர். அவர் சொல்வதை நாம் கேட்கத்தான் வேண்டும்.

நேற்று இன்று நாளை என்று ஒரு திசைப் பயணத்தில் மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின் அறிவுணர்வுக்கு அது இல்லை. காலத்தின் அர்த்தமற்றதொரு அறிவுணர்வுக்கு உண்டு.

குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சமகாலத்தில்
இருப்பன. அறிவாயா?
காலம் காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ..
என் அறிவுணர்வு கொண்டு
என்னால் பயணிக்க முடியும்
காலவெளி சட்டங்களைக் காவிச் செல்லும்
காலவெளிப் பிரபஞ்சத்தில்
காலவெளி மீறிப் பயணிக்க என்னால்
முடியும்

நவீன விக்கிரமாதித்தன் என்ற கவிதையில்

வெளியும் கதியும் ஈர்ப்பும்
உன்னை உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில் ..
உன் சுயாதீன இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?
இடம் வலம் மேல் கீழ்
இருதிசை நோக்கு கொண்ட
புரிமாணங்களில்
நீ
ஒரு திசையினைத்தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
..
உன் புதிரவிழ்;த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?
இரவி இச்சுடர் இவையெல்லாம்
ஓய்வாயிருத்தலுண்டோ?

பாரதிக்கொரு கண்ணம்மா இவருக்கும் ஒரு கண்ணம்மா. தன் எண்ணங்ளைப் பகிர்ந்து கொள்வதற்குரிய ஒரு கற்பனைக் கன்னி. ஆனை பார்த்தவர் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அது என்னைப் போன்ற அந்தகர்களுக்கானது என்று எண்ணுகிறேன்.

இவருடைய எல்லாக் கவிதைகளுமே மீமெய்யில் கவிதைகள் அல்ல.

உதாரணத்திற்கு

ஆசை

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின் வழக்கமாகும்
கருமைகளில் வெளிகளிலே
கண்சிமிட்டும் சுடர்ப்பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தாகிக் கிடந்திடுவேன்..
இயற்கையில் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்டமாகும.

mahalingam3@hotmail.com


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்