Saturday, December 23, 2023

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக..


நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர் வாளின் நிழலில்' முக்கியமானதோர் ஆவணம். அது வெளிவரக் காரணமாக இருந்தவர் ஜெயன்.  அத்துடன் தமிழினியின்  'போர்க்காலம்' (கவிதைத்தொகுப்பு)  நூலையும் வெளியிட்டார்.  இந்நூல்களின் வெளியீடுகளை ஜெயன் தேவாவின் (மகாதேவா ஜெயக்குமரன்) முக்கியமான சமூக, அரசியற் பங்களிப்புகளாக நான் கருதுவேன்.

என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாதவர். வாழ்க்கையின் சுழல்களுக்குள் சிக்கி அலைக்கழிந்தபோதும் தன்னால் முடிந்த வரையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டவர்.

தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', 'போர்க்காலம்' இவை தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கப்போகும் படைப்புகள். அவற்றை வெளியிட்டதன்மூலம் ஜெயக்குமரனின் பங்களிப்பும் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படும்.



********************************************************************************
 'பதிவுகள் ' இணைய இதழில் 'மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில்  ஜெயன் மஹாதேவன் எழுதிய கட்டுரை!

மற்றொரு செப்ரெம்பரும், ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும்!  சல்வடோர் அயெண்டே (1908-2008)!   - ஜெயன் மஹாதேவன் -


இலத்தின் அமெரிக்க கண்டத்தின் மக்கள் கூட்டம் பல தலைமுறைகளாக காலணியாதிக்கத்தின் அடக்கு முறையின் கீழ் அனுபவித்த அவலங்களைக் கண்டு பொங்கியெழுந்த புரட்சியாளர்கள் பலர். இவர்களுள் எனர்ஸ்டோ சே குவேரா போன்று தமது மக்களுடைய அவலநிலையைக் கண்டு மனம் பொறுக்காமல் அவர்களுடைய நன்மைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட தலைவர்களில் ஒருவர் சிலி நாட்டின் ஜனாதிபதி சல்வடோர் அயென்டே, தமது மக்களின் நன்மைக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதனது ஆதரவாளர்களான சுதேசியப் பெருமுதலாளிகளையும் பகைத்துக் கொண்டதால், 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி சிலியின் இராணுவ ஜெனரல்களால் கொலை செய்யப்பட்டார்.


ஜனாதிபதிக்கான தேர்தலில் 1970 இல் போட்டியிட்டபோது அயென்டே தான் ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, உலகிலேயே வாக்குச்சீட்டின் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த முதலாவது மார்க்ஸிய அரசுத் தலைவராக அயென்டே புதிய வரலாற்றை உருவாக்கினார்.

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் இருந்த நாடுகளுக்கும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் அயென்டேயின் வெற்றி ஏகாதிபத்தியத்துக்கெதிரான ஏழை மக்களின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு பெரும் ஆதர்சமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரம் எதுவுமற்;ற சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறிய முன்னேற்றம்கூட, அவர்கள் வாழும் சமூக அமைப்பில் ஏற்படக்கூடிய தீவிரமான மாற்றத்தின் மூலமே சாத்தியமாகுமெனில், அத்தகைய ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில், சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட வழிகளில் ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என்பதை அயென்டேயின் வெற்றி உலகத்திற்கு உணர்த்தியது. ஒரு மாக்ஸிஸ்ட்டை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டத ன் மூலம் சிலி, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

1908 ல் உயர் குடும்பத்தில் பிறந்த அயென்டே, தனது இருபத்தைந்தாவது வயதில் ஏனைய அரசியல் தோழர்களுடன் சேர்ந்து சிலியின் சோசலிசக் கட்சியை நிறுவினார். பாராளுமன்றம் முதலான ஜனநாயக அமைப்புகளின் மூலமாக, சோசலிசச அடிப்படையில் அமைந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அயென்டே உறுதியாக நம்பினார். வன்முறையை அடிப்படையாகக் கொண்ட புரட்சியின் மூலம் சோசலிசத்தை உருவாக்குவது, நூற்றைம்பது வருடங்களுக்கு மேலான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட சிலிக்கு பொருத்தமானதல்ல என அவர் கருதினார். சோசலிசத்திற்கான சிலியின் பாதையை நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். சிலியின் உழைக்கும் ஏழை மக்களுடைய நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அயென்டே, தனது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், சொந்த நலன்களுக்காக, ஏழைகளின் வாழ்க்கையைப் பேரம்பேசி விட்டுக் கொடுக்காத தலைவராக இறுதிவரை வாழ்ந்தார்.

மக்களால் சுருள்முடித் தோழர் என அன்புடன் அழைக்கப்பட்ட அயென்டே நவம்பர் 1970 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மக்களுக்கான நாற்பது அம்சத் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு சிலியக் குழந்தைக்கும் ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்குவது அவற்றுள் மிக முக்கியமானது. பல தலைமுறைகளாக வறுமையின் பிடியில் போசாக்கின்மையால் வாடிய ஏழை மக்களுக்கு இத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. 1970ம் ஆண்டளவில் சிலி போன்றதொரு ஏழை நாடு மேற்கொண்ட இத்திட்டம் உலகிலேயே ஒரு முற்போக்கான சமூக அபிவிருத்தித் திடடமாகக் கருதப்பட்டது.

சிலியின் பிரதான ஏற்றுமதிப் பண்டமான செம்பு தோண்டியெடுக்கப்பட்ட சுரங்கங்கள் அனைத்தும் அமெரிக்கக் கம்பனிகளின் ஏகபோக உடமைகளாக இருந்தன. நாட்டின் பிரதான கனிம வளத்தினால் கிடைக்கும் வருமானம், நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் அமெரிக்காவின் வங்கிக் கணக்குகளில் போய்ச் சேர்வதை உணர்ந்த அயென்டே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன், செம்புச் சுரங்கங்கள் அனைத்தையும் உடனடியாகத் தேசத்தின் உடமையாகப் பிரகடனம் செய்தார். இதற்காக அமெரிக்க கம்பனிகளுக்கு எவ்வித நஷ்டஈடும் தரமுடியாது என்றும் அவர் அறிவித்தார்.

அத்தோடு மட்டுமன்றி, பெரும் தனவந்தர்களின் பாரிய பண்ணை நிலங்களை அப்பண்ணைகளில் உழைக்கும் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கத் தொடங்கினார். நில உடமை வங்கித்துறை, கைத்தொழில்துறை ஆகியவற்றில் ஏழைத் தொழிளாளர்களுக்குச் சார்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயலாக்கினார். சிலியின் தேசிய வருமானம் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் முதலாளிகளின் கைகளில் போய்ச் சேராமல், பெரும்பான்மை ஏழைகளுக்கும் சென்றடைவதை தொடர்ந்து உறுதிப்படுத்தும் திட்டங்களை உருவாக்கினார்.

அயென்டே தேர்தலில் வெற்றி பெறாமல் தடுக் கவேண்டுமென ஜனாதிபதி நிக்ஸன் கட்டளையை ஏற்று சி ஐ ஏ கடமையில் இறங்கியது. பல மில்லியன் டாலர் பணம் அயென்டேக்கு எதிரான பிரச்சாரத்திற்காக சி ஐ ஏ னால் வாரியிறைக்கப்பட்டது. அயென்டே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்குத் தொல்லை கொடுக்கும் விதமாக சிலியின் பொருளாதாரம் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இவற்றையும் மீறி அயென்டே வெற்றி பெற்ற போது சி ஐ ஏ இன் கட்டளைப்படி பொருளாதார நிலை மேலும் மோசமாக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் விநியோகத்தைச் சீர்குலையச் செய்யும் நோக்குடன் லொறி உரிமையாளர்களது வேலை நிறுத்தம் முடுக்கி விடப்பட்டது. இரயில்வே தண்டவாளங்கள் குண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் விலைக்கு வாங்கப்பட்டு அயென்டேயின் திட்டங்களுக்கு எதிரான கருத்துக்களும் வதந்திகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. சிலியின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென உயர் மற்றும் மத்தியதர புத்திஐவிகள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு நாட்டு மக்கள் பொறுப்பற்ற முறையில் கொம்யுனிசத்திற்கு ஆதரவாக தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதை நாம் வெறுமனே கைகட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி நிக்ஸனின் வெளிநாட்டுக் கொள்கை ஆலொசகர் ஹென்றி கிஸிங்கர் அயென்டேயின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்தார். சி ஐ ஏ இன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இராணுவசதி

சி ஐ ஏ இன் தூண்டுதலின் பேரில் செம்ரெம்பர் 11, 1973 அன்று ஜெனரல் அகஸ்டோ பினோச்சே தலைமையில் இராணுவச் சதியின் மூலம் ஜனாதிபதி சல்வடோர் அயென்டே பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ஜனாதிபதி அயென்டேயினால் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இருவாரங்களுக்குள் ஜெனரல் பினோச்சே இராணுவச்சதியை மேற்கொண்டாhர். ஜெனரல் பினோச்சே அ ரசியல் யாப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்ப்பதற்கான சதியில் ஈடுபடமாட்டார் என அயென்டே மிக உறுதியாக நம்பியிருந்தார். ஆனால் சி ஐ ஏ இன் கட்டளைப்படி பினோச்சே ஏனைய ஜெனரல்களுடன் சேர்ந்து சதியை மேற்கொண்டார். சதி நடந்து கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி அயென்டே நாட்டு மக்களுக்கு ஆற்றிய வானொலி உரை மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அவ்வுரையில், சிலி நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பேணப்பட்டு வந்த ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றுமாறு சிலியின் மக்களை அவர் வேண்டிக் கொண்டார். தனது உயிரைக் கொடுத்தேனும் சிலியின் ஜனநாயகம் தோற்கடிக்கப்படுவதை தடுப்பேன் என அவர் சூளுரைத்தார். இராணுவ சதியின்போது அயென்டே, பிடல் காஸ்ட்ரோ அன்பளிப்பாக வழங்கிய ஏ கே 47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக இராணுவத்;தினரால் கதை கட்டிவிடப்பட்ட போதிலும் அவர் உண்மையில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற உண்மை பின்னர் வெளிவந்தது.

அயென்டேயின் கொலையுடன் சிலியின் ஒரு நூற்றாண்டுக்;கு மேற்பட்ட ஜனநாயக விழுமியங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஜக்கிய அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன், நவீன வரலாற்றின் மிகப்பெரும் இராணுவ கொடுங்கோன்மை அடக்குமுறை சிலியில் அரங்கேறியது.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிலியக் கவிஞர் பாப்லோ நெரூதா அயென்டேயின் மரணம் குறித்துக் கேள்வியுற்றவுடன் மிகவும் மனமுடைந்தார். தனது நெருங்கிய நண்பரின் உயிரற்ற உடலை அவர் மரணம் அழிக்கமுடியாத மனித உடல் என வருணித்தார்.

அயென்டேயின் மரணமும், சிலியின் ஜனநாயகத்திற்கேற்பட்ட அவல நிலையும் நெரூதாவை நோய்ப் படுக்கையில் வீழ்த்தின. அயென்டே கொலை செய்யப்பட்ட பின்பு நெரூதா பன்னிரண்டு நாட்களே உயிருடனிருந்தார். நெரூதாவின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது அயென்டேயின் கொலைக்கெதிரான மக்ளுடைய மாபெரும் கண்டன ஊர்வலமாகவும், இராணுவ ஆட்சிக்கெதிரான முதலாவது எதிர்ப்பு ஊர்வலமாகவும் அமைந்தது.

jkm15@hotmail.co.uk

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்