Tuesday, December 12, 2023

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)


மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம்  டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன்.

1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.  குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.
2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.
3. மானுட  இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.
4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.
5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.
6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்
7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.
8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்
9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்

இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.

பாரதியாரின் எழுத்துகள் என்னைக்கவர்ந்ததற்கு இவற்றுடன் அவ்வெழுத்துகளில் பாரதியார் கையாண்ட மொழியும் முக்கிய காரணம். எளிமையான, உயிர்த்துடிப்பு மிக்க, கூறப்படும் பொருள் பற்றிய உணர்வினைத்தூண்டிவிடும்படியான அவரது தெளிந்த நீரோடை போன்று கூறப்படும் பொருளைத் தெளிவாக விளக்கும் தன்மை மிக்க மொழி என்னை மிகவும் கவர்ந்தது. தமிழில் வெளியாகும் இலக்கிய சஞ்சிகைகள் பலவற்றைப் பார்த்தால் பாரதியாரின் கவிதை வரிகளே அவற்றில் பலவற்றின் தாரக மந்திரங்களாக இருப்பதைக் காணலாம்.இது அவரது கருத்துச் செறிந்த மொழி நடைக்கு முக்கிய உதாரணங்களிலொன்று.

அவரது கவிதைகளில் வெளிப்படும் சமூக அரசியல் கருத்துகள் என்னை மிகவும்  கவர்ந்தவை. அவர் வாழ்ந்த காலத்தில் வைத்து அவரது கருத்துகளை ஒப்பிடுகையில்தான் அவரது மேதமை நன்கு அறியப்படும். பெண் கல்வி , பெண் விடுதலை, தேசிய விடுதலை, மானுட வர்க்க விடுதலை என்று சிந்தித்த, எழுதிய அவர் ஒரு செயல் வீரரும் கூடத்தான். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்தான்.

அவரது எழுத்துகளைப்போல் அவரது ஆளுமையும் என்னை மிகவும் கவர்ந்தது. தன் வாழ்க்கையைபற்றி, தன் இதயத்து உணர்வுகளைப் பற்றியெல்லாம் அவர் எழுத்துகளூடு தன் எண்ணங்களை  எம்முடன் பகிர்ந்துள்ளார். அவரது அவ்வுளவியற்போக்கும்  என்னை மிகவும் கவர்ந்தது.

டிசம்பர்  11 பாரதியாரின் பிறந்த  தினம் அவர் நினைவாக எனது இந்தப்பதிவும் அமைகின்றது.  அவர் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=N1teGprruws

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

2. எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்!

நீண்ட நாட்களாக நனவிடை தோய்தல் எஸ்.பொ. அவர்கள் உருவாக்கிய சொல்லென்று எண்ணியிருந்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அது மகாகவி பாரதியார் தன் சுயசரிதையில் பாவித்த சொல்லென்று.  தனது சுயசரிதையில் தனது பிள்ளைக்காதல் பற்றிக் கூறுகையில் 'அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலி லெவ்வணஞ் சொல்லுகேன்? சொன்ன தீங்கன வங்கு துயிலிடைத் தோய்ந்த தன்று, நனவிடை தோய்ந்ததால்..' என்று மகாகவி பாரதியார் அச்சொல்லை ஏற்கனவே பாவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை வைத்து எத்தனை எழுத்தாளர்கள் புனைகதைகளை, அபுனைவுகளை எழுதியிருக்கின்றார்கள். 'தீக்குள் விரலை வைத்தால்' (கே.எஸ்.ஆனந்தன்), 'பேசும் பொற் சித்திரமே', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' (சேவற்கொடியோன்), 'தீராத விளையாட்டு' (கு.அழகிரிசாமி), 'வெந்து தணிந்தது காடு' (இந்திரா பார்த்தசாரதி), 'மண்ணில் தெரியுது வானம்' (ந.சிதம்பர சுப்பிரமணியன்) .. இவ்விதம் பலர் தம் நாவல்களுக்கு பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்புகளாக்கியுள்ளார்கள்.  அவ்வகையில் எஸ்.பொ. அவர்கள் தன் அபுனைவு நூலுக்கு 'நனவிடை தோய்தல்' என்னும் பெயரை வைத்துள்ளார்


3. என்னை ஆட்கொண்ட மகாகவி!  


தமிழ் இலக்கிய உலகில் என்னை ஆட்கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இவருடனான தொடர்பு ஏற்பட்டபோது எனக்குப் பதினொரு வயது. அப்பா வாங்கித் தந்திருந்த மகாகவி பாரதியார் கவிதைகள் நூலின் மூலம் அத்தொடர்பு ஆரம்பமானது. இன்று வரை அது நீடிக்கின்றது. நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் மேசையில் பாரதியாரின் கவிதைத் தொகுப்புமிருக்கும். அவ்வப்போது தொகுப்பைப் பிரித்து ஏதாவதொரு அவரது கவிதையை வாசிப்பது என் வழக்கம். இன்று அந்த மகத்தான மனிதரின் பிறந்தநாள்.

எப்பொழுதுமே நான் பாரதியாரை நினைத்து வியப்பதுண்டு. குறுகிய அவரது வாழ்வில் அவர் சாதித்தவைதாம் எத்தனையெத்தனை!

அவரது கவிதை வரிகள் மானுடரின் குழந்தைப்பருவத்திலிருந்து  முதிய பருவம் வரையில் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவை. குழந்தைகளுக்கு அவரது வரிகள் இன்பமளிப்பவை. இளம் பருவத்தினருக்கு அவரது கவிதைகள் வடிகால்களாக இருப்பவை. சமுதாயச் சீர்கேடுகளுக்கெதிராக, அந்நிய ஆதிக்கத்துக்கெதிராகப் போராடுபவர்களுக்கு அவரது கவிதைகள் உத்வேகமளிப்பவை. தத்துவ விசாரங்களில் மூழ்கி மானுட இருப்புப் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு அவரது கவிதைகள் தெளிவையும், தேடல் மீதான ஆர்வத்தை மேலும் தொடர்வதற்கு ஊக்கமளிப்பவை. இயற்கையைச் , சூழலை , சக உயிர்களை நேசிப்பவர்களுக்கு அவரது கவிதைகள் மகிழ்ச்சியைத் தருபவை.

அவரது கவிதை வரிகள் பல மனத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை. இதுவரை வெளியான தமிழ்ச் சஞ்சிகைகள் பலவற்றின் தாரக மந்திரமாக இருப்பவை  அவரது கவிதை வரிகள். திரைப்படங்கள், கலை நிகழ்வுகள், மெல்லிசை, கர்நாடக  இசைக்கச்சேரிகள் பலவற்றில் அதிகம் பாடப்பட்டவை அவரது வரிகளாகக்த்தானிருக்க முடியும்.

குறை , நிறைகளோடு அவரது எண்ணங்களை, அவரது வாழ்வு அனுபவங்களை, இருப்பு பற்றிய அவரது  தேடலினை அவரது எழுத்துகளில் நாம் தரிசிக்கலாம். தான் வாழ்ந்த சூழலை மீறிச்சிந்தித்த மாமனிதர் அவர். அதனால்தான் அவரால் அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயத்திலிருந்து தளைகள் நீங்கிய சமத்துவ சமுதாயத்தைப்பற்றி எண்ணி ஆடிப்பாடிட முடிந்தது. வீட்டுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களை விடுதலைபெற்ற பெண்களாக, பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களாக எண்ணி ஊக்குவிக்க, வாழ்த்திட முடிந்தது. எல்லைகளைக் கடந்து துன்பத்தில் உழன்று கிடந்த சக மானுடர்களைப்பற்றி, சக உயிர்களைப்பற்றி, அவர்கள்தம் , அவற்றின் துயரங்களைப்பற்றிப் பாடிட  முடிந்தது; பகிர்ந்திட முடிந்தது.

ஊடக வியலாளராக, தேசிய , வர்க்க விடுதலைப் போராளியாக, கவிஞராக, கதாசிரியராக, பெண்ணுரிமைவாதியாக, இருப்பு பற்றிய தேடல் மிகுந்த தத்துவவாதியாக, இயற்கையை நேசிப்பவராக, பத்திரிகையாசிரியராகத் தன் எழுத்துகள் மூலம், வாழ்க்கை மூலம் என்னைக் கவர்ந்த , பாதித்த மகாகவி பாரதியாரின் எழுத்துகள், அவர் பற்றிய சிந்தனைகள் என்   இருப்பு உள்ளவரை எனக்கிருக்கும். அவை என்னை எப்பொழுதுமே வழி நடத்திச் செல்லும். சோர்ந்திருக்கும் தருணங்களில் அவை எனக்குப் புத்துணர்ச்சியூட்டித் தென்புற வைக்கும்.

அவர் நினைவாக ஒரு பாடல்:

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று.

4. இன்று புதிதாய்ப் பிறந்தோம்

"இன்னுமொரு முறைசொல்வேன் பேதை நெஞ்சே,
எதற்குமினி யுளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோமில்லை;
முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை." - பாரதியார்.

" சென்றதினி மீளாது மூடரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்றுபுதி தாய்ப்பிறந்தோ மென்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்!
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா." - பாரதியார்-

இருப்பு அற்புதமானது. கிடைத்த இருப்பினை இருக்கும்வரையில் இன்புற்றுக் கழிப்பதே மேல். மனம் சலித்துப்போகும் தருணங்களில் மேலுள்ள பாரதியாரின் வரிகளை நினைவு கூருங்கள். இன்று புதிதாய்ப்பிறந்ததாக எண்ணிக் களிப்புறுங்கள். கவலையெலாம் ஒளிந்துபோகும். திரும்பி வாரா.

சமூக, அரசியற் & பொருளியற் பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். எதிர்கொண்டபடியே இன்புற்று வாழுங்கள்.  அவற்றின் தாக்கங்களால் மனமொடிந்து உளத்தளர்ச்சி அடைந்து விடாதீர்கள். மன அழுத்தங்களுக்கு உள்ளாகிவிடாதீர்கள். இருப்பிற்கு முன்னால் அனைத்துப் பிரச்சினைகளுமே அற்பமென்றுணருங்கள்.  இருக்கும் வரை இன்றுபுற்று வாழுங்கள்.  இன்புற்று வாழுங்கள்.

எந்தப்பிரச்சினைகளையும் இருப்புள்ளவரையில் எதிர்கொள்ளலாம். ஆனால் இருப்பைச் சிதைத்து விட்டால் அவ்விதம் வாழ முடிவதற்கான சாத்தியங்களுண்டா? இல்லையல்லவா.  அதனால்தான் கூறுகின்றேன்: "இருக்கும் வரை இன்றுபுற்று வாழுங்கள்.  இன்புற்று வாழுங்கள். "

5. பாரதியை நினைவு கூர்வோம்!

என் அபிமானக் கவிஞர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இதற்கு முக்கிய காரணங்களாக அவரது கவிதைகளில் விரவிக்கிடக்கும் இருப்பு பற்றிய தேடல், சிந்தனைத்  தெளிவு, சமூக, அரசியற் பிரக்ஞை, தீர்க்கதரிசனம், பூவுலக உயிர்கள் மீதான கருணை, இயற்கை  மீதான நாட்டம் , பெண் விடுதலைச் சிந்தனைகள், சமூக அவலங்களுக்கெகிரான அறை கூவல்; என்று பலவற்றைக் கூறலாம். 


பாரதியுடனான என் தொடர்பு என் பால்ய பருவத்தில் என் அப்பா பாரதியார் கவிதைத்தொகுதியொன்றினை வாங்கித்தந்ததுடன் ஆரம்பமாகியது. அக்காலகட்டத்தில் தமிழில் வெளியான பல வெகுசன இதழ்களை வாங்கிக்குவித்த அப்பா பாரதியார் கவிதைகள், இராஜாஜியின் 'வியாசர் விருந்து', 'சக்கரவர்த்தித் திருமகன்' , புலியூர்க் கேசிகனின் உரைகளுடன் வெளியான சங்ககால நூல்கள் எனப் பலவற்றையும் வாங்கித் தந்திருந்தார். அக்காலந்தொடக்கம் பாரதியின் கவிதைகள் என்னை ஆட்கொள்ளத்தொடங்கின.  இன்றுவரை அவ்வாதிக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.

பாரதியின் கவிதைகளின் முக்கிய சிறப்புகளிலொன்று மானுடப் பருவங்கள் அனைத்துக்கும் பொருந்தும் வகையில் அவை அமைந்திருப்பதுதான். . இதுவரைக் கால என் வாழ்வின் பல்வேறு பருவங்களிலும் அவரது பல்வேறு கவிதைகள் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்ந்திருக்கின்றன. பால்யப் பருவத்தில் பிடித்த அவரது கவிதைகள் வேறு. பதின்ம வயதுகளில் பிடித்த கவிதைகள் வேறு. இளமைப்பருவத்தில் பாதித்த கவிதைகள் வேறு. உதாரணத்துக்கு பால்ய பருவத்தில் அவரது 'குடுகுடுப்பைக்காரன்' கவிதை, 'மழை' கவிதை போன்ற கவிதைகள் பிடித்திருந்தன. பதின்ம வயதுகளிலோ 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' போன்ற பாடல்கள் பிடித்திருந்தன. தேசிய விடுதலைக் கவிதைகள் பிடித்திருந்தன. இளமைப்பருவத்தில் 'நீற்பதுவே. நடப்பதுவே' போன்ற தத்துவச் சிறப்பு மிக்க கவிதைகள் பிடித்திருந்தன. அதே சமயம் எப்பருவங்களிலும் வாசிப்பில் இன்பம் தருபவை அவரது கவிதைகள்.

தேசிய விடுதலையைப் பாடிய அவரது கவிதைகள் சமூக  விடுதலையைப் பாடின. மானுட விடுதலையையும் பாடின. இவ்விடயங்களில் அவருக்கிருந்த தெளிவு அவரது படைப்புகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றது.

எனக்குப் பிடித்த பாரதியாரின் கவிதைகளிலொன்று:

சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும்
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
 குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


6.  பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!


மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11.  என்னை மிகவும் பாதித்த இலக்கிய ஆளுமைகளின் முதலிடத்தில்  இருப்பவர் மகாகவி பாரதியார். குறுகிய அவரது வாழ்வு மானுட உலகுக்கு ஒளி தந்ததொரு மின்னலாக அமைந்து விட்டது. என்னை அவரது சிந்தனைத்  தெளிவு மிகவும் கவர்ந்தது. அவரிடம் காணப்படும் முரண்பாடுகள் கூட அவரது தேடலின் விளைவுகளே.

தேசிய விடுதலை, வர்ண விடுதலை, வர்க்க விடுதலை, பெண் விடுதலை. மானுட விடுதலை பற்றி அவருக்கு மிகுந்த தெளிவு இருந்தது. அதனையே அவரது எழுத்துகள்,  வாழ்க்கை ஆகியன புலப்படுத்துகின்றன. வர்ண விடுதலைக்காக ஏனைய விடுதலைகளை அவர் புறக்கணித்து விடவில்லை. வர்ண விடுதலையை , பெண் விடுதலையை வற்புறுத்திய அவர் கூடவே வர்க்க விடுதலையையும் வலியுறுத்தினார். அத்துடன் நிற்கவில்லை மானுட விடுதலையையும் முன் வைத்தார். மானுட விடுதலையை வேண்டிய அவர் அதற்காக ஏனையு விடுதலைகளைப்  புறக்கணித்துப் போரிடாது ஓய்ந்திருக்கவில்லை.  அனைத்து விடுதலைகளுக்காகவும் களத்தில் இறங்கிப் போராடிய சமூக, அரசியற் போராளி அவர். அவரது அந்த ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது.

இவ்விதம் மானுடரின் பல்வகை விடுதலைக்காகவும் குரலெழுப்பின அவரது எழுத்துகள். அத்துடன் நின்று விடவில்லை. மானுடரின் இருப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்பின. நல்லதோர் உதாரணம்  அவரது 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் 'நிற்பதுவே நடப்பதுவே' என்று ஆரம்பமாகும் புகழ்பெற்ற கவிதை.

தமிழ் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பும் மகத்தானது. கவிதை, சிறுகதை, வசனகவிதை , மொழிபெயர்ப்பு என அவரது பன்முகப்பட்ட பங்களிப்பு முக்கியமானது.

அவரது எழுத்துகளின் வீரியமும் முக்கியமானது. வாசிப்போரைத் தட்டி எழுப்புவன அவை. வாசிப்போருக்கு இன்பம் தருபவை அவை.  வாசிப்போரைச் சிந்திக்க வைப்பவை அவை. வாசிப்போருக்கு வழிகாட்டிகளாக இருப்பவை அவை.

எனக்கு மிகவும் பிடித்த இயற்கை நிகழ்வு கொட்டும் இடித்தாளத்துடன் மின்னிப் பெய்யும் மழை. அதனை இரசிப்பதென்றால எனக்கு மிகவும் பிடிக்கும். மழை பற்றிய இரு கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஒன்று கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'சிந்தனையும் மின்னொளியும்' , அடுத்தது மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' .

அ.ந.க.வின் கவிதை இயற்கை நிகழ்வு கவிஞனுக்குக் கற்பிக்கும் பாடத்தைக் கவித்துவத்துடன் வெளிப்படுத்தினால், பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி'யோ இடியுடன் மின்னிப் பெய்யும் மழையைச் சொற்சித்திரமாக்கி உணர்வினை வசியப்படுத்தும்.

பாரதியாரின் 'மழை' கவிதை முழுமையாகக் கீழே:

க்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்


* இங்குள்ள பாரதியார் படம்  ஆனந்தவிகடனில் அவர் பற்றிய  கட்டுரையொன்றில் வெளியானது., நன்றியுடன் இங்கு அதனைப் பாவிக்கின்றேன்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்