Wednesday, April 17, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-


அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!


"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் கூடிய பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.பதிலுக்கு நன்றி கூறியபடி அவள் அவளது அபார்ட்மென்டினுள் நுழைந்தான்.  அது ஒரு படுக்கை அறையைக் கொண்ட அப்பார்ட்மென்ட். அவனுடையதை விடச் சிறிது பெரிதாகவிருந்தது. லிவிங்ரூமில் அவள் ஹோம் ஒபிஸ் உருவாக்கியிருந்தாள். வீட்டிலிருந்து வேலை செய்பவள் போலும்.

அவனை லிவிங் ரூமிலிருந்த சோபாவில் அமரக்கூறிவிட்டு, தேநீர் தயாரிக்கச் சென்றாள் பானுமதி.

"உங்களுக்கு எப்படி தேநீர் தேவை. சுகர் , மில்க் எப்படியிருக்க வேணும்" என்று 'கிச்சினி'லிருந்து கேட்டாள்.

" எனக்கு டபுள் டபுள்" என்றான்.

சிறிது நேரத்திலேயே தேநீருடன் வந்தாள்.  அவனுக்கும், தனக்குமாகத்  தயாரித்துக்கொண்டு வந்திருந்தாள். தேநீரை அருந்தியபடியே உரையாடலும் தொடர்ந்தது.

"நீங்கள் இங்கு ஸ்டுடெண்டாக வந்தனீங்களா?"

"ஆமாம். மூன்று வருடக் காலேஜ் படிப்புக்காக வந்தேன். படிப்பு முடிந்து நிரந்தர் வசிப்பிட உரிமைக்கு விண்ணப்பித்து, இப்பொழுது வேலை பார்க்கிறேன்."

"ஏந்த ஃபீல்டிலை வேலை செய்கிறீர்கள்?"

"ஐடியிலைதான் வேலை பார்க்கிறேன்.  வெப் ஹொஸ்டிங் கம்பனியொன்றில் டெக்னிகல் சப்போர்ட், வெப் அட்மின் ஆக வேலை பார்க்கிறேன். ரிமோட் வேலைதான்."

அப்பொழுதுதான் அவன் அவளது மேசைக்கருகிலிருந்த் புக் ஷெல்ஃபைக் கவனித்தான்.  வானியற்பியல், கலை, இலக்கியம் பற்றிய ஆங்கில , தமிழ் நூல்கள் பல அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்தபோது ஆச்சரிய உணர்வுகள் அவன் முகத்தில் படர்ந்தன.
 
"என்ன அப்படி வியப்பாகப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கும் புத்தகங்கள் பிடிக்குமா?"

அவளது இக்கேள்வி அவனுக்குச் சிரிப்பைத்தந்தது.

"என்ன பிடிக்குமாவா? புத்தகங்கள் எனது உயிர். மூச்சு எல்லாமே"  

இவ்விதம் கூறிய  மாதவன் "நான் புத்தகங்களைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்:

"தாராளமாக" என்றாள்.

அவன் புக் ஷெல்ஃப் அருகில் சென்று அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தான்.  அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தபோது அவன் வியப்பு மேலும் அதிகரித்தது.

அங்கு வானியற்பியல், கலை, இலக்கியம் சம்பந்தமான பல ஆங்கில, தமிழ் நூல்கள் காணப்பட்டன.  ஸ்டீபன் ஹார்கிங் தொடக்கம் மிஷியோ ஹாகு வரை பலரின் வானியற்பியல் சம்பந்தமான ஆங்கில நூல்கள் அங்கிருந்தன.

"வாவ். உண்மையிலேயே நீங்கள் ஆழமான ரீடர்தான். இவற்றைப் போன்ற நூல்களை வாசிப்பவர்களைப்  பார்ப்பதே ஆச்சரியம்தான்."

"என் வாசிப்புக்கு முக்கிய காரணமே அம்மாதான். அம்மா ஒரு பிரபலமான பெண் எழுத்தாளர். நீங்கள் அவர் பெயரைக் கூறினால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்."

இவ்விதம் பானுமதி கூறவும், அவளது தாய் யாராகவிருக்கக் கூடுமென்பதை அறியும் ஆவலும் ஏற்பட்டது.

"உங்கள் அம்மா எழுத்தாளரா? யார் அவர்? என்ன பெயர்?"

"இந்திராணி ராஜகோபாலன் என்னும் பெயரில் எழுதுபர்"

அவனது ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

"என்ன அவர் உங்கள் அம்மாவா? நான் அவரது பல நாவல்களை வாசித்திருக்கின்றேன். முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர்."

"அவரும் இவ்விதமான நூல்களை வாசிப்பதில் ஆர்வமுள்ளவரா? அவரது எழுத்துகள் மேலோட்டமானவையல்ல. ஆழ்ந்த ஆனால் தெளிவான நடையினைக் கொண்டவை. வாசிப்பவர்களைக் கட்டிப்போடும் எழுத்து நடை அவருடையது."

"நன்றி மாதவன். உண்மைதான். அவர் மேலோட்டமான வாசகர் அல்ல. அவருக்குப் பாரதியார் மீது நிறைய அபிமானமுண்டு. குறிப்பாக அவரது  பெண்கள் சுதந்திரம் பற்றிய கருத்துகள் பிடிக்கும். நவீன இலக்கியம், நவீன அறிவியல் எல்லாம் பிடிக்கும். அவரது பாதிப்புத்தான் எனக்கும்."

"உண்மையில் கேட்கச் சந்தோசமாகவிருக்கிறது.  பொருள் வாழ்வுக் கனவுகளில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு மத்தியில் உங்களைப்போன்ற இளம் பெண்ணொருத்தியைப் பார்ப்பது உண்மையில் சந்தோசத்தைத்தான் தருகிறது பானுமதி"

தொடர்ந்தும் அவனே தொடர்ந்தான்:

"உங்களுக்கு உங்கள் அம்மாவைப்போல் வாசிப்பதைப்போல் எழுதுவதிலும் ஆர்வமுண்டா?"

"மாதவன், வாசிப்பதிலுள்ள ஆர்வம்  இதுவரை எழுத்தில் அதிகமில்லை. ஆனால் எழுத வேண்டுமென்ற ஆசை இருக்கிறது."

"பானுமதி , நானொரு புளக் தொடங்கியிருக்கிறேன். விரும்பினால் அதில் நீங்களும் எழுதலாம்."

"பிராமிஸ் பண்ண மாட்டேன். ஆனால் முயற்சி செய்வேன் மாதவன்"

"உண்மையில் இன்றுதான் ஆரம்பித்தேன். " இவ்விதம் கூறியவன் , ஐ போனை எடுத்து , பிரவுசரில் தன் வலைப்பதிவுக்கான இணையத்தள முகவரியினைத் தட்டச்சு செய்தான். அடுத்த கணமே அது திரை முழுவதும் விரிந்து நின்றது. 'காலவெளிப்புதல்வன் பக்கம்' தளத்தை திறந்து அவளுக்குக் காட்டினான்.

 அப்பக்கத்திலிருந்த அவனது கவிதையை வாசித்தவள் "நல்ல கவிதை. நல்ல சிந்தனை" என்றாள்.  தொடர்ந்து "லிங்கை என் வாட்ஸ் அப்புக்கு அனுப்புங்கள்" என்றவள் தனது வாட்ஸ் அப் நம்பரைக் கூறினாள். அவளது அலைபேசி இலக்கத்தைத் தனது ஐபோனில் பதிவு செய்து விட்டு, வாட்ஸ் அப்பில் கண்டறிந்து அவளுக்கு லிங் விபரப் பக்கத்தை அனுப்பினான்.

"பானுமதி, நீங்கள் நிச்சயம் என் புளக்கில் எழுத வேண்டும். நானும் உங்களைப்போல்தான் எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவன்"

இவ்விதமாக அவர்களுக்குமிடையில் உரையாடல் கலை, இலக்கியம், அறிவியல், வேலை என்று பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது. அன்று அவளிருப்பிடத்தை விட்டுத்  தன்னிருப்பிடம் திரும்பியபோது மாதவனைப் பல்வேறு உணர்வுகள் சூழ்ந்திருந்தன. வியப்பு, மகிழ்ச்சி, திருப்தியென்று பல்வகைப்பட்ட உணர்வுகள் அவை. எவ்விதம் இருப்பு சில கணங்களில் சில நிகழ்வுகளைச் சம்பவித்து விடுகின்றது!  பானுமதி என்னும் பெண்ணை அவன் சில மணி நேரத்துக்கு முன்னர் அறிந்திருக்கவேயில்லை. ஆனால் எவ்விதம் காலம் அவளை அவன் இருப்பு வட்டத்துக்குள் கொண்டு வந்து சேர்ந்து விட்டது! அவனையொத்த சிந்தனைகளுடன் கூடியதொரு பெண் என்பது மேலும் மகிழ்ச்சியைத்தந்தது.

இருப்பு ஒரு புதிர். கணத்துக்குக் கணம் புதிர்களைப் பொத்தி வைத்துள்ள பெரும் புதிர். தற்செயல்கள் மூலம் புதிர்கள் ஒவ்வொன்றாக விடுபடுகின்றன.அவ்விதம் விடுபடுமபோது அவை இருப்புன் நிகழ்வுகளாகின்றன. இவ்விதமானதோர் எண்ணமும் அவனுள்ளத்தில் எழுந்தோடியது. இவ்விதம் புதிர்களை கோடிக்கணக்கில் பொத்தி வைத்திருப்பதால்தான் இருப்பு சுவையாக அமைகின்றது. இல்லாவிட்டால் போரடித்து விடும். இவ்விதமும் ஒரு சிந்தனை கூடவே எழுந்தோடியது.


[தொடரும்]

girinav@gmail.com



[தொடரும்]

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்