Tuesday, April 2, 2024

ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -

                                                     -எழுத்தாளர்  ஜெகசிற்பியன் -

எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான  கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம்,  சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல்.  மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான  தொடர் நாவல்.

எட்டாம் வகுப்பிலிருந்து யாழ் இந்துக் கல்லூரிக்குக் கற்கச் செல்லவிருந்ததால் ,அப்போது படித்துக்கொண்டிருந்த வவுனியா மகா வித்தியாலய நண்பர்கள் இருவருடனும் ,தம்பியுடனும் நகரிலிருந்த அஜந்தா ஸ்டுடியோவுக்குப் புகைப்படமொன்று எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். அஜந்தாவுக்கு அருகிலேயே நாங்கள் வழக்கமாகப் புத்தகங்கள் வாங்கும் ஶ்ரீ  முருகன் புத்தக்கடை இருந்தது. அஜந்தாவிலும் வாசலுக்கு அருகிலிருந்த 'கவுண்ட'ரிலிருந்த கண்ணாடிக்  'காட்சிப்பெட்டி'க்குள்  ஜெகசிற்பியனின் நாவல்கள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதில் என் கவனத்தை ஈர்த்தது 'மண்ணின் குரல்' நாவல்.  அன்று வாங்கி வாசிக்கும் நிலையில் நானில்லை. அன்றிலிருந்து இன்று வரை அந்நாவலை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.

வாசிப்பின் ஆரம்பத்தில் என்னைக்கவர்ந்த நாவலாசிரியர்களில் ஒருவர் என்பதால் அவருக்கு எப்போதும் என் வாசிப்பு அனுபவப்படிக்கட்டுகளில் முக்கியமானதோரிடமுண்டு. அவ்வப்போது 'மண்ணின் குரல்' எங்காவது கிடைக்குமா என்று தேடிப்பார்ப்பேன்.  இணையத்தின் வருகைக்குப்பின் அவ்வப்போது இணையத்தில் நான் தேடும் விடயங்களில் அந்நாவலுக்கான தேடலுமடங்கும்.

அண்மைக்காலமாக வானதி பதிப்பகம் ஜெகசிற்பியனின் நாவல்களை மீள்பிரசுரம் செய்து வருவதால் அவர்களிடம் இருக்கக் கூடுமென்று எண்ணி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். அதற்கு அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத்தந்தது. ஜெகசிற்பியனின் எல்லா நாவல்களுமே தொடர்களாக வெளிவந்ததும் விரைவாகவே வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவருவதுண்டு. பல பதிப்புகள் இவ்விதம் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர்களிடமிருந்து வந்த பதிலில் நான் கேட்டிருந்த மண்ணின் குரல், கிளிஞ்சல் கோபுரம் , சொர்க்கத்தின் நிழல் நாவல்கள் தங்கள் வெளியீடுகள் அல்ல என்று எழுதி 'ஸ்கான்' செய்து பதிலளித்திருந்தார்கள்.  இந்நாவல்கள் எல்லாம் ஏற்கனவே வானதி பதிப்பக வெளியீடுகளாக  வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்நாவலை இணையத்தில் தேடியபோது அமெரிகக்க் காங்கிரசின் ஒரு பகுதியாகிய காங்கிரஸ் நூலகம் (The Library of Congress) கை கொடுத்தது. மில்லியன் கணக்கில்  புத்தகங்கள் , திரைப்படங்கள் , ஆவணப்படங்கள், ஒலி, ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், பத்திரிகைகள், வரைபடங்கள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை உலகளாவியரீதியில் சேகரித்து வைத்துள்ள தகவற் சுரங்கம் காங்கிரஸ் நூலகம் எனலாம்.  அதன் ஆசியப்பிரிவுடன் (Asian Division) தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர்களின் 'மண்ணின் குரல்' இருப்பதை அறிய முடிந்தது., ஆனால் காப்புரிமைப்பிரச்சினை காரணமாக   அதன் டிஜிட்டல் வடிவம் இணையத்தில் பாவிக்கும் வகையில் இருக்கவில்லை.  ஆனால் அங்கு பணியாற்றும் பெண் 'சார்லட்' (Charlotte) உத்தியோகத்தர் மிகவும் உதவியாகவிருந்தார். நாவலின் முதல் பக்கம், முன்னுரை, மேலும் சில பக்கங்களைத்   தகவலுக்காக ஸ்கான் செய்து அனுப்பினார். அவருக்கு என் நன்றி.

இந்த நாவல் வினோபா பாவேயின் பூதான இயக்கத்தின் மீது கொண்ட  ஈர்ப்பால் ஜெகசிற்பியன் எழுதிய நாவல் என்பதால் முக்கியத்துவம் மிக்கது. இவ்வகையில் வெளியான முதலாவது நாவல் இதுவே என அவர் நாவலுக்கான தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இது பற்றிய அவரது முக்கியத்துவம் மிக்க முன்னுரைக் கூற்றின் பகுதிகள் வருமாறு;

"இது ஒரு மண்ணின் கதை. மண்ணின் கதைஒயிலே தான் மனிதனின் கதையும் இருக்கிறது. மண் தோன்றியபின் மனிதன் தோன்றி மண்ணிலே தன் கதையை வளர்த்தான். மண்ணும் தன் கதையை மனிதனிடம் வளர்த்து வருகிறது. இது ஒரு பெரிய கதை. சிந்திக்கத்தெரிந்தவர்களுக்குச் சுவையான நீண்ட கதை.

அந்தக் கதை இருக்கட்டும், இந்தக் கதையைப் பற்றிச் சொல்கிறேன். .... சத்தியத்தின் ஜீவநாதமாய், தர்மத்தின் திவ்ய கானமாய், ஆத்ம ஞானத்தின் அன்பு கீதமாய் அந்தக் குரல் ஒலிக்கிறது. ஆம்; வினோபா பாவே என்னும் ஓர் எளிய மனிதரின் குரல்தான் அது.

'பூதானம்' - பூதானம் என்ற இந்தப் புத்தம் புதிய புரட்சி கீதத்தின் மெல்லிய ஒலி உலகின் மூலை முடுக்கெங்கும் கேட்கிறது. மண்ணை நம்பிப் பிறந்தும் மண்ணின் சுகம் அறியாமல், வாழ்வின் துடிப்பைக் காணாமல் , பிறவிப் பயனின் எந்த ஒரு துணுக்கையும் சுவைக்காமல், நிரந்தர அடிமைகளாய், நித்திய தரித்திரர்களாய், நீங்காப் பிணியாளராய்,  புழுவினும் கேவலமான வாழ்க்கையில் உழலும் கோடிக்கணக்கான ஏழை உழவர்களின் கடுகளவு இன்ப  முன்னேற்றத்திற்கேனும் உதவக்கூடிய அன்புக்குரல் என்பதையும், தனியொரு மனிதன்  தேவைக்கு அதிகமான நிலங்களை  வைத்துக்கொண்டு  சமூக அநீதிகளை வளர்க்கும் கொடுமையைக் கத்தியின்றி, இரத்தமின்றி, கோஷமின்றி, சட்டமின்றி அந்தக் குரல் அமைதியாக அழித்து வருகிறது என்பதையும் உலகம் இன்று ஒப்புக்கொண்டு விட்டது.

இப்படி ஞாலமெங்கும் கேட்கும் அந்த நவயுகப் புரட்சிக் குரல் ஓர் எளிய எழுத்தாளனின் உள்ளத்தில் மட்டும் எதிரொலிக்காமல்  இருக்குமா? அந்த எதிரொலியின் எழுத்து வடிவம்தான் இந்த 'மண்ணின் குரல்'.

பூதானத் தத்துவத்தை அடிநாதமாகக் கொண்டு தமிழில் உருவாகியிருக்கும் முதல் நாவல் இது. ஆனால் அந்தத் தத்துவத்தின் பிரசார பக்கமேளம் அல்ல; அதனை ஒட்டிப்படர்ந்த ஒரு புதிய சிந்தனைக் கொடி.

இரண்டாண்டுகளுக்கு முன் இந்த நாவலை மலாயாவிலிருந்து வெளிவரும் 'தமிழ் நேசன்' என்னும் பத்திரிகையில்  தொடர்கதையாய எழுதினேன். அதுவே இப்போது நூல் வடிவம் பெற்று உங்கள் அன்புக் கரங்களில் வந்து நிற்கிறது. (!2.5.1961)"



நாவல் பின்வருமாறு முடிகிறது:

"சீராளன்பட்டிக் கிராமத்திற்கு வடக்கேயும் தெற்கேயும் ஒரு பரந்து விரிந்த பொட்டல் வெளி அதோ, பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகிறது.  சுமார் இருநூறு வேலி நிலப்பரப்பு இருக்கும்.  நன்செய் நிலம்தான்; நல்ல மணதான்.

ஆனால், பொன்மணியொத்த நன்மணி நெற்கதிர்களை விளைவித்துப் புவன மக்களின் பசிப்பிணி போக்கும் சக்தி வாய்ந்த அந்த மண், கடந்த பல ஆண்டுகளாக ஏர்முனையால் ஜீவசித்திரம் தீட்டப்பெறாமல் விதவைக்கோலம் பூண்டு ஓயாமல் அழுதுகொண்டே இருக்கிறது. அந்த மண்ணின் அழுகுரல் ஓயும் காலம் எந்நாளோ?" 

இந்நாவல் இரு பதிப்புகள் வெளியானதை நூலிலுள்ள பதிப்பு விபரங்கள் அறியத்தருகின்றன.  முதற் பதிப்பு - பெப்ருவரி 1961இலும், இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 1964இலும் வெளியாகியுள்ளன.  இதன்படி இந்நாவல் 1959இல் தமிழ் நேசனில் தொடராக வெளிவந்திருக்க வேண்டும். அட்டைப்படத்தை வரைந்திருப்பவர் ஓவியர் மணியம்.

பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல் என்னும் வகையில் முக்கியத்துவம் மிக்க இந்நாவலை வானதி பதிப்பகத்தார் எதிர்காலத்தில் மீள் பிரசுரம் செய்வார்கள் என நம்புவோம்.

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்