Wednesday, April 24, 2024

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்!


மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள்.

என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.சிலப்பதிகாரத்தில் வரும் 'உழவரோதை மதகோதை உடைநீரோதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப' என்னும் வரிகளைக் கேட்கும் ,நினைக்கும் சமயங்களிலெல்லாம் கூடவே வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளமும் நினைவுக்கு வந்துவிடும்.

கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள், மீன்கொத்திகள், தாமரைகள், பல்வகை மீன்களெனத் திகழும் குளக்காட்சி மனக்கண்ணில் விரிகின்றது.

வவுனியா - மன்னார் 'றோட்'டும், குருமண்காட்டுப் பாதையும் (தற்போது கோயில் 'றோட்' என்றழைக்கப்படுகின்றது) சந்திக்கும் சந்திக்கண்மையிலுள்ள குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம்.

யாரிடமாவது குளத்தின் தெளிவான புகைப்படங்களிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இங்கு தெரிவது குளத்தின் வான் பாயுமிடக் காட்சி.

இதனை முன்பொரு தடவை முகநூல் பதிவாக  இட்டிருந்தபோது நண்பர் ரமணிதரன் கந்தையா (சித்தார்த்த சேகுவேரா, திண்ணை தூங்கி)  'இம்மொழிமயக்கமான "வான்" பாயும் என்பதற்குத் தமிழேதுமுண்டா? ' என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன்;

"வன்னியில் வான் பாயுது என்றால் புரிவதில் குழப்பமில்லை. ஏனைய பகுதியிலுள்ளவர்களுக்கு நீங்கள் குறிப்பிடுவதுபோல் மொழி மயக்கம் தரும் . இலங்கையில் குறிப்பாக வன்னியில் குளங்கள் நிறையும் போது, மேலதிக நீர் வழிந்தோடுவதை வான் பாயுது என்பார்கள். அதற்காக அமைக்கப்படும் பொறிமுறையை வான் என்பார்கள். கதவுகளை வான் கதவுகள் என்பார்கள். ஏன் வான் என்னும் சொல் இதற்குப் பாவிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து கட்டுரை எழுதலாமே. தமிழில் ஒரு சொல் பல விடயங்களுக்குப் பாவிக்கப்படுவது வழக்கம்தானே. விண்ணோடும் முகிலோடும் என்று பாடுவோம். கூடவே 'விண்'ணென்று வலித்தது என்போம். நாம் குழம்புவதில்லையே ரமணி. "

அதற்கு அவர் பதிலுக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்:

"கிரி, அது என்னவெனத் தெரியும்! அதுதான் கேட்டேன். நீர்வழிக்கட்டுப்பாட்டினைச் செய்யும் 'vane' என்ற நீரடுத்த அமைப்பின் மேலாகப் பாய்வதாலேதான் அது வந்திருக்கவேண்டுமென நம்புகிறேன். https://tinyurl.com/ym46bj6v ஆனால், அதைத் தமிழிலே அப்படியே பயன்படுத்துவதுதான் வானத்தினை நோக்கிப் பெருகிப்பாய்வதாக ஆகிவிட்டதெனத் தோற்றம் தருகின்றது. அதற்கான பொருந்திய தமிழ்ச்சொல்லேதுமுண்டா என்று கேட்டேன்."

- vane -

இப்பொழுது அப்பதிவை மீண்டும் முகநூல் நினைவூட்டியபோது மீண்டுமொரு தடவை வான் பாய்தல் என்னும் சொல்லிலுள்ள வான் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன்.  அவை பற்றிய விபரங்களைத் தேடிப்பார்த்தேன்.  உண்மையில் Vanes நில அரிப்பைத் தடுப்பதற்காக, நீரின் அளவைக் கட்டுப்படுத்தப்பாவிப்பதற்காகப் பயன்படுத்தப்படுபவை. குளமொன்றில் அல்லது ஆறொன்றில் நிரம்பும் நீரை மேலதிகமாக வழிய விடுவதை நோக்காகக் கொண்டு செயற்படுபவை அல்ல. அதற்காகச் செயற்படும் அமைப்பு Spillway என்னும் அமைப்பு.  எனவே வான் பாய்தல் என்னும் சொல்லிலுள்ள வான்  நண்பர் ரமணி குறிப்பிடுவது போல் Vane  என்னும் ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்திருப்பதற்கான சாத்தியங்குள் குறைவு.

அப்படியானால் வான் பாய்தலிலுள்ள வான் என்பது எதைக் குறிக்கின்றது. எதற்காக மேலதிக நீரை வெளியேற்றுவதை வான் பாய்தல் என்று கூறுகின்றார்கள்?  

- Spillway -

வான் என்பதற்கு ஆகாயம், மேல், உயர்வு, மழை மேகம், வெண்ணிறம், வெற்றிடம் , மழை .. இப்படிப் பற்பல அர்த்தங்கள் உள்ளன. குளங்கள் நிறைந்து  வழிவது பெரு மழை பெய்யும்போதுதான். குறிப்பாக மாரிகளிப் பெருமழை பெய்யும்போதுதான். இவ்விதம்  வான் (மழை) பெய்து குளங்கள் நீரால் நீரால் நிறம்புகையில் வான் தந்த மேலதிக  நீரை வெளியே பாயச் செய்வதையே வான் பாய்தல் என்று ஆரம்பத்தில் அழைக்கத்தொடங்கினார்களோ?  வான் பாய்தலிலுள்ள வான் என்பது தமிழ்ச்சொல்லாகவே எனக்குத் தோன்றுகிறது. நண்பர்களே! இது பற்றிய உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளூங்கள்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்