Tuesday, April 9, 2024

சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!


நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு.  எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.

கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு.  எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.


இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?

அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு.  பிரபஞ்சத்தின்  நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து  கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான  விடையொன்றின்  சிறு துளி.நேரடி ஒலி/ஒளி பரப்பில் இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தேன். மேகக் கூட்டங்களால் நிறைந்து கிடந்தாலும், இருண்டு ஒளிர்ந்த வானை வெளியில் நின்றும் இரசித்தேன். உணர்ந்தேன். சிந்தித்தேன்.


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்