Monday, April 1, 2024

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ - வ.ந.கிரிதரன் -


எழுநா சஞ்சிகையின் ஏப்ரில் 2024 இதழில் வெளியான எனது கட்டுரை புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’


காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம். அத்திட்டத்தின் மூலம் அப் பண்ணைவாசிகளின் பயணம் இலகுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்று தீர்மானிக்கப்பட்டது.

காந்தியம் அமைப்பின் நாவலர் பண்ணையின் முக்கிய காரணங்களில் ஒன்று எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது. அத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்களில் நானுமொருவன். அப்பொழுது நான் என் படிப்பை முடித்து வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பகுதி மக்கள் அக்காட்டுப் பகுதியைக் ‘காஞ்சிரமொட்டை’ என்றே அழைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் காஞ்சிரமோடை. பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலின் முன்னுரை அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை விரிவாகவே எடுத்துரைக்கின்றது.

இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பற்றி பேராசிரியர் புஷ்பரட்ணம் போன்றோர் ஏதாவது ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா அல்லது அது பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றான இப்பகுதி இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் பகுதி என்பதால் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதிகளில் ஒன்று.‘யாழ்ப்பாணக் காவியம்’ நூலில் எழுத்தாளர் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதியுள்ள முன்னுரையில் காஞ்சிரமோடை பற்றியும் அப் பிரதேசத்தில் காணப்படும் இடிந்த ஆலயங்கள், தூண்கள், தூபிகள், வாயிற்படிகள், சிற்பங்கள், கருங்கல் அணை பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“1958 ஆம் ஆண்டு சிறியேன் நெடுங்கேணியிலிருந்து மருதோடை வழியாகக் காஞ்சிரமோடை சென்று அங்கிருந்து காட்டுப்பூவரசங் குளத்தைக் கடந்து பணிச்சமடு என்னுமிடத்துக்குப் பலமுறை செல்லவேண்டியிருந்தது. இங்கு குறிப்பிடும் காடு மிக அடர்ந்தது. கொடிய வனவிலங்குகளும் பேராபத்துக்களும் நிறைந்துள்ளது. பனிச்சமடுவென்னும் ஏரியின் கரையிலே சிலநாள் வசித்த சிறியேன், மிக உயர்ந்த பாலை மரமொன்றின் உச்சியில் மூன்றாம் அடுக்குப் பரணில் நித்திரை செய்து வந்தேன். ஒருநாள் நள்ளிரவில் கடலிரைவது போல் நீரின் ஓசை கேட்டுப் பயந்தேன். ஆனால் நீர்ப்பெருக்கு சிறியேன் இருந்த இடத்தை அடையவில்லை. மறுநாள் சிறியேனும் வேறு பணியாளர்களும் பாதையற்ற காடு வழியே நீரோசைத் திசைநோக்கிச் சென்றோம். அக் காடுகளிலெல்லாம் இடிந்த பிள்ளையார் கோவில்களும், சிவன்கோவில்களும், தூண்களும், தூபிகளும் வாயிற்படிகளும் காணப்பட்டன. கருங்கல் வேலைகளும் சிற்பங்களும் அங்கங்கே போன வழியெல்லாம் சிதறிக் கிடந்தன. ஈற்றில் ஒரு உயர்ந்த பிரதேசத்துக்கு வந்தபொழுது, கருங்கல்லாற் கட்டப்பட்ட ஒரு பெரிய அணைக்கட்டுக் காணப்பட்டது.”

அங்கிருக்கும் நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் பிரமாண்டமானவை என்று கூறும் பண்டிதர் க. சச்சிதானந்தன் அப்பகுதியில் காணப்படும் நீர்வீழ்ச்சியின் அழகையும் மனத்தைத்தொடுமாறு வர்ணித்திருப்பார். அந்நீர்வீழ்ச்சியின் எழுச்சியே அவர் யாழ்ப்பாணக் காவியம் எழுதியதற்குத் தன்னைத் தூண்டியது என்று குறிப்பிடுவார்:

“அங்கு பிரயோகிக்கப்பட்ட நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் மிகப் பிரமாண்டமானவை; அன்றியும் கருங்கல் வேலை மிக உன்னதமானது. அணையின் நடுவிலே சில கருங்கற்கள் குலைந்தமையால் அந்த இடைவழியாக நீர் மிக உயரத்திலிருந்து குதிக்கிறது. ஒரு நீர்வீழ்ச்சி போன்று குதிப்பதால் பேரிரைச்சல் உண்டாகிறது. விழுமிடத்தில் மிகப் பலமாக நீர் சுழன்று அகப்பட்டவற்றைப் பல பரிவலுவுடன் இழுத்துச் செல்கிறது. கால் வைக்கப் பயமாக இருக்கும். வழிந்த நீர் சிற்றாறு போல் ஓடுகின்றது. அதன் இருமருங்கிலும் கண்ட இயற்கைக் காட்சியை என்னென்பது! பூக்களின் மகரந்தம் சொரிந்து, பசுமை கலந்த பொன் போன்று நிலத்திற் பரந்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது. எத்தனை வண்ணச் சேர்க்கைகள் கொண்ட வண்ணாத்திப் பூச்சிகள்! விதம் விதமான புள்ளிசைகள், மிருகங்களின் உறுமல்கள்! இந்த நீர்வீழ்ச்சியின் ஓசை மனத்தைப் பறையடித்துக் கிளர்த்தியது. அதன் உன்னதம் உள்ளத்தை மீட்டியது. அந்த எழுச்சியே இக் காவியத்தைப் பாடுவதற்குச் சுருதியாயிற்று.”

அங்கு காணப்பட்ட கல்லணை பரராசசேகரன் அணையென்று அழைக்கப்பட்டதையும் அவர் ஊரவரிடமிருந்து அறிந்து கொள்கின்றார்.

“பின்னர் காஞ்சிரமோடையில் வாழ்ந்த முத்தரம்மான் என்ற மூத்தோரை இதன் வரலாறு பற்றிச் சிறியேன் கேட்டேன். அவர், ‘இது பரராசன் அணைக்கட்டு’ என்று கூறினார். இங்கு கருங்கற்களில் பல எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மங்கியிருந்தன. இவ்வணைக்கட்டுப் பற்றிச் சரித்திர நூல்களில் தேடியபோது ஒன்றுங் கிடைக்கவில்லை. இப்பிரதேசம், வட, வடமத்திய, கீழ் மாகாணங்கள் பொருந்துமிடத்தில் தமிழ்ப் பிரதேசத்தில் உள்ளது. பதவியாவின் வடக்கே பத்துப் பதினொரு மைல் தூரத்திலுள்ளது.”

இந்த அணையினை வண்ணாத்திப்பாலமென்றும் அழைக்கும் விடயத்தைப் புறோகியர் என்பவரின் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும் தகவலையும், இப்பிரதேசம் பற்றிய பேராசிரியர் கா. இந்திரபாலாவின் ஆய்வுகள் பற்றிய விபரங்களையும்  பண்டிதரின் மேற்படி கட்டுரை தருகின்றது:

“புறோகியர் என்பார் (BrOhior 1934, P. 41) இது பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றைக் கீழே மூலத்திலுள்ளவாறு ஆங்கிலத்தில் தருகின்றோம்.

“About ten or eleven miles down the more or less sinuous course of Ma. Oyo, which passes out the breach of Padaviya tank, there is an ancient stone dam or weir which is entitled to take one of the foremost places among the structures of the kind in Ceylon. This is known as Varnardi Palam. Only one authority has ever inspected this monument of labour. (Parker Sessional  paper, XX11 of 1886)”

“வண்ணாத்திப் பாலமென்று இதை வழங்குவர். கீழ் மாகாணத்தில் இயன் ஓயாப் பகுதியிலும், ஒரு வண்ணாத்திப் பாலமுண்டு. அதனையும் இதனையும் வேறு பிரித்துக் கொள்க. இந்த அணைக்கட்டைக் கடந்து கிழக்கே சென்றால் கொக்கிளாய், தென்னமரவடி போன்ற இடங்களை அடையலாம். பதவியாப் பகுதி பற்றி இந்திரபாலா (1972, பக். 95) ஆராய்ந்துள்ளார். பதவியாவிலே கண்டெடுக்கப்பட்ட சாசனம் பதிவியாவுக்கு மறுபெயர் மதீபதி கிராமம் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட அணைக்கட்டைச் சுற்றி எத்தனையோ இடிந்த கோவில்கள் இருக்கின்றன. கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி எழுதிய நால்கள் கைக்கெட்டவில்லை. மக்கள் வாழ்ந்ததற்கடையாளமாக, கிணறுகள், பாத்திரங்கள், மனைச் சிதைவுகள் காணப்படுகின்றன. பேராபத்துக்கள் நிறைந்த பிரதேசமானபடியால் அங்கு சரித்திராசிரியர்கள் செல்லவில்லை போலும்! “

சபுமல்குமாரயாவிடம் (செண்பகப்பெருமாள்) கனகசூரிய சிங்கையாரியான் ஆட்சியை இழந்துவிடவே, அவனது குமாரனான பரராசசேகரன் காஞ்சிரமோடையை உள்ளடக்கிய வன்னிப் பகுதியில் மறைந்திருந்து, இழந்த யாழ்ப்பாண இராச்சியத்தை மீளக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியம்’ விபரிக்கின்றது:

“கனகசூரியனின் மூத்த புதல்வனான பரராசசேகரன் (பரராசசேகரன், செகராசசேகரன் என்பன பட்டப்பெயர்கள் என்பதை மனத்திற் கொண்டே எழுதப்படுகின்றன.) இங்குதான் யாழ்ப்பாண அரசை மீண்டடைவதற்குச் சில ஆயத்தங்கள் செய்தான் என இக் காவியம் கூறுகின்றது. அவன் தம்பி திருக்கேதீச்சரத்தையடுத்த காட்டிலும் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திலும் மறைந்து வாழ்ந்தான் என்றும், அவன் காஞ்சிரமோடைப் பகுதிக்குச் செல்லும்போது, வன்னிச் சிற்றரசியைச் சந்தித்தானென்றும் இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை சரித்திர நூல்களிற் காணப்படாதவை. காட்டுப் பூவரசங்குளம், காஞ்சிரமோடை தென்னைமரவடி என்ற இடங்களில் வாழ்ந்த வயோதிபர்களிடையில் பெற்ற கர்ண பரம்பரைக் குறிப்புக்களிலிருந்து இவை எழுதப்பட்டன.”

இக் காஞ்சிரமோடை பகுதி பற்றியும், இப் பிரதேசத்தில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பற்றியும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். வரலாறு மற்றும் தொல்லியற் துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய பகுதி காஞ்சிரமோடைப் பிரதேசம்.

https://ezhunaonline.com/article/historical-value-of-kanchiramodai/?fbclid=IwAR04Z7eLh01axvpG6d3g8tC6McARZv_UFKY0TjZ8sGIAAaf_Z7uWcT-UUGg_aem_ASIDD6BAW6hR05JI6Ht8k1U-Ysk7VzPVkae58V8uFcdLPaiNIg5nRUavIDGp8VXgT6B3w9c5wCPNod2OOemyEJqj

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்