Sunday, March 31, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!


அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்?  ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.மாதவன் இருபத்தி நான்கு வயது இளைஞன். நாட்டின் யுத்தச் சூழல் முடிவுக்கு வந்தபோது அவனுக்கு வயது ஒன்பது. அவன் யுத்தத்துக்குள் அகப்பட்டிருக்கவில்லை.  யாழ் மாவட்டத்தின் ஒரு கோடியில் பாதுகாப்பான சூழலிலிருந்தான். ஆனால் அவனை யுத்தக்களச் செய்திகள் மிகவும் பாதித்தன. ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், போராளிகள், படையினர் எனக்கொல்லப்பட்டபோது அவன் நினைப்பான் எதற்காக மனிதர்கள் இவ்விதம் இரத்த வெறி பிடித்து அலைகின்றார்கள். இன்று காசாவில் அதே இரத்தவெறியால் இரத்த ஆறு பெருகுகின்றது. உலகமே உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல் நிற்கின்றது. உலகப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று தோன்றியது. வல்லரசுகள் தம் நலன்களை மையமாக வைத்துச் செயற்படுவதனால் ஏற்பட்டுள்ள நிலையே இவ்விதமாக இரத்த ஆறுகள் பெருகுவதற்கு மூல காரணமென்று கருதினான்.

தற்போது நிலவும் உலக ஒழுங்கு , வல்லரசுகளுக்கிடையில் மோதல்கள் காரணமாகப் பாரபட்சமானது என்று கருதினான். எப்பொழுதும் பாதிக்கப்படுபவை வறிய ,வலிமை குன்றிய நாடுகளே என்றும் கருதினான். வலிமையான நாடுகள் தமக்கிடையிலான மோதல்களுக்கு வலிமை  குன்றிய, வறிய நாடுகளைப் பலிக்கடாக்களாக்குகின்றன. உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகளற்று ஒன்றிணைந்தால் தவிர இந்நிலைக்கு ஒரு போதும் தீர்வு ஏற்படப் போவதில்லை. இவ்விதமான சிந்தனைகள் எப்பொழுதும் அவனது இளம் மனத்தில் உதித்துக்கொண்டேயிருந்தன.

இன்னுமொரு விடயம் அவனை எப்போதும் வாட்டிக்கொண்டேயிருப்பது சக  உயிர்கள் மீதான மனிதரின் வன்முறை.  மிருகங்கள் மனிதரைப்போல் ஆறாவது அறிவு அற்றவை. இருப்பைத் தப்பிப்பிழைத்தலுக்காக அவை பசியேற்படும் சமயங்களில் மாத்திரம் ஒன்றையொன்று கொன்று உண்கின்றன. ஆனால் மனிதரோ தம் ருசிக்காக அளவுக்கு மீறிக்கொன்று குவிக்கின்றனர். போதாதற்குச் செயற்கையாக உருவாக்கி வேறு கொன்று குவிக்கின்றனர். இவ்விதம் அவ்வப்போது எண்ணும் அவன் மனிதர் இவ்விடயத்தில் ஏனைய உயிர்களைக் கொன்று குவிப்பதற்குப் பதில் , அவற்றையொத்த செயற்கையான உணவு வகைகளை உருவாக்கினாலென்ன என்றும் எண்ணுவான. அதற்கான தொழில் நுட்பம் ஏற்கனவே மனிதர் இருப்பதாகவும் அவன் கருதினான்.

அதே சமயத்தில் இவ்விதம் எண்ணும் அவனும் அவ்வப்போது இறைச்சி உண்பதை முற்றாக இன்னும் தவிர்க்கவில்லை. முன்பு போல் அதிகமாக அவன் உண்பதில்லை. படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகின்றான். முட்டையுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனபது அவனது திட்டம். இந்த விடயத்தில் அவனைப் பிரமிக்க வைத்தவர் மகாத்மா காந்தி. அவர் மிருக வதையைத்  தவறென்று உணர்ந்ததுமே உடனடியாகவே மச்சம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். எல்லாரும் மகாதமா ஆக முடியுமா என்றும் அச்சமயங்களில் தனக்குத்தானே சமாதானமும் கூறிக்கொள்வான்.

இவ்விதமான சிந்தனையோட்டங்கள் அவனையொத்த இளைஞர்களுக்கு அரிதாகவே தோன்றுவதுண்டு.இவனது சிந்தனையோட்டங்களை ஏனையோர் அறிந்தால் 'இவனுக்கு வேற வேலையில்லை. மூளை கழன்று போட்டுது'  என்று எண்ணி விட்டு , உதடுகளைப் பிதுக்கிச் சென்று விடுவார்கள்.  இதனாலேயே அவன் தனது இத்தகைய சிந்தனைகளை அரிதாகவே ஏனையோருடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அவனைப்போன்று ஆழ்ந்து சிந்திக்கும் சிலருடனேயே அவனால் இத்தகைய சிந்தனைகளைப் பகிர முடிவதுண்டு.  ஆனால் இவ்விடயத்தில் அவனுக்கு அவனது இன்னுமொரு இயல்பான வாசிப்புப் பழக்கம் நிறையவே கைகொடுத்தது.  இத்தகைய சிந்தனைப்ப்போக்குள்ள தத்துவஞானிகளின் எண்ணங்களை, எழுத்தாளர்களின் எழுத்துகளையெல்லாம் அவன் படிப்பதற்கு இணையத்தொழில் நுட்பமும், அங்கு குவிந்து கிடக்கும் தகவற் சுரங்கங்களும் மிகவும் கைகொடுத்தன.  எழுத்து வடிவில், ஒலி வடிவில், ஒளி வடிவில் அங்கு பல்வகைச் சிந்தனைகளும் கொட்டிக்கிடந்தன. அவற்றை வாசிப்பதில் , பார்ப்பதில், அவை பற்றிச் சிந்திப்பதில் அவனது பொழுதுகள் பெரும்பாலும் கழிந்தன. அவ்விதமே கழிந்து கொண்டிருந்தாலெவ்விதம் பொருளியற் சூழலில் சிக்கிக் கிடக்கும் யதார்த்த வாழ்வைக் கொன்டு நடத்த முடியும்? அதனால் அவனது கவனம் யதார்த்தத்துக்கும் அவ்வப்போது திரும்ப வேண்டியிருந்தது. தத்துவமும் , நடைமுறையும் இவ்விதம் அவனிருப்பை ஆட்டிவைத்துக்கொண்டிருந்தன.

அதே சமயம் அவன் ஒரு தீர்மானத்தைத் தன் இருப்பைபையொட்டி எடுத்திருந்தான். அது அவன் ஒருபோதுமே திருமண பந்தத்தில் மாட்டிக்கொள்வதில்லையென்பதுதான். எச்சந்தர்ப்பத்திலும் அவன் இம்முடிவிலிருந்து மாறுவதில்லையென்று தனக்குத்தானே திடசங்கற்பம் செய்துகொள்வான். அவனால் ஒருபோதுமே திருமண பந்தத்தில் சிக்கி, அதனால் உருவாகப்போகும் பாசச்சுழல்களுக்குள் சிக்கிட முடியாது என்று பட்டது. 'இங்கு இவ்விதம் ஏதோ பிறந்து விட்டோம். இத்துடன் என் சந்ததியும் இல்லாதொழியட்டும். யாருக்கும் என்னைப்போல் இருப்பின் குழப்பம் பற்றிய சிந்தனைகள் ஏற்படத்தேவையில்லை' என்று எண்ணிக்கொள்வான.

இவ்விதமாகச் சென்று கொண்டிருந்த மாதவனின் வாழ்க்கையில் இன்னுமொரு முக்கியமான அம்சமுமிருந்தது. அது அவனது குறிப்பேடு எழுதும் பழக்கம். குறிப்பேடு எழுதுவதை அவன் விரும்பிச் செய்தான். அது அவனதுக்கு இன்பத்தைத் தந்தது. அவனது மனப்பாரத்தைக் குறைத்தது. சில வேளைகளில் அவ்விதமான குறிப்பேடுகளில் அவனது மனச்சாட்சிக்கு ஒரு வடிவம் கொடுத்து அதனுடன் உரையாடவும் செய்வான். அதுவும் அவனுக்கு மகிழ்ச்சியைத்தந்தது. அவ்விதமான சமயங்களில் அவனும் , அவனது மனச்சாட்சியும் மாறி மாறி வினாவும் விடையுமாக உரையாடிக்கொள்வார்கள். அது அவனது சிந்தனையோட்டத்தைச் சீராக்க, விருத்தி செய்ய உதவுமொரு பயிற்சியாக அவனுக்குத் தென்பட்டதால் அதை அவன் விரும்பியே செய்தான்.

அன்று நீண்ட நேரம் கட்டடக்காட்டினுள் அலைந்து திரிந்து தன் கட்டட விருட்சத்துக்கூட்டினுள் நுழைந்தபோது அவனது மனம் அவனைச் சுற்றி, உலகில் நடைபெறும் நிகழ்வுகளால் சோர்ந்து கிடந்தது. அவன் கூட்டினுள் நுழைந்தபோது இருட்டி விட்டது. அன்று தெளிவாக வானமிருந்ததால், வழக்கமாக முகில் கூட்டங்களுக்குள், நகரத்தின் ஒளி மாசில் மறைந்து கிடக்கும் விண் சுடர்கள் பலவற்றைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. இவ்விதமான தெளிவான வானத்தைக் காணக்கிடைப்பது 'டொராண்டோ' போன்ற பெரு நகரில் அபூர்வமானது.  எனவே இச்சந்தர்ப்பத்தை  அவன் தவறவிட விரும்பவில்லை.

குளித்து, ஆடை மாற்றியவன் , இரு கப் கோப்பியும் தயாரித்துக்கொண்டு, தனது  குறிப்பேட்டுடன் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்து சாய்ந்தான். இவ்விதமான சாய்வு நாற்காலியொன்றில் சாய்ந்தபடி இரவு வானை, நகரைப் பார்ப்பதில் அவனுக்குப் பெரு விருப்புண்டு.  இவ்விதம் சாய்கையில் அவனது மனம் மிகுந்த அமைதியை, இன்பத்தை அடைவது வழக்கம். அவ்விதம் ஓய்ந்த மனத்துடன் சிந்திப்பதும் , எழுதுவதும் அவனுக்கு உண்மையிலேயே களிப்பினைத் தந்தன.

எதிரே விரிந்திருந்த கருவானத்தில் ஆங்காங்கே சுடர்களும் , கிரகங்கள் சிலவும்  ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒரு மிடறு கோப்பியை உள்ளெடுத்ததும் ஒரு வித புத்துணர்ச்சி பரவியது. மேலே முடிவற்று விரிந்திருந்த வான் அவனுக்கு இன்பத்தையும் , அதே சமயம் வழக்கம்போல் பிரமிப்பினையும் தந்தது. அவனது சிந்தனை சங்கக் கவி கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' கவிதையை  ஒரு கணம் அசை போட்டது.

யாதும் ஊரே ; யாவரும் கேளிர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா .
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன .
சாதலும் புதுவது அன்றே. வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே. முனிவின்,
இன்னா தென்றலும் இலமே. ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே.
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


என்ன கவி அவன்!  எத்தகைய தெளிவு  அவனுக்கு.  மாதவனுக்குக் கவிதையில் மிகவும் பிடித்த வரிகள் 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்.' , 'மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.'

ஊரெல்லாம் எம் ஊர்தான். யாவரும் எம் உறவினர்தாம். எம்மிலும் மேலோர் கண்டு வியத்தல் செய்யோம். கீழோர் கண்டு இகழ்தல் செய்யோம்.' 'தீதும் நன்றும் பிறர்தர வாரா . நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன .'  நன்மை , தீமை பிறர் எமக்குத் தருவதில்லை. துன்பமும் அதற்கான தீர்வும் கூட அவ்விதமே பிறர் தருவதில்லை. எல்லாம் மனிதர்களின் அக வெளிப்பாடுகளே.

'வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே. முனிவின், இன்னா தென்றலும் இலமே. '

வாழ்க்கை இனியது என்று மகிழ்வதும் தவறே. வாழ்க்கையை விட்டுப் பிரிந்து வாழும் துறவு கொடியது என்பதும் அவ்விதம் தவறே.  

வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்


வான் கொட்டும் தண் மழைத்துளியால் பெருகும் பேராற்றில் பயனிக்கும் மிதவையைப் போல்  மனித உயிரும் பயணிக்கும்  என்னும் அறிஞர்தம்  கருத்தில் தெளிவாயுள்ளோம்.

எத்தகைய தெளிவு மிக்க வார்த்தைகள் இவை. கணியன் பூங்குன்றனாரின் தெளிந்த சிந்தையின் வெளிப்பாடுகள் இவ்வரிகள். சங்கக்கவியின் மேற்படி கூற்றுகள் அவன்பால் மேலும் மரியாதையை ஏற்படுத்தின. எவ்விதம் கணியன் பூங்குன்றனாரால் இவ்விதம் அன்று சிந்திக்க முடிந்தது! அவனுக்கு வியப்பாகவிருந்தது.

மாதவன் மீண்டும் வானை நோக்கினான். கணியன் பூங்குன்றனாரின் கவிதையின் வரிகள் தந்த இன்பத்துடன் வானத்தின் விரிவும், தெளிவும் அவன் உள்ளத்தை மேலும் தெளிவுற வைத்தன.

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்