Saturday, March 30, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'


புகலிடத்தமிழ் இலக்கியப்பரப்பில் பல சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிக்கொண்டுள்ளன. இவற்றில் முதலில் வெளியான முக்கிய தொகுதி மித்ர பதிப்பக வெளியீடான 'பனியும் பனையும்'.
எழுத்தாளர்கள் எஸ்.பொ & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரையில் , பல்வேறு நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு.
 
பதிப்பு விபரம்: பனியும் பனையும்;: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக்கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94: கோகில ஸ்ரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18*12 சமீ.
 
தொகுப்புக்காக  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய முன்னுரையிலிருந்து....
 
"இது முழுக்க முழுக்க ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைப் பனி எப்படிப் பாதித்திருக்கின்றது என்று காட்டும் கலாசார அடையாளங்கள். இதில் ஆஸ்த்திரேலியாவிலிருந்து 9, ஐரோப்பாவிலிருந்து (பிரிட்டன், ஹாலந்து, சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஃப்ரான்ஸ், டென்மார்க் ஜெர்மன் ஆகிய நாடுகள்) 20, வட அமெரிக்காவிலிருந்து 10, ஆக முப்பத்தொன்பது கதைகள் உள்ளன.
 
இவர்கள் குடியேறிய அந்தந்த நாட்டுக்கும் ஒரு கலாசார சரித்திரம் உண்டு. அந்தச் சரித்திரத்துக் கேற்றபடி நான் அந்தந்த நாட்டின் சமகாலத்தியச் சமுதாயம் அமைந்திருக்க முடியும். புதிதாக குடியேறுகின்றவர்கள். அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை, இவ்வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பாதிப்புக்கள் மிக அழகாக இப்படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இக்கதைகள் எல்லாவற்றையும் இணைக்கும் ஆதார ஸ்ருதி; நேர்மை, எழுத்து நேர்மை. கலாசாரத்தின் பேரில் பலவகையான தளைகளை தங்களுக்கிட்டுக் கொண்டு காரணமற்ற குற்ற உணர்ச்சியால் கீழை நாடுகளில் அவதியுறும் இளைஞர்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் இருக்கும் மேற்கத்திய சமுதாயங்களை நேர்கொள்ளும் போது, அவர்களுக்கேற்படும் அதிர்ச்சிகள், கேள்விகள், தயக்கங்கள், மனச்சலனங்கள், உடன்பாடுகள், மறுப்புக்கள் எல்லாமே அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன."
 
எழுத்தாளர் எஸ்.பொ.வின் முன்னுரையிலிருந்து....
 
"நான் நிர்ப்பந்த வசத்தால் பரதேசியானவன். இதனால் நேர்ந்த இழப்புகள் அனைத்தையும் தமிழ் ஊழியத்தினால் ஈடு செய்யலாம் என்ற ஞானம் பெற்ற பரதேசி. இந்த ஞானம் போதிமர நீழலின் சகாயமல்ல. படைப்பு சரஸ். இறக்கும் வரை நான் வசப்படுத்திய சரஸ் ஊறிக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் என் தவம். இதனாலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் தமிழ் ஊழியம் தொடர்ந்தது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் சிறுசஞ்சிகைளின் பரமார்த்த வாசகனும் நான். பல நாடுகளிலே வாழும் படைப்பாளிகளுடனும் ஞானப் பகிர்வினை யாசிப்பவனும், சிறு சிறு குழுக்களாய் நமது ரஸனையை எல்லைப்படுத்திக் கொள்ளுதல், நமது படைப்பு வீரியத்தினை சிதறச் செய்கின்றதோ என்கிற அச்சம் என்னுள் எழுந்தது. 'மறைவாகப் புதுக்கதைகள் பேசி' மகிழும் ஒரு போக்கு. தமிழின் ஆதாயமாகக் கனியாது என்கிற உண்மையும் உறைக்கலாயிற்று. நமது படைப்பு முயற்சிகள் ஒரு முகப்படுத்தப்படும் பொழுது புதியன சாதித்தல் சாத்தியம் என்ற ஞானம் விடிந்தது. இந்த ஞானத்தைச் செயற்படுத்தும் தலைமை ஊழியக்காரனாய் என்னை நானேநியமித்துக் கொண்டேன். இந்த ஊழியத்தின் நம்பிக்கைப் பேழையாய் இந்த நூல் அமைகின்றது."
 
நூல் முன்னுரையில் எழுத்தாளர் சுஜாதா:
 
"இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளின் மகத்தான இந்தத் தொகுப்பின் கதைகளைப் படித்து ரசித்தேன். சிறுகதை எழுதுவது மேல்நாட்டில் குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. உலகயுத்தத்திற்குப் பிறகு ப்ரெஞ்சு எழுத்தாளர்களில் மிகச் சிலரே சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அதே போல் குந்தர்ஃக்ராஸ், பீட்டர் ஹாண்கே, மாக்ஸ் ஃப்ரிஷ் போன்ற ஜெர்மானிய எழுத்தாளர்களுக்கும் கதைத் தொகுப்புக்கள் இல்லை. பிரிட்டிஷ் எழுத்தாளர்களிலும் சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடுபவர்கள் அரிதே. எல்லோரும் பெரிய பெரிய நாவல்கள் தான் எழுதுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ப்ரான்சு ஜெர்மனி இங்கிலாந்து ஆஸ்திரேலிய கனடா நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் மிகப்பெரிய சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. சிறுகதைக் கலை இறந்து விடவில்லை. இந்த அவசர யுகத்திலும் நன்றாக எழுதப்பட்ட சிறுகதைகள் ஒரு உணர்ச்சி பூர்வமான, எளிதில் மறக்க இயலாத அனுபவத்தைத் தருகின்றன."
 
தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்க: https://noolaham.net/project/01/65/65.pdf

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்