Wednesday, March 27, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!


மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.இதற்கிடையில் மாடப்புறாக்கள் சில அணிலுக்கு அண்மையில் பறந்து வந்தமர்ந்து இரை தேடத்தொடங்கின. அப்புறாக்களைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் சிலவும் பறந்து வந்து புறாக்களின் அருகாமையில் இரைதேடத்தொடங்கின. புறாக்களுக்கும் ,சிட்டுக்குருவிகளுக்குமிடையில் ஒருவித நட்புரீதியிலான புரிந்துணர்வு, அன்பு இருப்பதாக அவன் இவ்விதம் அவற்றை ஒன்று சேரக் காண்கையில் உணர்வதுண்டு. சிட்டுக்குருவிகள் அமைதியான சுபாவம் மிக்க புறாக்களின் அருகாமையில் ஒருவித பாதுகாப்பு கலந்த உணர்வினை உணரக்கூடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இச்சமயம் பார்த்து சீ கல் என அழைக்கப்படும் வெண்ணிறக் கடற்பறவைகள் சில கீச்சிட்டபடி சிறகடித்துப் பறந்தன.

சிறிது நேரம் சுற்றியிருந்த இயற்கைச் சூழலில் மனத்தைப் பறிகொடுத்திருந்தவனின் எண்ணம் அவனது தற்போதுள்ள சூழலின் பக்கம் திரும்பியது.  டொன்மில்ஸ்/எக்ளின்டனுக்கு அண்மையிலிருந்த ஃபிளெமிங்க்டன் பார்க் என்னும் பகுதியில் அமைந்திருந்த தொடர்மாடிக் கட்டடங்களில் ஒன்றிலிருந்து ஸ்டுடியோ அப்பார்ட்மென்ட் ஒன்றில் அவனது வாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது.

விரைவில் புதிதாக ஏதாவது வேலையொன்றை எடுத்து இருப்பைத்  தக்க வைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. அதுவே அவனது முக்கிய எண்ணமுமாகவுமிருந்தது.  பொருளியல்ரீதியில் தன்னைப் பலப்படுத்துவதற்கு அது மிகவும் அவசியமென்று உணர்ந்தான். அதன் பின்பே மற்றதெல்லாம் என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டான். நல்லகாலம் இன்னும் குளிர்காலம் தொடங்கவில்லை. இலையுதிர்காலச்  சூழலில் நகரம் மூழ்கிக் கிடந்தது. இன்னும் சில மாதங்களுக்கு அவன் குளிர், உறைபனி பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. அதற்குள் ஏதாவது வேலையொன்றக் கண்டு பிடிக்க வேண்டும்.

நண்பன் சுகுணனும் தான் வேலை பார்க்கும் உணவகத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று விசாரித்துப் பார்ப்பதாகக்  கூறியிருந்தான்.  கடந்த ஒரு வருடமாக அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்த இத்தாலியன் ஒருவனின் உணவகத்தை அவன் இழுத்து மூடிவிட்டான். அவனுக்கென்று வாடிக்கையாளர்கள் பலர் இருந்தனர். இருந்தாலும் வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கேற்ற வருமானம் அண்மைக்காலமாகவே குறைந்து கொண்டு வந்திருந்தது. இறுதியில் அவன் இழுத்து மூடிவிட்டான். அதை மூடுவதற்கு முன் இவனிடம் அதைப் பொறுப்பெடுத்து நடத்த முடியுமா என்றும் கேட்டான். ஆனால் அதற்குரிய நிலையில் மாதவன் இல்லை. அவனது எதிர்காலக் கனவுகள் வேறாக இருந்தன.

மீண்டும் அவனது கவனம் அந்தக் கறுப்பு அணிலின் மீது திரும்பியது. அவனுக்கு அவனது பால்ய பருவத்திலிருந்தே அணிலென்றால் மிகுந்த பிரியம். அவனது பால்யபருவத்து நண்பனொருவன் ஒரு முறை அணிற் குஞ்சின்றைப் சேர்ட் பொக்கற்றில் வைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்து விட்டான்.  பேனா மைப்போத்தலில் பாலும் கொண்டு வந்திருந்தான். மதிய உணவு நேரத்தில் பாடசாலை விளையாட்டு மைத்தானத்தில் அந்த அணிற் குஞ்சுடன் விளையாடியதுடன் அவனுக்கும் அணில் மீதான ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அது துள்ளிக் குதிக்கும் அழகில் அவன் மெய்ம்மறந்து போனான். அதன் பிறகு அவன் அணில் குஞ்சுக்காய் அலைந்து திரிந்தான். ஆனால் எதுவுமே அவனுக்கு அகப்படவில்லை.

"என்ன நண்பனே! என்ன அப்படி அந்த அணிலைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?"  

குரல் கேட்டுத் திரும்பினான். எதிரில் மார்க் நின்றிருந்தான். வெள்ளையினத்தவன். ஓய்வு எடுத்து விட்டு, பாடசாலையொன்றுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் சாரதியாகப் பகுதி நேரமாக வேலை செய்கின்றான். பார்த்தால் ஒரு காலத்தில் அவனது கனவுலக நாயகர்களில் ஒருவனாகவிருந்த   ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளீவ் மாதிரி மீசையும், உயரமுமாகவிருப்பான்.  அவனும் அவன் வசிக்கும் தொடர்மாடிக் கட்டடத்தில்தான் வசிக்கிறான். போகும் போதும் வரும் போதும் கண்டு பழக்கம்.அவ்வப்போது சிறிது நேரம் உரையாடிச் செல்வார்கள். முதன் முறையாக அவனைக்கண்ட போது அவனைப்பார்த்து " ஏ நண்பனே. பார்த்தால் உன் சாயல நடிகன் லீ வான் கிளிவ் போல் இருக்கிறது. உனக்கு அது தெரியுமா?" என்றான்.

அது அவனுக்குச் சிறிது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். "அப்படியா கூறுகிறாய்?" என்றவன் தொடர்ந்தான்: "உண்மையில் என் அபிமான வெஸ்டன் மூவி நடிகர்களில் அவனும் ஒருவன். அட உனக்கும் அவனைத் தெரிந்திருக்கிறதே. "

அவனது குரலில் தொனித்த வியப்பு இவனுக்குச் சிரிப்பைத் தந்தது.

"நண்பனே, என் பதின்ம வயதுகளில் நான் பார்க்காத ஹொலிவூட் திரைப்படங்களுக்குக்  கணக்கு வழக்கில்லை. லீ வான் கிளிவ், சார்ள்ஸ் புரோன்சன், யூல் பிரையினர், சார்ள்டன் ஹெஸ்டன், கிளின்ட் ஈஸ்வூட், கிறிஸ்தோபர் லீ, அந்தனி கியூன், கிரகரி பெக், ஓமர் செரிவ், ஷோன் கானரி, டெலிச விலாஸ்.. இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இது போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா" என்று சிரித்தான்.

பதிலுக்கு அவனும் "போதும் போதும் நண்பனே, இதுவே போதும், பார்க்கப்போனால் என்னைவிட உனக்கு அதிகம் பேரைத்தெரிந்திருக்கும் போல் உ ணர்கின்றேன்" என்றான்.

இவ்விதம் ஆரம்பித்த அவனுக்கும் மார்க்கிற்குமிடையிலான நட்பு இன்றுவரை தொடர்கிறது. சில நேரங்களில் நேரம் கிடைக்கும்போது அருகிலுள்ள ஸ்போர்ட்ஸ் பார் ஒன்றுக்கும் அவனுடன்  செல்வதுண்டு.

"நண்பனே, அணிலென்றான் எனக்கு மிகவும் விருப்பம். அதன் வாழ்க்கையைப்பற்றி ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தேன். இந்த அணில் இங்கு எங்கோதானிருக்க வேண்டும்"

"நண்பனே, இந்த மரம் , அந்த மரம் , அதற்கடுத்த மரத்திலுள்ள கூடுகளைப் பார்த்தாயா? இவையெல்லாம் இதனுடைய கூடுகளே.  இன்னும் சிறிது நேரத்தில் பார் இதனுடைய துணையையும் நீ இங்கு காணலாம். "

"என்ன மார்க் கூறுகிறாய்? இந்த அணிலுக்கு இத்தனை கூடுகளா?"

"நண்பனே, இந்த அணிலை இது குஞ்சாகவிருந்த சமயத்திலையிருந்து அவதானித்து வருகிறேன். அணில்கள் பொதுவாக இப்படி பல கூடுகளைக் கட்டுவதொன்றும் ஆச்சரியமானதல்ல. தற்செயலாக ஒன்று சீர்குலைந்து போனால் அடுத்த கூட்டுக்குப் பாதுகாப்பாகக் குடியேறலாம் அல்லவா. அதற்கான முன்னேற்பாடுதான் இவ்விதம் அணில்கள் பல கூடுகளைக் கட்டுவதற்கான காரணம்."

"ஆச்சரியமாகவிருக்கிறதே. ஆனால் நான் இவ்விடயத்தை இது வரையில் அறிந்திருக்கவேயில்லை. தகவலுக்கு நன்றி"

இவ்விதமாக அவர்களுக்கிடையில் சிறிது நேரம் அந்த அணிலைப்பற்றிய உரையாடல் தொடர்ந்தது. அப்பொழுது அந்த அணில் பின்கால்களில் நின்று முன்  கால்களில் அகப்பட்ட எதையோ வைத்துக் கொறித்தபடியே அவர்களைப் பார்த்தது. இச்சமயம் மார்க் தன் பாண்ட்ஸ் பொக்கற்றிலிருந்து கொண்டு வந்திருந்த ஆல்மண்ட் விதைகளை எடுத்து அந்த அணிலை நோக்கி  நீட்டினான். என்ன ஆச்சரியம்! அந்த அணில் எவ்வித அச்சமுமில்லாமல் , மிகவும் நன்கு பழகிய நண்பன் ஒருவனை நோக்கி வருவது போல் மார்க்கை நோக்கி  ஓடி வந்து மார்க்கின் காலடியில் வந்து நின்று அவனை நோக்கி நின்றது.

மார்க் ஆல்மண்ட் விதையொன்றை எடுத்து அதனை நோக்கி நீட்டினான். பதிலுக்கு அந்த அணில் அவனிடமிருந்த ஆல்மண்ட் விதையினை எடுத்து விரைவாகவே உண்டது. பின் மீண்டும் அவனை நோக்கி இன்னுமோர் ஆமண்ட் விதையை எதிர்பார்த்து நோக்கி நின்றது.

மாதவனின் வியப்பு இன்னும் நீங்கவில்லை. "என்ன நண்பனே, பார்த்தால் இந்த அணிலுக்கு உன்னை நீண்ட  காலமாகத் தெரியும்போலுள்ளதே. எந்தவிதப் பயமுல் இல்லாமல் எப்படி இதனால் இப்படி இயல்பாகப் பழக முடிகின்றது?"

அதற்கு மார்க் இவ்விதம் பதிலளித்தான்: "எந்த மிருகமும் அன்புக்கு அடிமை. அன்பாகப் பழகினால் அந்த அன்பை அவை புரிந்துகொள்ளும். ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், அன்பு கலந்த நட்பைப் புரிந்துகொண்ட பின்னர் அவை மனிதருடனும் எவ்வித அச்சமுமற்ற நட்புரீதியில் பழகத்தொடஙகும் தன்மை மிக்கவை."

"மார்க், உனக்கொன்று தெரியுமா?"

"என்ன நண்பனே?"

"நான் ட்ரொபிக்கல் கிளைமேட்டிலிருந்து வந்தவன். நான் என் பால்ய பருவத்தைக் கழித்தது காட்டுச்சூழலில் மூழ்கிக் கிடந்ததொரு கிராமத்தில்தான். பல்வகை மிருகங்களும், பறவையினங்களும் மலிந்து கிடக்குமொரு மண்ணில் பிறந்தவன். வளர்ந்தவன். ஆனால் அங்கு நான் வாழ்ந்தபோது அவற்றைப்பற்றிப் பெரிதாக நினைத்தேயில்லை. அவை தம் பாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தன., நாம் எம்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால்.."

"ஆனால்... மேலே சொல்லு  நண்பனே."

"ஆனால் அங்கு அவதானிக்காத மிருகங்கள் பலவற்றை இந்த மாநகரத்தில் அவதானித்து வியந்திருக்கின்றேன்.  எத்தனை வகையான உயிரினங்கள் இந்த நகரத்துச் சூழலில் தப்பிப்பிழைத்துத்  தம் வாழ்க்கையைத் தொடர்கின்றன. ஆச்சரியம் நண்பனே."

இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது, இதற்கிடையில் அவனிடமிருந்து  பெற்ற ஆல்மண்ட் விதைகளைச் சுவைத்து உண்ட அந்த அணில் மீண்டும் அதனை எதிர்பார்த்து மார்க்கை நோக்கி நின்றது. அவனிடமிருந்த ஆல்மண்ட் விதைகளையெல்லாம் ஏற்கனவே அதற்குக்கொடுத்து விட்டான். இனி அதற்குக் கொடுப்பதற்கு ஏதுமில்லை. தன்னிடம் முடிந்து விட்டது என்பதைத்தெரிவிக்கும் வகையில் கைகளை விரித்து, உதட்டை  பிதுக்கினான் மார்க். என்ன ஆச்சரியம்! அந்த அணில் அவனதி சைகைகளைப்  புரிந்து கொண்டதற்கடையாளமாகச் சிறிது ஒலி எழுப்பிவாறு பாய்ந்து ஓடியது. மீண்டும் தப்பிப்பிழைத்தலுக்கான தனது அன்றாடச் செயற்பாடுகளுக்குள் மூழ்கிப் போனது.

************************


அத்தியாயம் இரண்டு: அன்பின் ஆதிக்கமும், ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவமும்!



மாதவனது மனம் நிறைய அந்த அணில் பற்றிய சிந்தனைகளே பரவிக் கிடந்தன.

'நண்பனே, என்ன சிந்திக்கின்றாய்? இன்னமும் அந்த அணில் பற்றித்தானா?"

இவ்விதம் கேட்டுவிட்டுச் சிரித்தான் மார்க்.

'உண்மைதான் நண்பனே. இந்த அணில் என் மனத்தில் இருப்பு பற்றிய சிந்தனைகளை வழக்கம்போல் ஏற்படுத்தி விட்டன. இது என்னுடைய இயல்பு. எப்பொழுதும் இருப்பு பற்றிச் சிந்திப்பது. சக உயிரினங்களைப் பற்றிச் சிந்திப்பது.'

மாதவனின்  பதிலைக்கேட்டுப்  பலமாகச் சிரித்தான் மார்க்.

'நீ துறவியாகப் போயிருக்க வேண்டியவன்.  உனது இருப்பிடம் நகரமல்ல.'

'ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். பொதுவாகவே எனக்கு இயற்கையெழில் தவழும் கானகச்சூழலும், அமைதியும் நிறையப் பிடிக்கும். ஆனால்  தொழில்நுட்ப வளர்ச்சியின் எல்லாப் பயன்களையும் உதறிவிட்டுப் போகும் அளவுக்கு மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லையே'

என்று பதிலுக்குக் கூறிவிட்டு மாதவனும் சிரித்தான்.  அவனே மேலும் தொடர்ந்தான்:

'நண்பனே, இந்த இருப்பின் நேர்த்தியை, அழகினை நான் விரும்புகின்றேன். ஆனால் இதன் குறைபாடுகளை நான் வெறுக்கின்றேன். இவ்வுலகம் மட்டும் அன்பின் ஆதிக்கத்தில் மட்டும் நிறைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தால் ... ஆனால் அவ்வாறு ஏன் படைக்கப்படவில்லை?"

'நண்பனே, ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை , சார்பியல் கோட்பாட்டை இங்கும் நீ பாவிக்கலாம்."

இவ்விதம் மார்க் கூறியதைக் கேட்டு மாதவனுக்குச் சிறிது ஆச்சரியமேற்பட்டது.

'என்ன ஐன்ஸ்டைனின் சார்பியற்கோட்பாடா? உனக்கு அதெப்படி தெரியும்? நீ பெளதிகத்தில் பட்டம் பெற்றவனா?"

இதைக்கேட்டதும் இன்னுமொரு தடவை மார்க் சிரித்தான்.

'நண்பனே, ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாட்டைப் பற்றிய பொதுவான விளக்கத்தை அறிவதற்கு பெளதிகப் பட்டதாரியாகவிருக்கத்  தேவையில்லை.'

'என் நாட்டில் பல்கலைகக்ழகப் பெளதிகப்பட்டதாரிகள்  பலருக்கே இது பற்றிய போதிய விளக்கம் தெரிவதில்லை. நீ என்ன சொல்ல வருகிறாய் மார்க்?"

'எனக்கு உன் நாட்டைப்பற்றித்தெரியாது. ஆனால் இங்கு உயர் கல்லூரி மாணவர்கள் பலர் மிகச்சாதாரணமாக அறிந்த் விடயங்கள் இவை. என்னுடைய பாடசாலை நாட்களில் எனக்கு அறிவியல் புனைகதைகளென்றால் மிகவும் பிடிக்கும், சித்திரக் கதைகள்,  திரைப்படங்கள்,  வீடியோ விளையாட்டுகளும்தாம்.இதனால் சார்பியல் தத்துவம், காலங்கடந்த பயணங்கள், கருந்துளைகள், புழுத்துளைகள், அதிவெளி இவை போன்ற சொற்பதங்களின் பொதுவான விளக்கங்களையெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். புரிந்திருக்கின்றோம்,'

மார்க் கூறியது உண்மைதான். மேற்கு நாடுகளில் குழந்தைப்பருவத்திலிருந்தே  நவீன வானியற்பியல் பற்றிய விடயங்களை, கோட்பாடுகளைப்பற்றிய எளிய விளக்கங்களை வீடியோ விளையாட்டுகள், அறிவியல் புனைகதைகள், சித்திரக் கதைகள், திரைப்படங்கள் மூலம் குழந்தைகள் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைதிருக்கின்றது.

'நண்பனே, சார்பியற் கோட்பாட்டினை இங்கும் பாவிக்கலாம் என்று கூறினாயே. புரியவில்லையே?"

'நண்பனே, நீ அன்பின் ஆதிக்கம் பற்றிக் கூறினாய். அதைப்பற்றித்தான் கூறினேன். '

இவ்விதம் மார்க் கூறியதும் மாதவனின் குழப்பத்தை இன்னும் அதிகரித்தது. அக்குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்:

'நண்பனே, நீ கூறுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சார்பியற் தத்துவத்தை எப்படி அன்பின் ஆதிக்கத்துடன் இணைக்கலாம். சிறிது விளக்கமாக கூறு பார்க்கலாம்."

'நண்பனே, இப்பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களுமே சார்பானவை இல்லையா, என்னைப்பொறுத்தவரையில் இயக்கங்கள் மட்டுமல்ல எல்லா விடயங்களுமே மானுட வாழ்க்கை, மானுடர் உணர்வுகள் அனைத்துமே சார்பானவைதாம். நீ கூறுகின்றாயே அன்பின் ஆதிக்கமென்று அந்த அன்பின் ஆதிக்கமுட்பட அனைத்துமே சார்பானவைதாம். உதாரணத்துக்கு ஒரு சிங்கத்தை எடுப்போம். அது மானொன்றைக் கொல்கிறது. எதற்காக? '

'எதற்காக? உணவுக்காகத்தான்.'

'உண்மை. தன் உணவுக்காகக் கொல்கிறது. ஆனால் அதே சமயம் அது அன்பின் ஆதிக்கத்துக்குமாகவும் கொல்கின்றது.'

'உணவுக்காகக் கொல்கிறது. ஆனால் அன்பின் ஆதிக்கத்துக்காகக் கொல்கிறதா? அதுதான் புரியவில்லை. அதெப்படி இவ்விதம் நீ கூறலாம்?"

'நண்பனே, அது தன் குட்டிகள் மேல் வைத்துள்ள அன்பின் ஆதிக்கத்தாலும் ஏனைய உயிர்களைக்கொல்கிறது. இவ்விதம் உயிர்கள் எல்லாமே அவற்றின்  அன்பின் ஆதிக்கத்தால் கொல்கின்றன.அன்பின் ஆதிக்கமும் இதனால் தான் சார்பானது என்றேன் நண்பனே. புலியின் அன்பின் ஆதிக்கம், மானுக்குத்  துன்பத்தை விளைவிக்கலாம். பருந்தின் அன்பின் ஆதிக்கம் சிட்டுக்குருவிக்குத் துன்பமாகவிருக்கும். அதே சமயம் சிட்டுக்குருவியின் அன்பின் ஆதிக்கம் பூச்சிகளுக்குத் துன்பத்தை விளைவிக்கும்.'

'நண்பனே, எவ்வளவு இலகுவாக இருப்பின் இயல்பை எடுத்துக்காட்டி விட்டாய். ஆக, இப்பிரபஞ்சமே அன்பின் ஆதிக்கத்தால்தான் இயங்குகின்றது. ஆனால் இன்பம் , துன்பம், அன்பு, வெறுப்பு இவை சார்பானவை என்கின்றாய். உன் தர்க்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கம்தான்.'

ஏதாவது வேலை கிடைக்குமாவென்று அன்று அவன் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தபோதெல்லாம் மார்க்கின் அன்பின் ஆதிக்கம் பற்றிய சிந்தனைகளே  அவனது நெஞ்சில் வளையவந்துகொண்டிருந்தன. 

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்