Sunday, March 24, 2024

மனத்தில் நிற்கும் மதுரை வீரன்!


1956 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளியான தமிழ்த்திரைப்படம் 'மதுரை வீரன்'. 36 திரையரங்குகளில் 100 நாட்களையும், மதுரை சிந்தாமணியில் 200 நாட்களையும் கடந்து ஓடிப் பெருவெற்றியடைந்த திரைப்படம். எம்ஜிஆரைத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக்கிய திரைப்படம் மதுரை வீரன் என்பர் திரையுலக ஆய்வாளர்கள்.   அதுவரை வசூலில் சந்திரலேகா புரிந்திருந்த சாதனையை  மதுரை வீரன் முறியடித்ததாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் எனப் பலர் , அந்நாளைய முன்னணி நடிகர்கள், நடித்திருக்கின்றார்கள்.

டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.  கண்ணதாசனின் வசனங்கள் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன. கவிஞர் திரையுலகில் திரைக்கதையிலும் ஏன் இன்னும் கோலோச்சவில்லை என்றொரு கேள்வி இவ்வசனங்களைக் கேட்கையில் எழுகின்றது.

படத் தயாரிப்பாளர் லேனா செட்டியார். இசை - ஜி.ராமனாதன்.  பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். ஒளிப்பதிவு எம்.ஏ.ரெஹ்மான்.

கல்கியில் இத்திரைப்பத்தைப்பற்றிய விமர்சனத்தில்  திரை விமர்சகர் காந்தன் 'வீரன் என்ற பெயருக்கு ஏற்ப அவருக்குக் குதிரை சவாரி, யானைச் சவாரி, விற்போர், மற்போர், வாட்போர் முதலிய எல்லாவிதமான வீர சாகச வாய்ப்புகளும் தாமாக வந்து வாய்க்கின்றன.  கத்திச் சண்டையோடு நின்று விடாமல் காதல் புரியவும் அவருக்கு வாய்ப்பு கிட்டுகிறது.  எல்லா வாய்ப்புகளையும் அவர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு சக்கை போடு போட்டிருக்கின்றார்.' என்று கூறுகின்றார்.

இத்திரைப்படம் வெளியானபோது எம்ஜிஆருக்கு வயது 39. திடகாத்திரமான உடலுடம் பத்மினியுடன், ஈ.வி.சரோஜாவுடன் அவர் ஆடும் ஆட்டம் அவரது நடனத்திறமையினை வெளிப்ப்டுத்துகின்றது.  
ஈ.வி.சரோஜாவுடன்  'வாங்க மச்சான் வாங்க'  என்றும், பத்மினியுடன் இணைந்து 'ஏச்சுப் பிழைக்கும் தொழிலெ  சரிதானா' என்றும் அவர் துடிதுடிப்புடன் ஆடிப்பாடி நடித்திருக்கின்றார். மனத்தில் நிற்கும் பாடல்கள் அவை. பாடல்களை எழுதியிருப்பவர் தஞ்சை  ராமையா தாஸ்.

இத்திரைப்படத்தைப் பற்றிச் சுவையான மேலும் சில தகவல்கள்:  ஆரம்பத்தில் இப்படம் தெய்வத்துடன் சம்பந்தப்பட்ட கதையமைப்பைக் கொண்டிருந்ததால் எம்ஜிஆர் நடிக்கத் தயங்கினாராம். ஆர்.எம்.வீரப்பனே எம்ஜிஆரை நடிக்க ஆலோசனை கூறி நடிக்க வைத்தாராம். மேலும் மூலக்கதையிலிருந்த் வெள்ளையம்மா பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருந்த விதமும் எம்ஜிஆருக்குப் பிடிக்காமலிருந்ததால் அதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டதாம்.

திரைப்படம் சுமார் மூன்று மணி நேரமிருந்தாலும், தொய்வில்லாமல் நகர்கிறது. சிந்தைக்கினிய பாடல்கள், வசனங்கள், நடனங்கள், இயக்கம், கதைப்பின்னல் மற்றும் அபிமான நடிகர்கள் இவைதாம் இப்படத்தின் பெரு வெற்றிக்குக் காரணங்கள்.

- கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் -

'ஏச்சுப் பிழைக்கும் தொழிலே' பாடலைக் கேட்க -  https://www.youtube.com/watch?v=mIxQ7uY4eB4

'வாங்க மச்சான் வாங்க' பாடலைக் கேட்க -  https://www.youtube.com/watch?v=GB7kYCTeCdA

'மதுரை வீரன்' திரைப்படத்தை முழுமையாகக் கண்டு களிக்க - https://www.youtube.com/watch?app=desktop&v=muPv43xMEWE





No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்