Friday, March 15, 2024

இரு வேறு காலகட்டக் கதைகளிரண்டும், சில ஒற்றுமைகளும்! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன.  அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதை, போதமும் காணாத போதம் 07 என் கவனத்தை ஈர்த்தது. அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக்  கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். இருவரும் ஒரு நாள் சந்திக்கின்றார்கள்.  அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.

-  சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது.

“நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார்.

“அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன்.

சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார்.

வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன.  சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு  என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின.

துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான்.

புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. -


இப்பகுதியை வாசித்தபோது எனக்கு என் நாவலான 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' பகுதியின் இறுதிப் பகுதி நினைவுக்கு வந்தது. சிறுவன் என்பவன் தானிருந்த  அமைப்புக்குத் தன் நண்பன் ஒருவனை அழைத்துச் சென்று சேர்க்கின்றான்.  சேர்க்கப்பட்ட நண்பனை  அவனது இயக்கமே ஒரு கட்டத்தில் கொன்று விடுகின்றது. சிறுவன் தற்போது கனடாவில் வசிக்கின்றான். கொல்லப்பட்ட அவனது நண்பனின் தம்பியும் அண்ணன் கொல்லப்படக் காரணமாகவிருந்த சிறுவனைக் கொன்று பழி தீர்ப்பதற்காகக்  காத்திருக்கின்றான். இறுதியில் சிறுவனைக்கொல்ல பிஸ்டலுடன் கொல்லப்பட்டவனின் தம்பி வருகின்றான். அவனிடமிருந்து பிஸ்டலைத் திறமையாகப் பறித்தெடுத்த சிறுவன் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைத்துவிட்டு பிஸ்டலைக்கொடுத்து  நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறுகின்றான். அகர முதல்வனின் கதையில் தன் தந்தையைக் கொன்றவனைப் பழி வாங்க இயக்கத்தில் சேர்ந்தவனிடம் கொன்றவன் பிஸ்டலைக் கொடுத்து சுடு என்கின்றான்.

எனது கதை தொண்ணூறுகளில் தாயகம்(கனடா)இல்  வெளியானபோது அகரமுதல்வன் பிறந்திருக்க மாட்டார். அல்லது தவழும் பருவத்திலிருந்திருப்பார்.  ஆனால் என் நாவல் வெளியாகிச் சுமார் முப்பது வருடங்கள் கடந்து அகரமுதல்வனின் கதை வெளியாகியுள்ளது. இரண்டுக்குமிடையிலிருக்கும் ஒற்றுமை ஆச்சரியத்தைத் தந்தது. சில வேளைகளில் இவ்விதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரே மாதிரி ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே சிந்திப்பதுண்டு என்பதற்கு இவ்வொற்றுமை ஓர் உதாரணம்.

இப்பொழுது என் நாவலின் இறுதி அத்தியாயத்தை முழுமையாக வாசித்துப் பார்க்கவும். கிழே தந்திருக்கின்றேன்.

அத்தியாயம் 15: புதிய பாதை!

அதே சமயம் சிறுவனின் மனது துரிதமாக வேலை செய்தது. இந்தச் சமயத்தில் இவனோடு போவது உயிராபத்தாக முடியும். சிறுவன் சாவதற்கு பயப்படவில்லை. ஆனால் அதற்கிடையில் உண்மை வெளிப்பட வேண்டும். இந்தச் சமயத்தில் இவனுக்கு இயக்க ட்ரெயினிங் கை கொடுத்தது. மின்னல் வேகத்தில் செயற்பட்டான். வந்தவன் எதிர்பார்க்கவில்லை. தடுமாறி நிலைகுலைந்து போனான். வந்தவனின் கையிலிருந்த பிஸ்டல் கீழே விழவும் ஒடிச்சென்று அதனையெடுத்தபடி , அதனை நோக்கி ஓடி வந்த நண்பனின் தம்பி மீது இன்னுமொரு பலமான உதையை விட்டான். இவனது உதையால் மீண்டும் நிலைகுலைந்தவனது முகத்தில் பலமாகக் குத்துகளை இறக்கினான். இவனது குத்துகளின் வலிமையினாலும், எண்ணிக்கையினாலும் நிலத்தில் வீழ்ந்த நண்பனின் தம்பியைப்பார்த்துச் சிறுவன் கூறினான்:

"பயப்படாதை. உன்னை நான் கொல்ல மாட்டன். காரிலை ஏறு. நான் சொல்றபடி செய். உன்னோட ஒருக்கா வடிவா கதைக்க வேணும்'

வந்தவன் பதில் பேசாமல் காரில் ஏறினான். சிறுவன் பின்சீட்டில் அமர்ந்து கொண்டான்.

"எங்கே போகலாம்? கடைசியில் சிறுவனுக்கு பார்க் தான் சரியான இடமாக பட்டது.

"எங்க போக நண்பனின் தம்பி கேட்டான். பார்க்கிற்கு திரும்பு. நிலவும் விண்ணிலிருந்த நட்சத்திரங்களும் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

சிறுவன் கேட்டான். 'என்ன பிளானோட வந்தனி? அவன் மெளனமாய் இருந்தான். 'என்னைக் கொலை செய்ய பிளான், இல்லையோ'

இதற்கும் அவன் பதில் கூறாமல் மெளனமாக இருந்தான்.

'உன்ரை மெளனம் நான் கேட்டதற்கு சம்மதம். அப்படித்தானே'

இப்போது அவன் வாய் திறந்தான். 'உனக்கு பாசம் எண்டால் என்னவென்று தெரியுமா? என்ரை அண்ணையில் நான் எவ்வளவு பாசம் வைச்சிருக்கிறன் தெரியுமோ? என்ரை அண்ணை தன்ரை இயக்கத்தில. எங்கட நாட்டிலை, மக்களிலை, எவ்வளவு பாசம் வைச்சிருந்தவர். உன்னிலை எவ்வளவு பாசம் வைச்சிருந்தவர். அதாவது உனக்குத் தெரியுமோ? இப்படி கேட்டவன் திடீரென பேசுவதை நிறுத்தி கேட்டான்.

'இப்ப என்னை என்ன செய்யப் போறாய்? என்ரை அண்ணையைச் சாக் கொண்டது. மாதிரி என்னையும் முடிக்கப் போறியோ'

பயப்படாதை. நான் உன்னைக் கொல்ல மாட்டன்'

"பிறகென்னத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போறாய்"

"உனக்கு நடந்ததை எல்லாம் விளங்கப்படுத்த வேணும். அப்பதான் உனக்கும் உண்மை தெரியும். நான் படுற வேதனை விளங்கும்"

'உங்களுக்கு வேதனைப்படக் கூடத் தெரியுமோ? " அவன் இகழ்ச்சியாகச் சிரித்தான்.

“எத்தனை பேரை மண்டையில போட்டிருப்பியள்? சித்திரவதை செய்திருப்பியள்? எத்தனை பேரின்ரை முதுகை அயர்ன் பண்ணியிருப்பியள்? தோலை உரிச்சிருப்பியள்? நிகங்களை பிடுங்கியிருப்பீங்கள்? உங்களுக்கெல்லாம் வருத்தப்படக் கூடத் தெரியுமோ?

அவன் சிரித்தான்.

"நாங்கள் இயக்கத்தில் இருந்தனாங்கள். அதுக்காக உணர்ச்சிகளை இழந்து விட்ட சடங்களல்ல. எங்களுக்கும் உணர்ச்சிகளுண்டு. அதை நீ உணர வேண்டும். உன்ரை வேதனை எனக்கு நல்லாய் விளங்குது. பழி வாங்கிற அளவுக்கு அந்த வேதனைதான் உன்னை துரத்தி விட்டிருக்கு. அதனால தான் உன்னோட நான் வடிவாய் கதைக்க விரும்பிறன். என்னை தெளிவாக்க விரும்புறன். அதுக்குப் பிறகும் நீ என்னை கொல்ல விரும்பினால் நான் தடுக்க மாட்டன்'


இவ்விதம் கூறிய சிறுவனை நண்பனின் தம்பி ஒரு வித வியப்புடன் நோக்கினான்.

'பார்க் இரண்டாகப் பிரியுமிடத்தில் காரை நிறுத்தி நண்பனின் தம்பி கேட்டான்.

"இப்ப எந்தப் பக்கம் போறது"

"ரைட்டுக்கு திருப்பு. அந்த மூலையில் காரை நிப்பாட்டிப்போட்டு. அந்தா. அந்த மரங்களுக்கு பக்கத்தில் விரிந்து கிடக்குதே புல்வெளி, அங்கை பேசாமல் போ'

நண்பனின் தம்பி சிறுவன் சொன்னதை மறுபேச்சின்றி பின்பற்றினான். பார்க் அமைதியில் மூழ்கியிருந்தது. அந்தப் புல்வெளியில் தொலைவாக இருந்ததால் யாருமே கண்டுவிடப் போவதில்லை. ஆறுதலாக கதைக்கலாம்.

இருவரும் ஓரிடத்தை தெரிவு செய்து அமர்ந்து கொண்டார்கள். நண்பனின் தம்பிக்கும் தனக்கும் பாதுகாப்பு வலயமொன்றை ஏற்படுத்தும் தொலைவிலேயே சிறுவன் அமர்ந்திருந்தான்.

"சரி. உன்ரை பிரச்சனையை வடிவாய் சொல்லு, உன்ரை அண்ணையை நான் முடித்து விட்டேன் என்று தானே இந்த முடிவுக்கு வந்தாய்'

சிறுவனின் இந்தக் கேள்விக்கு நண்பனின் தம்பி 'ஆமென்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான்.

'நீ தான் அண்ணையை கைது செய்து கொண்டு போனாய். அதுக்குப் பிறகு நாங்கள் அவரைப் பாக்கவேயில்லை. உன்னை நம்பித்தானே அவர் உங்கட இயக்கத்திற்கு வந்தவர். உனக்கு ஞாபகமிருக்குதா?

‘என்னத்தைப் பற்றி"

"அண்ணாவை நீ இயக்கத்திற்கு கூட்டிக்கொண்ட புதிதில் அம்மா உன்னட்டை வந்து கதைத்ததைப் பற்றி கூறினவ. அது உனக்கு ஞாபகமிருக்கா"

'ஓம் அதுக்கென்ன"

"அப்ப நீ என்ன சொன்னனி?"

"நான் என்ன சொன்னேன். சரியாக ஞாபகம் வரேலை"

"அதெப்படி உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வரும். அம்மா எல்லாத்தையும் சொன்னவ. எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு"

இவ்விதம் கூறிய நண்பனின் தம்பி சிறிது நேரம் மெளனமாயிருந்தான். பின் தொடர்ந்தான்.

"நீ சொன்னியாம் அம்மாட்டை, அம்மா, உங்கட மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேணும். எங்கட சமுதாயத்தின்ரை விடுதலைக்காக போராடப் புறப்பட்ட அவனை உங்களை மாதிரி அம்மாமார் வீரத்தாய்மார்களாக நின்று வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமென்று சொன்னாயாமே. அதாவது உனக்கு நினைவிருக்குதா?"

'உண்மை தான்',

சிறுவனுக்கு எல்லாமே நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் இவன் அப்பொழுது கூறினான். எல்லாமே நன்றாக நினைவுக்கு வருகிறது. இதயம் லேசாக வலித்தது. நண்பனின் நினைவும் கூட எழுந்தது. அந்தப் பார்வை, ஏக்கம் படிந்து, நம்பிக்கை சிதைந்த முகம். நெஞ்சில் எழுகிறது. சிதைந்தது அவனது நம்பிக்கை மட்டுமா?

'கடைசியிலை நீங்களெல்லாரும் சேர்ந்து எங்கண்ணனைக் கொண்டு போட்டீங்கள். விடுதலையெண்டு சொன்னிங்கள். கடைசியில அவருக்கு உலகத்திலை இருந்தே விடுதலை கொடுத்திட்டீங்களேடா". அந்த இருட்டிலும் அவன் அழுவது தெரிந்தது. சிறுவனது வேதனையும் சற்றே அதிகரித்தது.

'தம்பி. சிறுவனின் குரலில் மெல்லிய கரகரப்பு தென்பட்டது.

'நீ சொன்னது அவ்வளவும் சரிதான். உங்கண்ணனை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பேரின் அழிவுக்கு காரணமாகத் தான் இருந்து விட்டோம். நீ சொன்னது போல் உங்கண்ணனை நான் தான் கைது செய்தேன். உண்மைதான். ஆனால் ஏன் கைது செய்தேன்?"

நண்பனின் தம்பி இவன் கூறுவதையே மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுவன் தொடர்ந்தான்.

'உன்ரை அம்மாவிடமும் நான் கூறியதெல்லாம் உண்மை தான். ஏன். உன்ரை அண்ணையைப் போலத் தான் நானும் விடுதலை வேணுமெண்ட பேராவேசத்திலை இயக்கத்திலை சேர்ந்தனான். நாட்டு விடுதலையை உயிருக்கு மேலாக நேசித்தவன். இதனால் தான் இயக்கத்தில் சேர்ந்தன். எங்கட மக்களின் விடுதலையைத் தவிர நான் வேறெதனையுமே எண்ணியிருக்கவில்லை. அதே சமயம் விடுதலைக்காக இயக்கத்திலை சேர்கிற ஒவ்வொருவனுக்கும் சில முக்கியமான கடமைகளுண்டு. கட்டுப்பாடுகள் உண்டு."

சிறிது நேரம் சிறுவன் மெளனமாக இருந்தான். ஆகாயத்தை நோக்கினான். நட்சத்திரங்கள் நகைத்தபடி இருந்தன. நிலவை மட்டும் சில கருமுகில் கூட்டங்கள் விழுங்கியிருந்தன. டொன்வலிப் பார்க்வேயும் ஆரவாரமின்றி சோர்ந்து போய்க் கிடந்தது. உடம்பை வருடிக் கொண்டு மெல்லிய குளிர் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. நீண்டதொரு பெருமூச்சு ஒன்று சிறுவனின் நாசியிலிருந்தும் வெளிப்பட்டது.

"ஆ. என்னத்தைப் பற்றிச் சொன்னேன். போராளியின் கடமைகளைப் பற்றியா? உண்மை தான். போராளிகளின் நிலைமை சிக்கலானது. இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். ஒரு புறம் நாட்டு விடுதலைக்காக துடிக்கிற நெஞ்சு, மறுபுறம் பந்த பாசங்களை உதறித் தள்ளிவிட்டு கடமையாற்ற வேண்டிய நிலைமை, கடமைக்கு குறுக்கே எது வந்தாலும் அவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு போராளியால் கருமமாற்ற முடியாது. ஒரு போராளியால் ஒரு போதுமே தனித்து செயலாற்ற முடியாது. அப்படி ஒவ்வொருத்தரும் தத்தமது உணர்வுகளுக்கேற்ப இயங்கத் தொடங்கி விட்டால் எல்லாமே சிதைந்து விடும். இப்படித்தான் ஒரு நிலைமையில் நான் இருந்தேன். இயக்கக் கட்டுப்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய சூழல். உன் அண்ணனுக்கெதிராக உளவாளி என்ற குற்றச்சாட்டு, என்னைக் கைது செய்யும்படி உத்தரவிட்டார்கள். நான் என்ன செய்ய? உன் அண்ணையை என் நண்பன் என்ர ரீதியில் அணுகி அவனைத் தப்ப வைப்பதா? அல்லது விடுதலைக்காக உயிரையும் அர்ப்பணித்த நிலையில் பந்த பாசங்களை துறந்து விட்டு கடமையைச் செய்வதா? நான் என்ன செய்ய? என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய் சொல்லு?"

நண்பனின் தம்பியை இந்தக் கேள்வி திகைக்க வைத்தது. சிந்திக்க வைத்தது. அவன் நிலையில் இவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்? பகவத் கீதையின் ஞாபகம் எழுந்தது. ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. தர்மப் போரில் பந்த பாசங்களை துறந்து விடு' சிறுவனின் நிலை சிக்கலானது தான். அப்படியென்றால் அவன் அண்ணையின் இழப்பிற்கு காரணம் யார்? யார் குற்றவாளி?

'பார்த்தாயா. உனக்கே பதில் சொல்ல முடியவில்லை. இது தான் எனது நிலைமை. அன்றைக்கிருந்த சூழலிலே நான் அப்படித்தான் செயல்பட வேண்டிய நிலைமை. ஆனால் இன்றைக்கு சிந்தித்துப் பார்க்கும் போது உன் அண்ணையைத் தப்ப வைத்திருக்கலாம் போல் படுகுது. இதனால் தான் சொன்னேன். போராளியின் நிலை இரு தலைக் கொள்ளி எறும்பு மாதிரி என்று. இயக்கக் கட்டுப்பாடுகளை ஏற்று பந்த பாசங்களை துறந்து கடமையாற்ற வேண்டிய நிலைமையில் இயக்கம் தவறான கோட்பாடுகளின் அடிப்படையில் செல்லும் போது பிழையான நடவடிக்கைகளை விடுதலை என்ற பெயரில் மேற்கொள்ளும்படி பணிக்கும் போது, ஒரு போராளியின் நிலைமை சிக்கலானது. ஒரு பிழையான செயலைச் சரியானதென்ற ரீதியில் செய்ய வேண்டிய நிலைமை. அதனைச் செய்யா விட்டால் இயக்கக்கட்டுப்பாடுகளை மீறுகின்ற நிலைமை. இதே சமயம் அந்தப் பிழையான செயலை, பிழையென்று தெரியாத நிலையில், செய்து விட்டாலோ, பின்னாளில் எத்தனையோ பேருக்கு மட்டுமல்ல. தன் மனச்சாட்சிக்கே பதில் சொல்ல வேண்டிய சிக்கலான நிலை. உன்ரை அண்ணை விசயத்திலும் நடந்தது இதுதான். உன்ரை அண்ணையை கைது செய்யும் போது நான் என்ரை இயக்கத்தில் முழு விசுவாசமாய் இருந்தனான். உன்ரை அண்ணையை விசாரித்துப் போட்டு விடுவதாக சொன்னார்கள். நானும் நம்பித்தானிருந்தன். ஆனா பிறகு தான் உள்ளுக்க நடந்த விசயங்கள் சில தெரியவந்தன. அதற்குப் பிறகு இத்தனை வருசமாய் நான் படுற பாடு. உன்ரை அண்ணையைப் போல எத்தனை பேர் முடிஞ்சு போச்சினம். என்னைப் போல் எத்தனை பேரின்ரை விடுதலைப் போரார்வம் மழுங்கடிக்கப்பட்டது? இதுக்கெல்லாம் யார் குற்றவாளி? சிறுவன் கேட்டான்.

'அது தான் நானும் கேக்கிறன். என்ரை அண்ணையின் முடிவுக்கு யார் குற்றவாளி? நண்பனின் தம்பி கேட்டான்.

சிறுவன் தொடர்ந்தான். "யார் குற்றவாளி? இயக்கத் தலைமைகளா? மத்திய குழு உறுப்பினர்களா? உளவுப் பிரிவினரா? இயக்கங்களின் ஆலோசகர்களா? இவற்றைக் கேள்வியின்றி பின்பற்றும் உறுப்பினர்களா? விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பிழையான இயக்க நடவடிக்கைகளை கைகொட்டி ஆரவாரித்து வரவேற்கும் சமுதாயமா? யார் குற்றவாளி? சிக்கலான பிரச்சனை. குற்றவாளியை இனம் காணுவதில் தான் இங்கு பிரச்சனையே! உதாரணத்திற்கு இயக்கத் தலைமைகள் இயக்க நலன்களிற்காக உளவுப் பிரிவிடம் தங்கியிருக்க வேண்டிய நிலைமை. இந்நிலையில் உளவுப்பிரிவு பிழையான தகவல்களின் அடிப்படையில் செயற்பட்டால் அல்லது பிழையாக செயற்பட்டால் அவ்விதம் செயற்படுகையில் ஏற்படும் விளைவுகளுக்கு தலைமையை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. அதே சமயம் சக்தி வாய்ந்த தலைமையின் ஆதிக்கத்திற்குட்பட்டு, செயற்படும் இயக்கத்தினரை தலைமையின் பிழையான நடவடிக்கைகளிற்கு முழுமையாக குறை கூற முடியாது. இதே சமயம் இயக்க உறுப்பினர்களில் கலந்திருக்கும் சமூக விரோத நடவடிக்கைகளிற்கான பொறுப்புகளையும் முற்றாக இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள், தலைமைகளின் மேல் சுமத்தி விட முடியாது. இது போலவே ஆலோசகர்களின் பிழையான வழிநடத்தலின் விளைவுகளையும் மற்றவர்களின் மேல் சாட்ட முடியாது. இது தான் சிக்கலானது. யார் குற்றவாளி?"

இடைமறித்த நண்பனின் தம்பி கேட்டான்.

"இப்படியான சூழ்நிலையில் தொடரும் போராட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? இதுவும் சிக்கலான பிரச்சனையல்லவா?"

'நீ சொல்வதும் சிக்கலான பிரச்சனை தான். ஆதரித்தால் குற்றத்திற்கு மேலும் உடந்தையாக இருக்கிறோம். எதிர்த்தாலோ. இன, மத, மொழி, அரசியல் ரீதியாக அடக்கப்படும் மக்களின் நியாயமானதொரு போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு முயற்சியில் ஈடுபட்டவர்களாவோம். அதே சமயம் பல்வேறு குழுக்களாக, பச்சோந்திகளாக செயற்படும் இயக்கங்களின் இன்றைய நிலையில் யாரை ஆதரிப்பது? யாரை எதிர்ப்பது? எந்த இயக்கத்தை ஆதரித்தாலும் ஏதோ ஒரு வகையில். முத்திரை குத்தப்பட்டு ஏதோ ஒன்றால் பாதிக்கப்படுவது நிச்சயம் தான். இது அடுத்த சிக்கலான பிரச்சனை. பிரச்சனைகளை இனம் காணுவதற்கும் குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கும், போராட்டத்தைச் சரியான வழியில் முன்னெடுப்பதற்குமிடையில் தான் எத்தனை சிக்கலான தடைச்சுவர்கள்."

"இவ்வளவு நாளும் நானும் ஒரு வித உணர்ச்சி வெறியிலை தான் உன்னை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தன். அண்ணை மேலிருந்த பாசம் கண்ணை மறைத்திருந்த நிலை. இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்த்ததேயில்லை. ஆனா சிந்திச்சுப் பார்க்கேக்கை இவைக்கெல்லாம் வழியிருப்பது போல் தான் படுகிறது"

‘என்ன வழியை நீ நினைக்கிறாய்"

'அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம், சாகடிக்கப்படுவதன் காரணம். விசாரணையின்றி விரைவாக தண்டனைகளை நிறைவேற்றுவதுதான்'

"நீ சொல்வதும் உண்மை தான். ஒரு தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால் தான். ஒவ்வொரு மனிதனதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்பட சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது தான். இருந்தாலும் மரண தண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்க ரீதியாக, சரியான வழியில், பிரச்சனை அணுகப்பட வேண்டும். தண்டனைகள் நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதேசமயம் ஒற்றுமையற்று, சிதைந்திருக்கும் எம் மக்களிற்கிடையே. இயங்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றை கெட்ட கனவாக மறந்து விட்டு, புதிய பாதையில் இனியாவது நடை போட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும். இவ்விதம் கூறிய சிறுவன் பிஸ்டலை எடுத்து நண்பனின் தம்பியிடம் கொடுத்தான்.

"நான் என்ன சொல்ல விரும்பினேனோ சொல்லி விட்டன். இனி உன் விருப்பம் எதுவோ அதன்படி நீ நடக்கலாம்."

பிஸ்டலை வாங்கியவன் ஒரு கணம் பிஸ்டலையும் சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தான். மறுகணம் ஏதோ எண்ணியவனாக ‘என்ரை அண்ணையின் முடிவிற்கு நீ மட்டும் காரணமில்லை. நாங்களெல்லாம் காரணம் தான். இந்நிலையில் உன்னைக் கொல்ல வந்த என்ரை முட்டாள்தனத்தை நினைக்க வெக்கப்படுகிறன். இவ்விதம் கூறிய நண்பனின் தம்பி பிஸ்டலை அருகிலிருந்த "கோ ட்ரெயின் தண்டவாளத்தின் மேல் வைத்து விட்டு வந்தான். வந்தவன் சிறுவனை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் தெளிவு இருந்தது. அந்த அணைப்பில் உறுதியிருந்தது. அந்த அணைப்பில் புதியதொரு பயணத்திற்கான தொடக்கத்தின் நேர்மையிருந்தது. அந்த அணைப்பில் நடந்தவற்றின் படிப்பினைகளிலிருந்து பெற்று விட்ட அனுபவ ஞானத்தின் சுடர் மிகுந்திருந்தது. அந்த அணைப்பில் ஒற்றுமையின் வலிமை செறிந்திருந்தது.

முற்றும்!

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்