Wednesday, March 27, 2024

கவிஞர் கண்ணதாசன் : நவீன கணியன் பூங்குன்றனார்!


'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்'

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. 'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

 

கோடிக்கணக்கான இப்புவியின் மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுகளுமற்று , புவியன்னையின் குழந்தைகளாகச் சேர்ந்து  வாழ  விடுதலை வேண்டும். அதிகாரத்தின் அடக்குமுறைகள் பற்றிய அச்சமற்று ஆடிப்பாடிடும் வகையில் விடுதலை பெற்றிட வேண்டும். பல்வேறு தளைகளுக்குள் அடிமைகளாக இப்புவியில் வாழும் மக்கள் அனைவருக்கும் அந்நிலை நீங்கிட விடுதலை வேண்டும். விடுதலை! விடுதலை! சகலவகைத் தளைகளுமற்ற பூரண விடுதலை! மானுடர் அனைவருக்குமான பூரண விடுதலை! அதுதான் வேண்டும்!

'ஆயிரத்தில் ஒருவன்' ஶ்ரீமுருகன் , வவுனியா திரையரங்கில் என் பால்யப் பருவத்தில் பார்த்த படம்.  

'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்' என்னும் வரிகளை உணர்வு பூர்வமாக அனுபவித்தவன். 1983 இனக்கலவரத்தில் நானும் நண்பன் அருளும் தெகிவளை நூலக வீதி வழியாகக் கடற்கரைப்பக்கம் சென்று, புகையிரதப்பாதை வழியாக ராமகிருஷ்ண மண்டபம் நோக்கி அடைக்கலம் நாடிச் சென்று கொண்டிருந்த சமயம். சுற்றிவரக் குண்டர்கள் அட்டகாசத்தால் கொழும்பு மாநகரே எரிந்து கொண்டிருந்த சமயம்.

நாமோ உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றோம். அப்பொழுது விண்ணில் பறவைகள் சில சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்பொழுது ஆனந்தமாகச் சுதந்திரமாகச் சிறகடித்துப்பறந்து கொண்டிருந்த அப்பறவைகள் மீது சிறிது பொறாமை கூட ஏற்பட்டது. எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடித்துக்கொண்டிருந்தன. அக்கணமும், அக்கணத்து உணர்வுகளும் அப்படியே நெஞ்சில் அழியாத நினைவுகளாகப் படிந்து விட்டன. அவ்வுணர்வுகளை எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்திருக்கின்றேன். அதில் நாவலின் முக்கியமான பாத்திரமான இளங்கோவின் 83 கலவரச்சூழல் விபரிக்கப்பட்டிருக்கும். அதில் பின்வருமாறு இக்கணங்கள் விபரிக்கப்பட்டிருக்கும்:

"வழியெங்கும் காடையர் கூட்டம் ஆர்ப்பரித்தபடி, கடைகள் எரிந்தபடி, வாகனங்கள் தலை குப்புற வீழ்ந்து எரிந்தபடி, ஆண்களும், பெண்களுமாகத் தமிழர்கள் அவசர அவசரமாக விரைந்தபடி, ஓடியபடி,... சூழலின் அகோரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருந்தது. இதுபற்றிய எந்தவிதக் கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைகள் சிலவற்றை ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன."

பறவைகள் விண்ணில் சிறகடிப்பது மிகச்சாதாரணமான விடயம். ஆனால் படைப்பின் சிறப்பினை வெளிப்படுத்துமோர் அம்சம் அச்சிறகடிப்பு. ஆனால் அவ்வரிகளை மேற்படி கலவரச்சூழலில் அவற்றின் சுதந்திரச் சிறகடிப்பின் அர்த்தத்தில் உணர்வு பூர்வமாக உணர்ந்தேன்.  இப்பாடலைக் கேட்கையில் என் பால்யப்பருவத்தில் திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் பார்த்த நினைவுகள் தோன்றும்; 83 இனக்கலவரத்தில் சுதந்திரமாக அப்பறவைகள் விண்ணில் சிறகடித்த தருணங்களில் ஏற்பட்ட உணர்வுகள் தோன்றும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. காரணம்: தமிழக அரசியலையே மாற்றி வைக்கக் காரணமாகவிருந்த திரைப்படமிது. இப்படத்திற்கான வாத்தியாரின் ஆடை அலங்காரங்கள் அவரது உடல் வாகுக்கு நன்கு பொருந்தி அழகாகவிருக்கின்றன.  குறிப்பாக இப்பாடலுக்கான அடை அலங்காரங்களைக் கூறலாம். இப்படத்தில் நடிக்கும் போது வாத்தியாருக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஜெயலலிதாவுக்கு இருபதுக்கும் கீழே. இருந்தாலும் எம்ஜிஆர் மிகவும் இளமையாகவும் , ஜெயலலிதா அவ்விளமைக்குப் பொருந்தும் வகையிலான வயதுள்ள முதிர்ச்சியுள்ளவராகவும் பொருந்தியிருப்பதையும் அவதானிக்கலாம். அவ்வளவுக்கு எம்ஜிஆர் தன் உடல் நலத்தைப் பேணி வந்தது எப்பொழுதுமே என்னை வியப்படைய வைப்பதுண்டு.

'ஆயிரத்தில் ஒருவன்'  திரைப்பட வசனங்கள் பல நினைவிலுள்ளவை. அதற்குக் காரணம் வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம்.  உதாரணத்துக்குச் சில:

'எனக்கு உங்கள் கொள்கையில் உடன்பாடு. வழியில்தான் முரண்பாடு'

'உங்கள் அதிகாரமென்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு'

இவையெல்லாம் திரைப்படத்தில் எம்ஜிஆர் கூறும் வசனங்கள். இன்னுமொரு கட்டத்தில் வில்லன் நம்பியார் எம்ஜிரைப்பார்த்துக் கர்ச்சிப்பார் 'மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?'. அதற்கு எம்ஜிஆர் பதிலளிப்பார்: 'சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்'.


முழுப்பாடல் வரிகளும் கீழே:

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

*************************************

இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ் & குழுவினர்
நடிப்பு: எம்ஜிஆர் , ஜெயலலிதா & குழுவினர்.

*************************************

பாடலைக் கேட்க: 

https://www.youtube.com/watch?v=ZSHe7gfCnW8

திரைப்படத்தை முழுமையாகப் பார்க்க - https://www.youtube.com/watch?v=hgNpAugsV18



No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்