இருப்பில் நீ இருந்த இறுதி நாள்
இன்று உனை நாம்
இருப்பின் வடிவம் நீ நீங்கிடினும்
இருக்கின்றாய் எம்மில்
உணர்வாய், உயிரணுவாய் நிறைந்து.
இருக்கின்றவரையில்
இருப்பாய் எம் சிந்தையில்
இன் நினைவுகளாய்.
'நவரத்தினம் டீச்சர்' என்று ஊருனை அறியும்.
நமக்கோ பாசமிகு 'அம்மா'.
அம்புலி காட்டி , அதிலிருக்கும் ஆச்சி பற்றி
அன்று நீ அன்னமூட்டிய தருணங்கள்
இன்றும் பசுமையாய் இருக்கின்றன.
அவ்வப்போது நீ பாடி
அகம் மகிழ்வித்த பாரதி பாடல்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டுள்ளன.
இரவு நீங்கும் முன எழுந்து
உணவு சமைத்து, பொதிகளாக்கி
உன்னுடன் பாடசாலை கூட்டிச் செல்வாய்.
உன் அரவணைப்பில் நாம் நடந்த
உவகை மிகு நாட்களவை.
கண்டிப்பிலும் உன்னால் கோப உணர்வுகளைக்]
காட்ட முடிந்ததில்லை.
கனிவு தவிர எதை நீ காட்டினாய்?
பின்னர் வளர்ந்து பெரியவனாகி
பிற தேசம் படிக்கச் சென்று
அவ்வப்போது ஊர் திரும்பி மீள்கையில்
அதிகாலையெழுந்து , உணவு சமைத்து,
அகமகிழ்வுடன் பின்னர் உண்ண
அதனைப் பொதியாக்கித் தருவாய்.
தொடருந்து நிலையம் நோக்கிச் செல்கையில்
தொலைவு நோக்கிச் செல்லும் மகன் நோக்கித்
தொடர்ந்து வரும் உன் பார்வை.
வாசலில் நீ நிற்கும் கோலமும், உன்
வதனத்தில் படர்ந்திருக்கும் மெல்லிய சோகமும்,
அதிகாலை மெல்லிருளில் தலைவிரிக்கும் பனைப்பெண்களின்
சரசரப்பைக் கேட்டுச் செல்லும் என்னை இன்றும்
தொடர்ந்து வரும் விந்தையென்ன!
அன்னையே! எம் தெய்வம் நீ!
அன்னையே! எம் உயிர் நீ!
அன்னையே!
இருக்கும் வரை எம்
இருப்பின் வழிகாட்டி நீ.
No comments:
Post a Comment