Friday, April 19, 2024

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!


    எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
     
    என்.எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். எம்ஜிஆரது ஈகைக்குணத்துக்கு முக்கிய காரணமே என்.எஸ்.கே தான் என்று விமர்சகர்கள் கூறுவர். பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய 'சமூக விஞ்ஞானி கலைவாணர்' என்னும் கலைவாணரின் வாழ்க்கை வரலாற்று நூலில் 'கலைவாணரும் எம்ஜிஆரும்' என்னும் இருபதாம் அத்தியாயத்தில் சுவையான , முக்கியமான விபரங்களுள்ளன. அன்புக்கொடி நல்லதம்பி கலைவாணரின் மகன் நல்லதம்பியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 
     

    1978இல் தமிழகத்தில் நடைபெற்ற என்.எஸ்.கே நினைவு நாள் நிகழ்ச்சியில் 'எனது 17ஆவது வயதிலேயே எனக்கு அரசியலைச் சொல்லித்தந்தவர் கலைவாணர்' இன்று அவர் இருந்திருந்தால் அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார்' என்று கூறியிருக்கின்றார்.
     
    கலைவாணரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த எம்ஜிஆர் அவர் மறைவுக்குப்பின்னர் கலைவாணரின் குடும்பம் வறுமையில் வாடியபோது பல உதவிகளைச் செய்திருக்கின்றார். அவை இவ்வத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
     
    கலைவாணரின் மூத்த மகன் நல்லதம்பி பொறியியல் படிக்க நிதி உதவி செய்திருக்கின்றார்.
     
    கலைவாணரின் குழந்தைகளான கிட்டப்பா, சண்முகம், நல்லதம்பி, குமரன், வடிவா, கஸ்தூரி, பத்மினி ஆகியோரின் திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்திருக்கின்றார். 
     
    கலைவாணர் தம் மனைவியின் பெயரில் கட்டிய இல்லமான மதுர பவனம் ஏலத்தில் வந்தபோது அதை ஏலம் எடுத்துக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கின்றார் எம்ஜிஆர்.
     
    அண்மையில் யு டியூப்பில் கலைவாணரின் மகள் வடிவாம்பாளின் நேர்காணலொன்றைப் பார்த்தேன். அதில் அவர் தனது இல்லத்துக்கு ஜானகி- ராமச்சந்திரன் இல்லம் என்று பெயர் இட்டிருப்பதோடு, வீட்டில் நுழைந்ததும் பார்க்கும் வகையில் எம்ஜிஆரின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் விபரத்தையும் குறிப்பிட்டிருப்பார். அந்நேர்காணலைப் பின்வரும் காணொளியில் பார்க்கலாம். 
     
     
    என்.எஸ்.கிருஷ்ணனின் குழந்தைகள், பேரப்பிள்ளைகளில் பலர் மருத்தும், பொறியியல், வர்த்தகம் எனப் பல்துறைகளில் கலிவித்தகமைகள் பெற்று தமிழகம், ஐக்கிய இராசியம், அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளில் நல்ல நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதையும் மேற்படி கலைவாணர் பற்றிய நூல் எடுத்துக்காட்டுகின்றது. மகன்களின் ஒருவரான சண்முகம் அவர்களின் மகள் ரம்யா மட்டும் திரைப்படப் பாடகியாகவுமிருக்கின்றார். அவரும் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனமொன்றில் வேலையும் பார்க்கின்றார்.
     

     

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்