Friday, January 24, 2025

ஓவியர் மாயாவின் மாயாலோகம்!


எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை. ஓவியர் மாயாவின் இயற்  பெயர் மகாதேவன். ஜனவரி 22 அன்று தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் முதுமையின் காரணமாக ஓவியர் மாயா மறைந்த செய்தியினை அறிந்தபோது மாயாவின் ஓவியங்கள் சிந்தையில் நிழலாடின. என் பால்ய, பதின்மப் பருவத்து வாசிப்பு அனுபவத்தில் ஓவியர் மாயாவின் ஓவியங்களுக்கும் முக்கிய பங்குண்டு.  அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு.

எழுபதுகளில் எழுத்தாளர் மணியன் விகடனின் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார். அவரது தொடர்கதைகள் அக்காலகட்டத்தில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப்பெற்றிருந்தன. 'காதலித்தால் போதுமா' வில் தொடங்கி, நீரோடை, இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், தேன் சிந்தும் மலர், உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னைப் பாடச்சொன்னால் என்று விகடனில் தொடர்கதைகள் பலவற்றை எழுதினார் மணியன். மணியனின் அந்நாவல்களில் நடமாடும் நடுத்தரவர்க்கத்து மானுடர்களை அற்புதமான உயிரோவியங்களாக்கியிருப்பார் மாயா. இன்றும் என் மனத்தில் உண்மை சொல்ல வேண்டும் நாவலின் கண்ணாடி அணிந்த நாயகி, மீனாட்சி என்ற பெயராக நினைவு , நினைவில் நிற்கின்றார் என்றால் அதற்குக் காரணம் ஓவியர் மாயாதான். மணியன் குமாரி பிரேமலதா என்னும் பெயருக்குள் மறைந்திருந்து நியூ வேவ் கதையென்று வெளியான 'லவ் பேர்ட்ஸ்' நாவலுக்கு மட்டும் ஓவியர் ஜெயராஜ் ஓவியங்கள் வரைந்ததாக நினைவு.

மணியனின் நட்சத்திர மதிப்பே அவரை உலகமெங்கும் அனுப்பி 'இதயம் பேசுகிறது' பயணத்தொடரை விகடன் நிறுவனம் எழுத  வைத்ததற்கு முக்கிய காரணம். அதுவே பின்னர் அவரை விகடனுக்குப் போட்டியாக 'இதயம் பேசுகிறது' சஞ்சிகையை ஆரம்பிக்க வைத்ததற்கும் முக்கிய காரணம். விகடனிலிருந்து விலகிய மாயா பின்னர் மணியனின் இதயம் பேசுகிறது சஞ்சிகையுடன் இணைந்து கொண்டார்.

 - மெரீனாவின் 'தனிக்குடித்தனம்' நாடகத்துக்கான ஓவியம்..


எழுத்தாளர் ஜெயகாந்தனின் பல குறுநாவல்கள், முத்திரைச் சிறுகதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் மாயா. ஜெயகாந்தனின் வாதப்பிரதி வாதங்களைக்கிளப்பிய 'அக்கினிப் பிரவேசம்' குறுநாவல், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, இறந்த காலங்கள் (மாத நாவல்), அந்தரங்கம் புனிதமானது, அக்ரஹாரத்துப் பூனை ஆகிய கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் மாயா.

கலைமணியின் (கொத்தமங்கலம் சுப்பு)  'மிஸ் ராதா', இந்துமதியின் 'மலர்களிலே அவள் மல்லிகை', மெரீனாவின் தனிக்குடித்தனம் (நாடகம்), தாமரை மணாளனின் 'ஆயிரம் வாசல் இதயம்', ஆயிரங்கள் எண்ணங்கள் உதயம்' ஆகிய நாவல்களுக்கும் ஓவியம் மாயாதான். மேற்குறிப்பிட்டுள்ள ஓவியர்களின் ஓவியங்கள் தனித்துவமானவை. ஓவியங்களிலிருந்து வரைந்தவர்கள் யார் என்பதை இலகுவாகக் கண்டு பிடித்து விடலாம்.

ஓவியமே வாழ்வாக வாழ்ந்து ,நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் ஓவியர் மாயா. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.



No comments:

நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -

[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.] தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்க...

பிரபலமான பதிவுகள்