'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, January 12, 2025
உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை'
பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.
நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.நாவல் கூட்டுக்குடும்பமொன்றின் சிதைவைக் கூறுகிறது. அக்குடும்பத்தின் தலைவர், அவர் மனைவி, பிள்ளைகள் (புத்திரர்கள் & புத்திரி), மருமகள்கள், மருமகன், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தலைவரின் துணைவி என நாவலில் பல பாத்திரங்கள். நாவலில் மருமகள்களில் ஒருத்தியான வினோதினி, குணா (அவளது கணவனின் சகோதரன்) ஆகியோரின் ஆளுமைகள் ஓரளவுக்கு விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய பாத்திரங்கள் முழுமையாக வார்த்தெடுக்கப்படவில்லையென்று வாசிக்கையில் தோன்றியது. மிகவும் விரிவாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதைப்பின்னலைக் கொண்ட நாவல் சிறு நாவலாக உருவெடுத்துள்ளது போல் உணர்ந்தேன்.
இன்னுமொரு வகையில் நாவல் சிறப்பாக மாறிவரும் சமூக, பொருளியற் சூழலில் கூட்டுக் குடும்பங்களின் சிதைவுகளை வெளிப்படுத்துகிறது,. அவ்வகையில் கூட்டுக்குடும்பச் சிதைவை வெளிப்படுத்தும் நல்லதொரு குறியீட்டு நாவலாகவும் கருதலாம். நாவல் அக்கூட்டுக்குடும்ப அங்கத்தவர்களின் வாழ்க்கையை விபரிப்பதில் கவனம் செலுத்தியிருந்தாலும், அதிகமான கவனத்தை மருமகள்களில் ஒருத்தியான விநோதினி மீதே செலுத்துகிறது. அவளுக்கு எவ்வகையிலும் பொருந்தாத குடிகாரக் கணவன், அவன் தம்பியுடனான அவளது தொடர்பு, அதன் விளைவாக உருவாகும், கரு, கருச்சிதைவு இவையே நாவலில் அதிக கவனம் பெறுகின்றன. இறுதியில் குடும்பத்தலைவரின் மறைவைத்தொடர்ந்து அவளே அக்குடும்பத்தின் பாகப்பிரிவினைக்கும் முக்கிய காரணமாக இருப்பதாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அவளுக்கு அடுத்து அதிக கவனம் பெறுவதில் நினைவில் நிற்பவள் வீட்டுப் பணிப்பெண் சுப்பக்கா. அவள் மீதான இன்னொரு வேலையாளின் வன்புணர்வும், அதனை அறியாத வீட்டுப் பெரியவர் அவளுக்கும் இன்னுமொரு பணியாளுக்கும் மணம் செய்து வைக்க நினைக்கும்போது அவள் மறுப்பதையும், தன் உயிரை மாய்த்துக்கொள்வதையும் நாவல் விபரிக்கின்றது.
நாவல் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, அக்குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள், எதிர்ப்படும் பிரச்னைகள், பொருந்தா மணம், பெண் மீதான ஆணின் வன்முறை, பெண்ணைப் போகப்பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்க மனநிலை, பொருந்தாக் காமம், பொருந்தா மணம் எனப் பல்வேறி விடயங்களைத் தொட்டுச் சென்றாலும் இதன் முக்கியத்துவம் எவ்விதம் கூட்டுக் குடும்பமொன்று மாறி வரும் சூழல்களுக்கேற்பச் சிதைவடைகின்றது என்பதை எடுத்துக்காட்டுவதில்தானுள்ளது.
நாவலின் இன்னுமொரு சிறப்பமசம் அதன் மொழி. உமா மகேஸ்வரி கவிஞரும் கூட. அவரது கவித்துவ மொழி நாவலில் ஆங்காங்கே வெளிப்படுவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக இரவு பற்றிய கவித்துவ விபரிப்புகளை நாவலின் பல இடங்களில் காண முடிவதால் வாசிக்கையில் அவை கவனத்தை ஈர்க்கின்றன. இரவை, இருளை ஏன் அதிகமாக நாவலாசிரியர் விபரிக்கின்றார் என்னும் கோணத்தில் நாவலை நோக்கையில் இரவு கூட்டுக் குடும்பச் சிதைவை வெளிப்படுத்தும் ஒரு படிமமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
'இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது' என்று நாவல் ஆரம்பமாவதும் இவ்விதமான எண்ணத்தைத்தூண்டுகின்றது. அந்த வீட்டு ஆழ்ந்த அமைதி மிக்க இரவால் நிரம்பியிருக்கும் கொள்கலனாக அமைந்திருக்கிறது அந்த வீடு. அந்த இருளே அவ்வீட்டின் சிதைவுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.
இரண்டாம் அத்தியாயம் 'தலைமறைவாகியிருந்த இருள் பதுங்கிப் பதுங்கி வெளியே வந்தது' என்று ஆரம்பமாகின்றது. இன்னுமோர் அத்தியாயம் 'அம்மாவின் முகம் களைத்திருக்கிறது. இருள் தனிமை குவித்து நகர்கிறது' என்று ஆரம்பமாகின்றது. இன்னுமோர் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் 'விடிந்த பிறகும் கூட இரவு தொடர்வதாகவே ஒரு கனத்த சுமை மனத்தை அழுத்திக்கொண்டிருந்தது' என்று வரும். மேலுமொரு அத்தியாயம் ' இருட்டுக் கட்டிவிட்டது. எல்லா அறைகளும் தூங்கி விட்டன' என்று தொடங்கும். 'தனித்தனி இருட் சதுரங்களாக அறைகள் மிதக்கும் அந்த வீட்டை' என்று தொடங்கும் வேறோர் அத்தியாயம். மேலும் 'இரவு சலனமில்லாமல் ஜன்னலில் உட்கார்ந்திருந்தது.', 'அன்று இருள் மிகவும் அடர்த்திதான். மிகவும் அச்சத்தோடும் அவள் அறையின் ஜன்னல் கண்ணாடிகளுக்குள் அது திடமாக இறங்கியிருந்தது', 'இரவு மிக வேகமாக நகர்வதாகத் தோன்றியது..', 'இரவு என்பது மிகவும் நீண்டது. அதிலும் தன்னைப்போன்ற உயிருக்கு அது மிகவும் கொடியது' என்று நாவலில் பல இடங்களில் இரவு விபரிக்கப்பட்டிருக்கும்.
என் முதற்கட்ட மேலோட்ட வாசிப்பு நாவலை மீண்டுமொரு தடவை விரிவாக, ஆறுதலாக வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றது. வாசிப்பேன்.
Subscribe to:
Post Comments (Atom)
உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை'
பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment