Monday, January 27, 2025

எழுத்தாளர்களின் கவனத்துக்கு....


அவ்வப்போது இலக்கிய உலகில் ஆதங்கங்கள் சில எழுவதுண்டு. யாராவது பிரபலமான தமிழக எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு ஏன் அவரது பட்டியலில் நம்மவர் பெயர் இல்லை என்று கேள்வி கேட்டு ஆதங்கப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றேன்.

தமிழக வெகுசனப் பத்திரிகைகளில் இடம் பெறுவதால் அல்லது பிரபல இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெறுவதால் வேண்டுமானால் ஓரளவு அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைக்கலாம். ஆனால் வரலாற்றில் உங்களை நிலை நிறுத்தப்போவது இவ்வகையான அறிமுகங்கள் அல்ல.

உங்களை வரலாற்றில் நிலைநிறுத்தப்போவது உங்கள் எழுத்துகளே.கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தாம் இன்று அவரை எமக்கு அறியத்தருகின்றன. சிலப்பதிகாரம்தான் இளங்கோவடிகளை எமக்கு அறியத்தருகின்றது. அவர்கள்தம் எழுத்துகளே நிலைத்து நிற்கின்றன. அவர்களைப்பற்றிய ஏனையோர் புகழுரைகள் அல்ல. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவேண்டுமென்பதற்காக எழுதாதீர்கள். உங்களுக்குச் சரி என்று பட்டதை எழுதுங்கள்.  உங்களைப் பாதித்த அனுபவங்கள்  தந்த ஞானத்தின் அடிப்படையில் எழுதுங்கள். ஒருவரைத் திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காக எழுதாதீர்கள்.

முதலில் உங்கள் எழுத்து உங்களுக்கு இன்பத்தைத்தர வேண்டும். உங்கள் சிந்தனையின் தெளிவு அதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் அவை வாசகர்களையும் பற்றிக்கொள்ளும்.

நான் அவதானித்ததன்படி தமிழகத்தில் கலை உலகிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி ஆளுமை வழிபாடு மிகவும் அதிகம். இவ்வீர் உலகங்களிலும் உச்ச நட்சத்திரங்கள் உள்ளன. உச்சநட்சத்திரங்களின் கடைக்கண் பார்வை தம் மேல் விழாதா என்று எதிர்பார்க்கும் எவராலும் சிறந்த இலக்கியம் படைக்க  முடியாது. நல்ல எழுத்துகள் இவ்வித ஆசைகளின் வெளிப்பாடுகளாக ஒருபோதும் இருக்க முடியாது.

எவ்வித  எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எழுதுங்கள். உங்கள் அனுபவம், அறிவின் தெளிவு இவற்றின் விளைவாக நீங்கள் வந்தடைந்த அறிவின் விளைவாக, சக மானுடர்களுடன் அவ்வறிவைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு எழுதுங்கள்.

உங்கள் எழுத்துகளில் சிறப்பிருந்தால், மானுட நேயமிருந்தால், சமுதாயப் பிரக்ஞை இருந்தால், கலைத்துவமிருந்தால், படைப்பாற்றல் இருந்தால் நிச்சயம் அவை காலத்தை வென்று வாழும்.

No comments:

நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -

[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.] தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்க...

பிரபலமான பதிவுகள்