Saturday, January 11, 2025

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!


எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய  இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து  வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.

அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள்  இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.தான் வாசித்த படைப்புகள் பற்றி இவர் தினகரனில் எழுதிய பத்தி எழுத்துகள் முக்கியமானவை. தான் சந்தித்த கலை, இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய இவரது கட்டுரைகளும் முக்கியமானவை. ஆவணச்சிறப்பு மிக்கவை.

ஈழத்தில் தமிழ் நாடகம், காந்தி நடேசய்யர், அ.ந.க  ஒரு சகாப்தம்' உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.  அந்தனி ஜீவாவுடன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், எண்பதுகளின் இறுதியில் கடிதம் மூலம் தொடர்பிருந்தது. அப்பொழுது கடிதங்கள் சில எழுதியிருந்தார். அவர் வெளியிட்ட கொழுந்து சஞ்சிகையின் பிரதிகள் சிலவற்றையும் அனுப்பியிருந்தார்.

இவரைப் பற்றிய நூலகம் தளத்தின் அறிமுகம் வருமாறு:

ஆளுமை:அந்தனி ஜீவா| பெயர் - அந்தனி ஜீவா | பிறப்பு - 1944.05.26| ஊர் - கொழும்பு

அந்தனி ஜீவா (1944.05.26 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர்; கவிஞர். இவரது தந்தை செபஸ்டியன்; தாய் லட்சுமி அம்மாள். கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்புளோமா பட்டம் பெற்றுள்ளார். தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் ஆசிரியர். லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

நாடகத்துறையிலும் பங்களித்துவரும் இவர் எழுதிய முதல் நாடகமான 'முள்ளில் ரோஜா' 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார். இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தினார்.

ஈழத்தில் தமிழ் நாடகம் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசையர் (1990), மலையகமும் இலக்கியமும் (1995), முகமும் முகவரியும் (1997), மலையக மாணிக்கங்கள் (1998), அக்கினிப் பூக்கள் (1999), சி. வி. சில நினைவுகள் (2002) குறிஞ்சிக் குயில்கள் (2002), மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகம் வளர்த்த கவிதை (2002), கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002), திருந்திய அசோகன் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2003), மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம் (2007), ஒரு வானம்பாடியின் கதை (2014), அ.ந.க ஒரு சகாப்தம் போன்றவை இவரது நூல்கள். தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்களின் எழுத்துக்களைத் தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

No comments:

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். இலங்க...

பிரபலமான பதிவுகள்