Friday, January 17, 2025

எம்ஜிஆரின் பிறந்த தினம் ஜனவரி 17!


எம்ஜிஆரின் பிறந்த தினம் ஜனவரி 17.

இந்தியத் தமிழ்த் திரையுலக வரலாற்றில், தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு முக்கியமானதோரிடமுண்டு. தமிழர்களுக்கு எப்பொழுதுமே காதல், வீரம் என்பதில் பெரிதும் ஈர்ப்பு உண்டு. சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து இன்று வரையிலான இலக்கியங்களில் இந்த ஈர்ப்பு இருப்பதைக் காண முடியும். தமிழ்த் திரையுலகில் இதனை நன்கு பயன்படுத்தியவராக எம்ஜிஆரை நான் காண்கின்றேன். தமிழ்த்திரையுலகில் கோலோச்சினார். பின்னர் தமிழக அரசியலிலும் முதல்வராக இருந்தவரையில் கோலோச்சினார்.

இவரது பெற்றோர் பற்றியும், இவருக்கு ராமச்சந்திரன் என்னும் பெயர் வந்தது பற்றியும் சுவையான தகவல்களைப் பகிர்கின்றது விக்கிபீடியா:

"இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா பெற்றோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு அந்தமான்தீவிலுள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலேயர்கள் பயங்கர சூழ்ச்சியில் சிக்க வைக்க கோபாலன் மேனனை ஆட்படுத்தினர். அதன் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார். பின்பு காவல் துறையில் பணியாற்றிவந்த அவரது நண்பர் வேலுபிள்ளை என் பவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

எம். ஜி. ஆருக்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்படக் காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் "சந்திரன்" என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் "ராம" என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்."

எம்ஜிஆரின் படப்பாடல்களில் காதற் பாடல்கள் , குறிப்பாக டி.எம்.செளந்தரராஜன் & பி,.சுசீலா, ஜேசுதாஸ், வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடிய பாடல்கள் பல மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாகத் திரையிசைத் திலகம் கே.,வி.மகாதேவன் இசையில் வெளியான பல பாடல்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

எம்ஜிஆர் இயக்கத்திலும் திறமையானவர் என்பதை அவரது இயக்கத்தில் வெளியான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவை எடுத்துக்காட்டின. அடிமைப்பெண் திரைப்படத்தையும் உண்மையில் அவரே இயக்கியதாகக் கூறுவர்.

அவர் கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதையும் அறிய முடிகின்றது. அவர் நடிக்க வந்த காலகட்டத்தில் கதாநாயகனுக்கு நடிப்பதுடன் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவே அவர் கர்நாடக சங்கீதத்தையும் கற்றிருந்தார். ஆனால் அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோது தமிழ்ச்சினிமா பாட்டிலிருந்து பேச்சுக்கு அதாவது வசனத்துக்கு மாறிவிட்டது. நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் பாடும் பாடகர்கள் வந்து விட்டார்கள். அதனால் அவர் பாடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவரது கர்நாடகச் சங்கீத அறிவு அவருக்குச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்யும் ஆற்றலைத் தந்துவிட்டது. அவரது பெரும்பான்மையான படங்களில் அவர் பாடல்களைக்கேட்டுச் சரி என்று கூறினாலே அவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கூறுவர்.

அதற்காக அவர் வாள், சிலம்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததுடன், குதிரையேற்றத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் எம்ஜிஆர் திரைப்படங்களில் வாள் வீச்சு, சிலம்பாட்டம், சண்டக்காட்சிகள் எல்லாம் மக்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. இன்னுமொரு முக்கிய விடயம் - அவரது படங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கும். வன்முறை இருக்காது. இறுதியில் பெரும்பாலும் வில்லனும், கதாநாயகனும் பகை மறந்து அன்பால் இணைவதாகக் காட்சிகள் அமைந்திருக்கும்.

எம்ஜிஆரின் திரைப்படங்களில் முக்கியமாக நான் கருதுவது கருத்தாழம் மிக்க அவரது திரைப்படப் பாடல்கள். ஆரோக்கியமான, வாழ்வுக்கு வழி காட்டும் கருத்துகளைப் பெரும்பாலும் உள்ளடக்கியவையாக அமைந்திருக்கும். இன்றுவரை அவரது அத்தகைய பாடல்களைக் கேட்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு.

வாசிக்கும் பழக்கம் அற்ற மக்களுக்கு இப்பாடல்கள் அறிவுரைகள் கூறும் பாடல்களாக அமைந்திருப்பது ஆரோக்கியமான அம்சம்.

மேலும் நல்ல கருத்துகளை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அக்கருத்துகள் கேட்பவர்தம் மனங்களில் ஆழமாகச் சென்று பதிகின்றன. அவர்கள் தம் வாழ்வுக்கு ஆரோக்கியமாக உதவுகின்றன. இவ்வகையில் எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க திரைப்படப்பாடல்கள் ஆரோக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

என் அப்பா பாகவதர்ம், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியின் படங்களைப் பார்த்து வளர்ந்தவர். அவரது சுப்பர் ஸ்டார்கள் அவர்கள். எம் தலைமுறையினர் எம்ஜிஆர், சிவாஜி, சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் வளர்ந்தவர்கள். எம் சுப்பர் ஸ்டார்கள் இவர்களே.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபின்னர் அரசியல் மூலம் தனது சொத்துக்களைப் பெருக்காதவர். தான் இறந்த பின்னரும் தனது சொத்துக்களைக் கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்களுக்கு உதவும் வகையில் உயில் எழுதி வைத்துச் சென்றவர். அவரது சத்துணவுத்திட்டம் முக்கியமான அவரது சாதனை. காமராஜரின் காலத்தில் உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் தொடரவில்லை. அதனை மேலும் சீர்படுத்திச் சத்துணவுத்திட்டமாக்கி நிலைக்க வைத்தவர் எம்ஜிஆர்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தனியார்ப் பொறியியர் கல்லூரிகள், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், இவையெல்லாம் எம்ஜிஆரின் முக்கியமான சாதனைகள்.

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், மெல்லிசை மன்னர்களின் இசையில். எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' பாடல். - 



அதோ அந்த பறவை போல வாழவேண்டும்.

- கவிஞர் கண்ணதாசன் -

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்.
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே.
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே.
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே.
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே.
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே.
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே.
போகும்போது வேறு பாதை போவதில்லையே.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை.
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை.
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை.
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

https://www.youtube.com/watch?v=ZSHe7gfCnW8

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்