எனது 'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:
"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"