Tuesday, September 19, 2023

(பதிவுகள்.காம்) அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -


எனது  'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை.  பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.


சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு.  அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும்.  இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும்  படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது.  அவர் சொல்கிறார்:

"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"இங்குள்ள  ஏழு சிறுகதைகளிலும் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு, அந்த உறவு காரணமாக ஏற்பட்ட பிணக்குகள், அப்பிணக்குகள் காரணமாக ஏற்பட்ட சில அபிப்பிராயங்கள், அல்லது கருத்துகள் பற்றிய நண்பர் கிரிதரன் அவர்களின் கோட்பாடே மேலோங்கி நிற்கிறது.



கதைகளின் தொடக்கமும் முடிவுகளும்:

கதைக் கருவை வளர்த்து அதை வெளிப்படுத்தக் கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் அவர் காட்டும் நுணுக்கம்  அவரது முதலாவது  கதையான 'மான்ஹா'லில் 'ஜெயகாந்தனின் ரிஷி மூலத்தில் வரும் ராஜாராமனைப்போல் தாடி மீசை வளர்த்திருந்தான்..' என்று சொல்லி , மான் தோலில் அமர்ந்திருந்த சாமியாரைப்போல் மான்ஹோலில் அமர்ந்திருந்த தோற்றம் இருந்தது.  இவன் நடைபாதை நாயகர்களில் ஒருவன் என்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி.

இங்கு இரண்டு பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று 'ஹொட்டோக்' விற்பவர். மற்றையவர் அக்கதையின் கதாநாயகன். முதற் பந்தியின் அறிமுகப்படுத்தப்படலிலேயே அவர்தான் கதையின் நாயகன், அவரைச்சுற்றியே கதை வளரப்போகின்றது என்று வலு சுருக்கமாக எட்டு வரிகளில் காட்டி விடுகிறார்.

கதையை முடிக்கையில் மான்ஹோல் மூடியைத்திறந்த அந்தச் சீவ் 'என் கடவுளே' என்று கத்தினான். என்னைப் பொறுத்தவரையில் கதை என் கடவுளே என்பதோடு முடிந்து விட்டது. ஆனால் ஆசிரியர் இன்னுமொரு பந்தியோடு கதையை முடிக்கிறார் மிகக் கவனமாகவும் தொய்வு இல்லாமலும்.

"தொலைவில் இருளில் ரொமானெஸ்க் கட்டக்கலைப்பாணியில் அமைந்த ஒன்டாரியோப் பாராளுமன்றம் அழகாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து அவர்கள் சட்டம் இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்" என்று.

இரண்டாவது  கதையான 'பொந்துப் பறவை'யிலும் இந்த உத்தியைக் காணக்கூடியதாய் உள்ளது.

முதற்பந்தியில் முருகேசனுடைய வலி பற்றிய அறிமுகத்தைத் தருகிறார். இந்த அறிமுகம் முருகேசனுக்கும் வலிக்குமிடையியே ஒரு தொடர்பை ஏற்படுத்த இருப்பதான ஒரு எதிர்பார்ப்பை  எங்களிடம் ஏற்படுத்தி கதையின் இரண்டின் மூன்று பங்கின் முடிவில் கதையைத் திசை திருப்புகிறார் மூன்று வரிகள் மூலம்.

'முருகேசன் எழும்புவதற்கு முயன்றான். மூட்டு பலமாக வலித்தது. இலேசான மணமொன்று மூக்கைத்துளைத்தது."

இங்குதான் நான் ஆசிரியருடைய கதை வளர்க்கும் கலையின் நுட்பத்திறனைக் காண்கின்றேன்.

அந்த நான் கண்ட சஸ்பென்ஸைக் கடைசிப் பந்திவரை வைத்துவிட்டு தான் சொல்ல வருவது வலி பற்றியது  அல்லது வலியினால் ஏற்பட்ட  கருத்து மாற்றம் என்பதை இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறார்.

".. அவன் முதன் முதலாகக் கறுப்பர்களைப் பற்றிய கணிபீட்டை மாற்றியது அன்றுதான். அந்த மாற்றம் கூட சுயநலத்தால் விளைந்ததை எண்ணி  முருகேசன் வெட்கப்பட்டான்."

சுண்டெலி என்ற கதையிலும் இதே உ த்தியைக் கையாள்கிறார்.

கடைசிக் கதையான ஒரு முடிவும் விடிவும் என்பதை மிக அழகாகத் தொடங்கி அழகாக முடிக்கிறார்.

"மெல்ல மெல்ல இருண்டு கொண்டிருந்தது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப்போன கதிரவன் பொங்கி எழுந்த  காதலுடன் அடிவானைத் தழுவி தன்னை மறந்து கொண்டிருந்தான்' எனத் தொடங்கி 'அடிவானோ கதிரவனின் முழுமையான இழப்பில் தழுவலில் நாணிக் கிடந்தது' என்று முடிக்கிறார்.

சமகால நிகழ்வுகள்


இவருடைய எல்லாக் கதைகளிலும் சம கால நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. ஆனால் சம கால நிகழ்வைக் காட்டியபோதிலும் சமகால  இருப்பைச் சித்திரிக்காமல் தன்னுடைய இலக்கியக் கோர்வைக்குச் சமகால உணர்வைப் பயன்படுத்துகிறார்.

சமகாலப் பிரச்சினைகளளை ஆராய்வதை விட அந்தப் பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட உணர்ச்சிச் சுழிப்புகளை எடுத்துக் காட்டுகிறார் என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.

முதலாவது கதையில் வரும் பூர்விக இந்தியன் வாயிலாக (Native Indian)) வாயிலாக எங்கள் எல்லோருடையவும் வெறுப்பு, விரக்திகளை நாலு வரிப்பாட்டின்  மூலம் காட்டுகிறார்:

காலம் சுயாதீனமானதோ
காலம் சார்பானதோ
ஆனால் நிச்சயமாக
காலம் பொல்லாதது."

'பொந்துப் பறவை' என்ற இரண்டாவது கதையில் அதன் முழுக்கருத்துமே முருகேசனுடைய குற்ற உணர்வுதான். அதை ஒரு வரியிலேயே சொல்கிறார்:

"அந்த மாற்றம் கூட சுயநலத்தால் விளைந்ததொன்றாக இருந்ததை எண்ணி முருகேசன் உண்மையிலேயே வெட்கித்துப் போனான்."

அடுத்து 'மாட்டுப் பிரச்சினை'யில் அந்த மாட்டின் சுதந்திர வேட்கை, போராட்டத் தீவிரம் காரணமாக அன்றிலிருந்து பொன்னையாவை முழுச் சைவனாக்குகிறார்.

கதை சொல்லல் அல்லது விவரிப்பு (Naration)

கதைகள் யாவுமே Narative பாணியில் , கதை சொல்லும் பாணியில், அமைந்துள்ளன. கதாசிரியரே நேரடியாகக் கதை சொல்வதால் கதையின் விளைவு அல்லது கருத்து வெளிப்படையாகவே தெரிகிறது.  இதன் காரணமாகத் தனது கருத்துகளை நிறையச் சொல்ல வேண்டும் என்ற அவா சிறுகதைகளின்  செறிவுத் தன்மையைக் குறைத்து ஒரு நெகிழ்வுத் தன்மையைக் காட்டுகிறது.  உதாரணமாக  முதலாவது கதையில் வரும் நைஜீரியச் 'சீவ்' பற்றிய விவரணம். கணவன் என்ற கதையில் வரும் X = Y, Y = Z ஆகவே X = Z என்ற கணிதச் சாஸ்திரத் தர்க்கம் இக்கதைக்குத் தேவையற்ற ஒன்று. வலிந்து திணைக்கப்பட்டு வாசகரைத் திசை திருப்புவது மட்டுமல்லாமல்  கதையோடு ஒட்டாமல் எட்டி நிற்கிறது. இப்படியான இடையூறுகள் சிறுகதைகளின் ஓட்டத்திற்குத் தடையாகும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

வருணனை


இவருடைய  எல்லாக் கதைகளிலுமே மிகை வருணனை கிடையாது.  எல்லாப் பாத்திர , நிகழ்வு வருணனைகளும்  கதைத்தேவையோடு மட்டும் மிக அழகாக உள்ளன.

'றோட்' ஒன்றையே கதைகளமாகக் கொண்ட 'ஒரு மாட்டுப் பிரச்சினை'யில் றோட்டின் அறிமுகம் இதுதான்:

"ஞாயிற்றுக்கிழமையாததால் றோட்டினில் வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் கொண்டா எக்கோட் சென் கிளயர் வெஸ்ட்டில் ஆறுதலாக ஊர்ந்தது."

இதற்குக் காரணம் கதாசிரியரின் கண்ணோட்டம் இயல்பு நெறியாக (Naturalism)  இருப்பதால் ஆகும். இந்த இயல்பு நெறி காரணமாகப் பாத்திரப் படைப்புகள்  கூட மிகச் சிக்கனமாக இரண்டு மூன்று  என்றதோடு கட்டுப்படுத்தி உரையாடல்களையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார்.

கடைசிக் கதையான ஒரு முடிவும் விடிவும் என்ற கதை ஆண் பெண் வாழ்வில் சாதாரணமாக நடக்கும் ஒன்றாக இருந்த போதிலும் அந்தக் கதையை ஆண் வழிப்போக்கிலேயே காட்டுகிறார்.

அமெரிக்கா குறுநாவல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை  இது ஒரு விவரணச்சித்திரமே. ஊரிலிரிந்து வெளிநாடுபற்றிக் கனவு காண்பவர்கட்கும், வெளிநாடு செல்ல ஆயத்தம் செய்வோருக்கும் இது மிகவும் பயன்படும்.

நன்றி: பதிவுகள்.காம்   https://www.pathivukal.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்