21.10.2023 அன்று 'தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர் டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.
தொடர்ந்து உரையாற்றிய ஜெயமோகனின் உரை அறம் பற்றியதாக அமைந்திருந்தது. சங்ககாலத்தில் நிலவிய குல அறம், அதன் பின்பு சிலம்பு தொடக்கம் கம்ப இராமாயணம் வரை நிலவிய இலட்சிய அறம், பக்திக்காலத்தில் நிலவிய அறம் மற்றும் நவீன காலகட்டத்தில் நிலவிய அறம் என நான்கு காலகட்டங்களில் நிலவிய அறச்சிந்தனைகளைப்பற்றிய நீண்டதோர் உரையாக அமைந்திருந்தது. உரை நீண்டதாயினும் பார்வையாளர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனதுரையின் ஆரம்பத்தில் தனது இந்தக் கனடா விஜயத்தில் முக்கிய அம்சம் இளந்தலைமுறையினருடன் நிகழ்ந்த உரையாடல்கள் எனச் சிலாகித்துக்கூறி அவற்றை நினைவு கூர்ந்தார். இறுதியில் பார்வையாளார்கள் மத்தியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயமோகன் பதிலளித்ததுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. தொடர்ந்து அவருடன் பார்வையாளர்கள் புகைப்படமெடுத்துக்கொண்டார்கள்.
- இடமிருந்து வலமாக: எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் ஜெயமோகன் & நான் -
எழுத்தாளர் ஜெயமோகனை நான் முதன் முறையாகச் சந்திதது இந்நிகழ்வில்தான். இதற்கு முன்னரும் அவர் சில தடவைகள் 'டொராண்டோ'வந்திருக்கின்றார். ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அச்சந்தர்ப்பங்களில் கிடைக்கவில்லை. ஜெயமோகன் 'பதிவுகள் ' இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் நிறையப் பங்களித்தவர்களில் ஒருவர். அவரது பல கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. அவருடன் நாம் பல தடவைகள் 'பதிவுக'ளில் நடந்த விவாதங்களில் பங்குபற்றியுள்ளோம்; விவாதித்துள்ளோம். அவரது 'விஷ்ணுபுரம்', 'கன்னியாகுமரி' ஆகிய நாவல்கள் பற்றிய விமர்சனங்களைப் பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் எழுதியுள்ளேன். நீண்ட காலமாக அவருடன் இலக்கியரீதியில் இணையம் மூலம் தொடர்பில் இருந்தாலும் அவரை ஒருபோதும் சந்தித்திருக்கவில்லை. இதற்காகவே அவரைச் சந்திக்க விரும்பினேன். அதை இந்நிகழ்வு சாத்தியமாக்கியது.
No comments:
Post a Comment