Sunday, June 7, 2009

'நான் அவனில்லை..' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை!



கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...

தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.


இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.
இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன் எப்பொழுதுமே தனிமையில் சிந்திப்ப்தை மிகவும் விரும்புவன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இதற்குச் சமாந்தரமாக இருக்கக் கூடிய ஏனைய பிரபஞ்சங்கள், காலத்தினூடு பயணித்தல், கருந்துளைகள்... பற்றியெல்லாம் அவன் பல நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவன். பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி ஆராய்ந்தவனின் இருப்பு விரைவிலேயே இல்லாமல் போகப் போகிறதா?

அவனது முடிவை அவன் தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான். மானிடர்களிடையே குடும்பம், நட்பு போன்ற உறவுகளற்றுப் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. இனப்பெருக்கம் மானிடப் பண்ணைகளில் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன. மேலும் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், போர் வீரர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆண் விந்துக்களும், பெண் முட்டைகளும் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில் கலந்து மானுடர் உருவாக்கம் தேவைகளுக்கேற்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப உறவுகள் மின்னூல்களில் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவற்றைப் பற்றி எண்ணும்போது அவன் அன்றைய மானுடர்களின் அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம் பற்றி ஆச்சரியப்படுவான்.

அவனது சிந்தனையோட்டம் பல்கிக் கிளை விரிந்தோடிக் கொண்டிருந்தது.

'நாளையுடன் இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும். அதன் பிறகு நான் என்னவாவேன்? " இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா? சக்தியா? பொருள்முதல்வாதமா? கருத்து முதல்வாதமா? இவ்விதமான தத்துவப் போராட்டம் இன்னும் முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அவன் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அவன் கண்களின் முன் திடீரென் ஒரு கோளம் போன்றதொரு வடிவம் தோன்றி மறைந்தது. அவன் திகைப்பு அடங்குவதற்குள் அதனைத் தொடர்ந்து மேலும் சிறிய,பெரிய கோளங்கள் சில தோன்றி மறைந்தன.

இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச் சிறிது நேரம் நடந்த நிகழ்வுகளைக் கிரகிப்பதற்குக் கடினமாகவிருந்தது. தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு சந்தேகம் எழுந்தது. அடுத்தநாள் மரண தண்டனையென்பதால் அவனது புத்தி பேதலித்து விட்டதாயென்ன? இவ்விதமாக அவன் ஒரு முடிவுக்கும் வராமல் திணறிக்கொண்டிருந்த வேளையில் அவன் முன்னால் மேலுமொரு அதிசயம் நிகழ்ந்தது.

இம்முறை அவன் முன்னால் ஒரு வெள்ளை நிறக் காகிதம், A-1 அளவில் தோன்றி , செங்குத்தாக அவன் வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம் மறையாமல் நிலைத்து நிற்கவே அவனுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது புரிந்தது.

அதில் பின்வருமாறு எழுதியிருந்தது:

'நண்பா! என்ன திகைத்துப் போய் விட்டாயா?'

அதனைப் படித்துவிட்டு அதற்குப் பதிலிறுக்கும் முகமாக 'ஆம்' என்று தலையசைத்தான் இயற்பியல் விஞ்ஞானி.

இப்பொழுது அந்தக் காகிதம் மறைந்து மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் கீழுள்ளவாறு எழுதப் பட்டிருந்தது:

'பயப்படாதே நண்பா! நான் உனது பிரபஞ்சத்துடன் கூடவே இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களில் ஒன்றினைச் சேர்ந்த உயிரினம். எங்களது பிரபஞ்சம் உங்களுடையதை விட பதினான்கு வெளிப் பரிமாணங்களும் , ஒரு காலப்பரிமாணமும் கொண்டது. அதனால் உங்களது பிரபஞ்சத்தினுள் நாம் தோன்றும்போது மட்டும் , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய எங்களது உருவத்தின் பகுதிகள் தெரியும். ஆனால் உங்களால் எங்களின் முழுத்தோற்றத்தினையும் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் உங்களது தோற்றம் மற்றும் செய்ற்பாடுகள் அனைத்தையுமே பார்க்க முடியும்..'

'அப்படியா..!' என்று வியந்து போனான் இயற்பியல் விஞ்ஞானி.

அதன்பின் அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன் கூறுவதும், அதற்குப் பதிலாக அந்தப் பல்பரிமாண உயிரினத்தின் காகிதப் பதில்களுமாகத் தொடர்ந்தது. அதனை இலகுவாக்கும் பொருட்டுக் கீழுள்ளவாறு உரையாடல் குறிப்பிடப்படும்.

இயற்பியல் விஞ்ஞானி: ' உங்களால எங்கள் மொழியை வாசிக்க முடிகிறது. ஏன் பேச முடியவில்லை..'

அண்டவெளி உயிரினம்: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம் உங்களைப் போல் கூறுவதும் பதிலிறுப்பதுமாகத் தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும், அவற்றை உணர்வதுமாகத் தொடருமொரு செயற்பாடு. அதனால் எங்களிடையே உங்களுடையதைப் போன்ற ஒலியை மையமாகக் கொண்ட உரையாடல் நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின் தேவைகளும் இருப்பதில்லை.'

இயற்பியல் விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும், திருப்தியாகவுமிருக்கிறது. என் இருப்பின் முடிவுக்கண்மையில் எனக்கு இபப்டியொரு அறிதலும், புரிதலுமா? '

அண்டவெளி உயிரினம்: 'என்ன கூறுகிறாய் நண்பா! என்ன உன் இருப்பு முடியும் தறுவாயிலிருக்கிறதா? ஏன்..?'

இயற்பியல் விஞ்ஞானி இதற்குப் பதிலாகத் தன் கதையினையும், நிறைவேற்றப்படவுள்ள தண்டனை பற்றியும் குறிப்பிட்டான். இதற்குப் பதிலாகச் சிறிது நேரம் அண்டவெளி உயிரினத்திடமிருந்து மெளனம் நிலவியது. பின்னர் அது கூறியது.

'இதற்கு நீ ஏன் கவலைபடுகிறாய்? கவலையை விடு! இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான் தப்ப வைக்க முடியும். நீ உன் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்."

இயற்பியல் விஞ்ஞானி: 'உன்னால் என்னை எவ்விதம் காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்?"

அண்டவெளி உயிரினம்: 'நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால் , காலதாமதம் செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்...'

இயற்பியல் விஞ்ஞானி: 'அதனால்....'

அண்டவெளி உயிரினம்: 'முதலில் இன்று உன் சிறைக் காவலர்களுடன் தொடர்பு கொண்டு உன் இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில் தகுந்த காரணம் இருப்பின் , நிரூபிக்கப்படின் அவ்விதமான மேன்முறையீடுகளை விண்ணப்பிக்கலாமல்லவா?'

இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். உண்மைதான்...'

அண்டவெளி உயிரினம்: 'அவ்விதம் உன் மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து முதலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நீ உண்மையில் இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்; நிரூபிக்க வேண்டும். ..'

இய்ற்பியல் விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான் , இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்? நான் பாஸ்கரன் தானே! '

அண்டவெளி உயிரினம்: 'வேறு வழியில்லை.. அதுவொன்றுதான் தற்போதுள்ள இலகுவான வழி.. முதலில் நீ தப்ப வேண்டும். அதன்பின் எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்...'

இயற்பியல் விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே.. நான் நானில்லையென்றால் வேறு யார்?'

அண்டவெளி உயிரினம்: ' இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம் எந்தப் பக்கத்திலுள்ளது? "

இயற்பியல் விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்.. இடது புறத்தில்தான்..'

அண்டவெளி உயிரினம்: 'இயற்பியல் விஞ்ஞானியின் முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு மச்சம் எந்தப் பக்கத்திலிருக்கிறது?'

இயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின் வலப்புறத்தில்தான்...'

அண்டவெளி உயிரினம்: ' அவற்றினை இடம் மாற்றி வைத்து விட்டால் வேலை சுலபமாகிவிடும். அதன் பின்னர் உனது மேன்முறையீட்டில் உண்மையான இயற்பியல் விஞ்ஞானியின் இதயம் இடது ப்றத்தில் இருப்பதையும், அவனது அங்க அடையாளங்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அவை எல்லாமே உன்னைப் பொறுத்தவரையில் இடம் மாறியிருக்கும். ஆக நீ - நான் அவனில்லை - என்று வாதாட வேண்டும். உன் உடலின் எல்லாப் பாகங்களுமே இடம் மாறியிருப்பதால் உன் இடது கை வலது கையாகவும், வலது கை இடது கையாகவுமிருக்கும். நீதி மனறத்திடமிருக்கும் தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்.. என்ன புரிகிறதா?'

இயற்பியல் விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம் புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது: நான் அவனில்லையென்று வாதாட வேண்டும் என்று. தற்போதுள்ள என் அங்கங்கள் தொடக்கம் அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றி வைத்தால் இவையெல்லாம் சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும் புரிகிறது... ஆனால் அவையெல்லாம் - இடமாற்றம்- எவ்விதம் சாத்தியமென்றுதான் புரியவில்லை '

அண்டவெளி உயிரினம். 'சபாஷ்! நீ கெட்டிக்காரன் தான். உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு சிலவற்றைத் தவிர. ஆனால் இவ்விதமான புரிதல் உன்னைப் பொறுத்தவரையில் இயல்பானதொன்றுதான்...'

இயற்பியல் விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகத்தான் கூறேன்?'

அண்டவெளி உயிரினம்: 'உன்னால் உணர முடியாது. காரணம்: உனது முப்பரிமாண எல்லைகள். அவற்றை மீறி உன்னால் உணர முடியாது. ஆனால் உனக்குக் கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம் அவற்றை , உன்னிலும் அதிகமான பரிமாணங்களின் சாத்தியங்கள் பற்றிய புரிதலுக்கு உன் அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும் புரிய முடியும்.'

அண்டவெளி உயிரினம் தொடர்ந்தது: ' மானுட நண்பா! இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால் உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால் முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா? '

இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். நீ கூறுவது தர்க்கரீதியாகச் சரியாகத்தானிருக்கிறது..'

அண்டவெளி உயிரினம்: 'அதுபோல்தான் .. இடது புறத்தில் இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை உனது பரிமாணத்தினுள் எடுத்து, 180 பாகையில் திருப்பி மீண்டும் அதனது உலகினுள் கொண்டு சென்று விட்டால் என்ன நடக்கும்? அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும். புரிகிறதா? மானுடனே! புரிகிறதா?'

இயற்பியல் விஞ்ஞானி: 'புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர் வெளிப் பரிமாணங்களிலொன்றினுள் அழைத்துச் சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும் இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய். அப்படித்தானே!'

அண்டவெளி உயிரினம்: 'பட்சே அதெ! அதே!'

இயற்பியல் விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம் கூடத் தெரியுமா?'

அண்டவெளி உயிரினம்: 'எனக்குத் தெரியாத உன் பிரபஞ்சத்து மொழிகளே இல்லை. எல்லாவற்றையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். முதலில் நீ விடுதலை பெற்று வா! அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப் பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறலாம். எப்பொழுதுமே என் உதவி உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம் பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா?'

இயற்பியல் விஞ்ஞானி: கண்களை மூடிக் கொள்கிறான். 'அப்பனே! முருகா! எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் மீண்டும் என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே கொண்டு வந்துவிட நீ அருள் புரிய வேண்டும்..'

அண்டவெளி உயிரினம்: ' என்ன கடவுளை வேண்டிக் கொள்கிறாயா? என் மேல் இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா..'

இயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே காவிச் செல்லலாம்...'

அடுத்த சில கணங்களில் நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்திலிருந்து இயற்பியல் விஞ்ஞானி மறைந்து மீண்டும் தோன்றினான்.

என்ன ஆச்சரியம்!

அவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம் வலது புறத்திலிருந்து துடித்துக் கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற் பாகங்கள் , பிறப்படையாளங்கள், அனைத்துமே வலப்புறமாக இடம் மாறியிருந்தன.

அண்டவெளி உயிரினம்: 'மானுட நண்பனே! சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப் பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன். மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன் மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா! நன்கு இருண்டு விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு. விடிந்ததும் முதல் வேலையாக உன் மேன் முறையீட்டினைச் செய். வருகிறேன்.'

இயற்பியல் விஞ்ஞானி: - (தனக்குள்) 'பலபரிமாண நண்பனே! உன் உதவிக்கு நன்றி'

இவ்விதமாக எண்ணியவன் தூக்கத்திலாழ்ந்தான். நாளை விடிந்ததும் அவன் தன் மறுவாழ்வுக்காக வாதாடுவான். தன் அங்க அடையாளங்கள், கை ரேகை, இதயத்தின் இருப்பிடம் பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான் 'நான் அவனில்லை'யென்று.

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்