Friday, January 4, 2019

வ.ந.கிரிதரனின் பதினான்கு கவிதைகள்!

1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?'
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

2. மின் பின்னியதொரு பின்னலா ?

நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.
தனியாக எப்பொழுதுமே இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
உனக்கும் எனக்குமிடையில் எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.
எப்பொழுதும் ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.
நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட நான் அறிவதற்கும்
புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு நேரமுண்டு. தூரமுமுண்டு
கண்ணே!
காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?
காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?
தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான்
சிறியதாக இருந்த போதும்.
வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா1
காலத்தினொரு கூறாய் உன்னை நான் காண்பதெல்லாம்
இங்கு உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
3. எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது
கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி
அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்!

4. விண்ணும் மண்ணும்!

விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்
பார்த்து ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.

'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.

இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்
நூலகத்தினைப் போல் இந்த வானம்
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.
காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.

அளவுகளுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான்
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!

அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்
படையெடுப்பெதற்கு?'

ஆகாயத்தின் இயல்புகளில் சில:
அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம்
அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'

தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்
விசும்பு மண்ணின் கேள்விகள்
அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.

 5. இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!


படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.

வீழும் மலர், ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.

முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!

இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ? இல்லை
இதுவும் 'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?

இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!

6. விசும்பும், தொலைநோக்குதலும்!


தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!

எனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து
-முற்றத்தில் அப்பாவின் 'சாற'த்தொட்டிலில்
மல்லாந்திருந்து இரசித்த அன்றிலிருந்து -
நானும்
தொலைவுகளை இதனூடு
மேய்ந்துகொண்டுதான் வருகின்றேன்
ஒருவித அறிவுப் பசிகொண்டு.
அடங்கவில்லை அந்தப் பசி
இன்றுவரை.

இருந்தும் பால்வீதிகளில் பயணித்தலிலுள்ள
ஆர்வம் மட்டும் அணைந்திடவில்லை.
ஒவ்வொருமுறையும் வியப்புடனும், ஆர்வத்துடனும்,
மர்மங்களை அவிழ்த்துவிட முடியாதாவென்றொரு
நப்பாசையுடனும் நானும்
முயன்றுகொண்டுதானிருக்கிறேன்; தொலை நோக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்.
ஓடு 'சடசட'க்கக் கொட்டும் மழைபோல்
என் நெஞ்சு கவர்ந்த மேலுமொரு
விடயமிது.
எத்தனைமுறை பெய்தாலும் அலுக்காத மழைபோல்
எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை
எனக்கு.

நீண்டு,கவிந்த இரவு.
வியாபித்திருக்கும் விரிவிசும்பு.
இயன்றபோதெல்லாம்
நோக்கிக் கொண்டிதானிருக்கின்றேன்.
இருக்கும்வரை நோக்கிக் கொண்டுதானிருப்பேன்.
தொலைநோக்கிகள் தொலைவுகளை
நோக்க மட்டும்தானென்று யார் சொன்னது?
இருப்பியங்குதற்கும் இங்கவை
இருக்கும் அதிசயந்தானென்ன!

7. தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....
1.
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்
இளவேனிற்பொழுதொன்றின்
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்
'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்
'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
வீடற்றவாசிகள் சிலர்.
விரிந்து கிடக்கிறது வெளி.
எதற்கிந்த முடக்கம்?
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.

2.
பகலவனாட்சியில்
பல்வகை வாகனங்கள்!
பல்லின மானிடர்கள்!
விளங்குமிப் பெருநகரின்
குணம்
இரவுகளில்தான்
எவ்விதமெல்லாம்
மாறிவிடுகிறது!

மாடப்புறாக்களே!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து
இன்னும் இரைதேடுவீர்!
உமதியல்புகளை
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?
நகரத்துப் புறாக்களா?
இரவுப் புறாக்களா?
சூழல் மாறிடினும்
கலங்கிடாப் பட்சிகளே!
உம் வல்லமைகண்டு
பிரமித்துத்தான் போகின்றதென்
மனம்.

3.
நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
'மருந்து'விற்கும் போதை
வர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்....

துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ!

4.
இவ்விதமானதொரு,
வழக்கமானதொரு
பெருநகரத்தின்
இரவுப் பொழுதொன்றில்,

'பின்இல்' புல்வெளியில்
சாய்கதிரை விரித்ததில்
சாய்ந்திருக்கின்றேன்.
பெருநகரத்தின் இடவெளியில்
ஒளிந்திருக்கும் இயற்கையைச்
சுகிப்பதற்காக.
சிறுவயதில்
'முன்இல்' தந்தையின்
'சாறத்'தொட்டிலில்
இயற்கையைச் சுகித்ததின்
நீட்சியிது.

பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்
பால்யத்துப் பிராயத்து
வழக்கம்.
இன்னும் தொடரும் -அப்
பழக்கம்.

தோடஞ்சுளையென
அடிவானில்
கா(ல)ல்மதி!

அந்தரத்தில் தொங்குமந்த
மதி!
அதனெழிலில் தெரிகிறது
வெளிதொங்குமென்னிருப்பின்
கதி!


5.
பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன்.

6.
வெளியில் விரைமொரு
வாயுக் குமிழி! - உள்
உயிர்
ஆடும் ஆட்டம்தான்
என்னே!

ஒளியாண்டுத் தனிமை!
வெறுமை! -உணராத
ஆட்டம்!
பேயாட்டம்!

இந்தத்
- தனிமையெல்லாம்,
- வெறுமையெல்லாம்,
- தொலைவெல்லாம்,
ஒளியணங்கின் ஓயாத
நாட்டியமோ! - மாய
நாட்டியமோ?.

ஆயின்,
விழியிழந்த குருடருக்கு
அவை
ஒலியணங்கின்
சாகசமோ?!

7.
இந்தப் பெருநகரத்திருப்பில்
நான் சுகிக்கும் பொழுதுகளில்
இந்த இரவுப் பொழுதுகள்
சிறப்பு மிக்கவை.

ஏனெனில் -அவை
எப்பொழுதுமே
என் சிந்தையின்
- விரிதலை,
- புரிதலை
- அறிதலை
அதிகரிக்க வைப்பவை;
அதனால்தான்.

8. ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.
- மார்ச் 6, 1983.-

9. நகரத்து மனிதனின் புலம்பல்!

மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி
என்கின்றது
முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்
சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு
விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று
கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும்
நிழலைத்தந்தீர்! உமது
காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்!
இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை
தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால்
இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும்
உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும்
உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று
எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்'
என்பதாச்சு.

10. நடிகர்கள்!

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!இந்த நாடக மேடையில்
நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்
அழுவதா சிரிப்பதா என்று
சில நேரங்களில் தெரிவதில்லை.
இவர்களுக்கோ தாங்கள் பிறவி
நடிகர்கள் என்ற அடிப்படை
உண்மை கூடத் தெரியவில்லை.
தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்
கொண்டே நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் ஒருவன் என்ற வகையில்
என்னையும் சேர்த்துத் தான்
கூறுகின்றேன்.
எவ்வளவு தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் இவர்கள்.
எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு
தத்ரூபமாக இவர்களால்
முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?
உருகுவதிலாகட்டும் அசடு வழியக்
குழைவதிலாகட்டும்
என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?
இந்த நாடக மேடையிலிருந்து
விடுபட வேண்டுமென்று தான்
இத்தனை நாளாக முயன்று
கொண்டிருக்கின்றேன்.
திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.
கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.
எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து
கத்துகின்றார்கள்.
நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே
நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்
ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்
என்னைப் பார்த்துப்
'பார் இவனது அபாரமான
நடிப்பை'யென்று.
என்ன நடிகர்களிவர்கள்?
தங்கள் நடிப்பை விட
என் நடிப்பு அபாரமானது
என சான்று வழங்கும்
பெருந்தன்மை மிக்க
மகா பெரிய நடிகர்களே!
உங்கள் பெருந்தன்மைக்காக
உங்கள் கருணைக்காக
உங்கள் அனைவருக்கும்
எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
உரித்தாகுக.
மகாபெரும் கவிஞராக, அற்புதப்
படைப்பாளியாக, மூதறிஞராக,
அதிமேதாவியாக,சமூகத்
தொண்டராக, தலைவராக
எத்தனை விதமான வேடங்களில்
நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!
உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு
வசிட்டர் வாயால் கிடைத்தது போல்
எத்துனை பெருமை மிக்கது. அதற்காக
எனது ஆயிரம் ஆயிரம் கோடி
நன்றி!
இந்த நாடக மேடையில் முற்றாகவே
நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது
இயலாததொன்று என்பதை உணர
முடிகின்றது. இருந்தாலும்
நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்
தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்
அற்புதமான நாடக மேடையிது.
இங்கு நடைபெறும் நாடகங்கள்
அனைத்துமே திரை விழும் வரை
தான். விழுந்த பின்னும்
நடிப்பில் தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் நாடகத்தைத்
தொடரத் தான் செய்வார்கள்.
இந்த நாடக மேடையில்
நடிப்பதென்பது மட்டும்
தான் நித்தியம்.சாசுவதம்.
நிரந்தரமானதொரு திரை
என்று ஒன்று உண்டா
இதன் நிரந்தரத்தை
நிரந்தரமின்மையாக்க?
யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை
இருக்கும் பட்சத்தில்
அவ்விதம் விழும் திரை கூட
இன்னுமொரு பக்கத்தில்
ஆரம்பமாகுமொரு நாடகத்தின்
தொடக்கமாகவிருக்கலாம்?
யார் கண்டது?
பாத்திரங்களிற்கா
குறைவில்லை?
ஆக,
இருக்கும் வரை
நடித்துக் கொண்டேயிருப்போம்.

11. இயற்கைத்தாயே!

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.
விதியென்று
வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு
விதியறியும்
மனத்திடத்தை
மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.
தாயே! இயற்கத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...

12. ஆசை!

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும்
ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில்
வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்
பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள்
கத்தி விடும்
நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே
பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால்
அடியேனின்
இஷ்ட்டமாகும்.

13. அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!

எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?

14.  இருப்பதிகாரம்

- நிலை மண்டில ஆசிரியப்பா! -

வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.

அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.

உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்