ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.
ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.: இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)
சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.