Thursday, September 12, 2019

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! - வ.ந.கிரிதரன் -

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்.."

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள் வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே! நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

 "..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? பலதோற்ற மயக்கங்களோ? கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதினால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்ற ஒரு நினைவும் காட்சியென்ற பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?.."

இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.

"..சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்..."

ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான். உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

"..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன். மற்றுமிந்த பிரமத்தினியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன். தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடை கொள்வதாம் தீய பக்தியியற்கை வாய்ந்திலேன். சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."

மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி, 'அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

'பதிவுகள்' செப்டம்பர் 2003 இதழ் 45  [ 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' - 1981 ' இதழில் வெளியான எனது  'பாரதி கருத்துமுதல்வாதியா? அல்லது பொருள்முதல்வாதியா'  என்னும் கட்டுரையின் இன்னுமொரு வடிவம். ]

No comments:

'பதிவுகள்.காம்': 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்  கொண்டு , 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத...

பிரபலமான பதிவுகள்