Friday, February 19, 2021

கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -

அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள்
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?

எவையாயினும் கனவுகளைக்
கவிதைகளாக,  காட்சிகளாக
உணர்வதில் உருவாகும் உணர்வுகள்
உண்மையானவை.
புனைவுகளின் வாசிப்பில் ஏற்படும்
உணர்வுகள் எம்மை இவ்விதம் பாதிப்பதில்லை.
ஆனால்
கனவுக்கவிதைகளோ, கனவுச் சிறுகதைகளோ,
இடையில் முறியும் கனவுநாவல்களோ
(அவை குறுநாவல்களாக, முழுநாவல்களாக இருந்தால் கூட)
ஏற்படுத்தும் உணர்வுகள்
உண்மையுடன் பிரித்துப் பார்க்க முடியாதவை.
அவ்விடயத்தில் அப்படைப்புகள்
உயிர்த்துடிப்பு மிக்கவை.
அவைபோல் யாராலும் எழுத முடிவதில்லை.
மகா படைப்புகள் அவை!
மகா எழுத்தாளர்களால் படைக்கப்படும்
மகா படைப்புகள் அவை.

girinav@gmail.com

  

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்