Tuesday, May 25, 2021

வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.

இருவருமே எழுத்தையே வாழ்வாகக்கொண்டவர்கள். இருவருமே தமிழக , இந்திய அரசுகளால் வழங்கப்படும் அனைத்து விருதுகளுக்கும் உரித்துடையவர்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்விதமான உரிய மரியாதை கிடைக்கும்போது அது வரவேற்கப்பட வேண்டியதொன்று. காழ்ப்புணர்வுடன் எழுத்தாளர் வண்ணநிலவனைப்போல் கருத்துகளைக்கூறுவது நல்லதல்ல.

என்னைப்பொறுத்தவரையில் எழுத்தாளர் வண்ணநிலவனின் இலக்கியப்பங்களிப்பு கி.ராஜநாராயணின் பங்களிப்பை நெருங்கவே முடியாது. அவரது முக்கியமான பங்களிப்பு 'கடல்புரத்தில்' நாவலே. ஏனையவையெல்லாம் சிறந்த இலக்கியப்படைப்புகளென்றாலும் தனித்துவம் மிக்க படைப்புகளாக நான் கருத மாட்டேன். இது என் தனிப்பட்ட கருத்து. 'கடல்புரத்தில்' நாவல் கூட என்னைப்பெரிதாகக் கவரவில்லை. ஏற்கனவே தகழியின் செம்மீன், நம்மவரான செங்கை ஆழியானின் வாடைக்காற்று ஆகிய நாவல்களை வாசித்திருந்த காரணத்தினால், அவற்றையொத்த 'கடல்புரத்தில்'என்னைப்பெரிதாகக் கவரவில்லையென்பேன். ஆனால் அது தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. அதுவே வண்ணநிலவனின் முக்கிய படைப்பு என்பதிலும் எனக்குச் சம்மதமே.

என்னைப்பொறுத்தவரையில் கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' , 'கோபல்ல கிராமத்து மக்கள்' இரண்டும் அவரது மிகச்சிறந்த நாவல்கள். விருதுகள் எவற்றுக்கும் மாற்றுக்கருத்துகளற்று உரியவை.

கோபல்லகிராமம் நாவலை வரிக்கு வரி இரசித்து வாசிக்கலாம். அதன் மொழி நெஞ்சை வருடிச் செல்லும் தன்மை மிக்கது. இயற்கையெழில் கொஞ்சும் நடையில் வரலாற்றைப்பதிவு செய்யும் அற்புதமான நாவல். ஒரு குறிப்பிட்ட  காலத்துத் தெலுங்கு மக்களின்  தமிழகம்  நோக்கிய புலம்பெயர்தலை ஆவணப்படுத்தும் நாவல். அந்த நாவலின் முக்கிய பாத்திரமே கோபல்ல கிராமம்தான். அக்கிராமத்தின் நாயக்கர் குடும்பமொன்றினூடு விபரிக்கப்படும்  அக்கிராமத்தின் வரலாற்றினை வாசிப்பது சுவையான அனுபவம்.

எழுத்தாளர்களுக்கு அதுவும் தகுதியான எழுத்தாளர்களுக்கு இவ்வித உரிய கெளரவம் கிடைப்பதை ஆதரிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாகக்கொண்டு அரசுகள் இயங்குவதற்கு இவ்விதமான ஆதரவு வழிவகுக்கும். ருஷ்யாவில் எழுத்தாளர்களைக் கொண்டாடுவார்கள். எழுத்தாளர் தத்யயேவ்ஸ்கி மறைந்தபோது நாடே திரண்டு பிரியாவிடை கொடுத்து அனுப்பியது. கேரளா, மேற்கு வங்கத்திலும் அவ்விதமே எழுத்தாளர்கள் மக்களின் மதிப்புக்குரியவர்கள். ஆனால் தமிழகத்தில் இப்பொழுதுதான் எழுத்தாளர்களின் பக்கம் அரசின் கவனம் திரும்பியுள்ளது. அது நல்லதொரு மாற்றம். வரவேற்கத்தக்கதொரு மாற்றம். வரவேற்போம்.

இதுதான் அண்மையில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பற்றி எழுத்தாளர் வண்ணநிலவன் தன் முகநூற் பக்கத்தில் எழுதியது.

என் முகநூல் நண்பர்களிலொருவான J P Josephine Baba எழுத்தாளர் அ.யேசுராசாவின் முகநூற் பக்கத்தில் எதிர்வினையொன்றில் பதிவிட்டிருந்தார். வண்ணநிலவன் என் முகநூல் நண்பர்கள் பட்டியலில் இல்லாததால் மேற்படி அவரது கூற்றினை இவ்விதமே அறிந்தேன்.

இதற்கு எழுத்தாளர் அ.யேசுராசா தன் எதிர்வினையில் பின்வருமாறு கூறியிருந்தார்: "Athanas Jesurasa: J P Josephine Baba வண்ணநிலவன் இவ்வாறு சொல்வது ஏமாற்றமளிக்கிறது! ஞானபீடப் பரிசு முதலில் அகிலனுக்கே வழங்கப்பட்டது!!! இதுபற்றி அவர் வசதியாக மறந்துவிட்டது முரண்நகை! மேலும், 'ஈழத்து எழுத்தாளர் கஷாயம் குடிக்கவேண்டும்'  என்று முன்னொரு தடவை சொல்லியவர் இவர்!"

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்