Monday, December 27, 2021

எம்ஜிஆர் நினைவாக..


டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். எம்ஜிஆர் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவற்றில் இடம் பெறும் ஆரோக்கியமான கருத்துகள் உள்ளடங்கியுள்ள பாடல்கள்தாம். நல்ல கருத்துகளைக் கூறும் அப்பாடல்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் தன்மை மிக்கவை. வழிகாட்டுபவை.

உளவியல் அறிஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை நாங்கள் வாங்கி வாசிக்கின்றோம். அவ்வகையான காணொளிகளைப் பார்க்கின்றோம். அவற்றில் கூறப்படும் முக்கியமான விடயங்களிலொன்று வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஆரோக்கியமான கருத்துகளை மனம் இலேசாக இருக்கும் சமயங்களில் அடிக்கடி நினைத்து வந்தால் அவை ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும். அதற்காக அவை எவ்விதம் ஆரோக்கியமான கருத்துகளை உள்வாங்குவது என்பதற்கான பயிற்சிகளை எல்லாம் விபரிக்கும். மனம் இலேசாக இருக்கும் தருணங்களில் சில இயற்கையை இரசிக்கையில் , இருட்டினில் மனமொன்றிச் சினிமா பார்க்கையில், அதிகாலைகளில் , தூங்கச் செல்கையில் .. இவ்விதம் கூறலாம். ஆனால் இவற்றையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்கின்றன எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க திரைப்படப் பாடல்கள்.

பலர் எம்ஜிஆரின் இவ்விதமான கருத்தாழம் மிக்க, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் எவ்விதம் தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டின என்று விபரித்திருப்பதை நான் பல தடவைகள் வாசித்திருக்கின்றேன். அவரது இரசிகர்களான பல இலட்சக்கணக்கான பாமர மக்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை வாங்கிப்படிக்க நேரமில்லை. பணமுமில்லை. ஆனால் அவர்கள் படிக்கும் புத்தகங்களாக இருந்தவை எம்ஜிஆர் படப்பாடல்களே. அதனால்தான் எம்ஜிஆரை அவர்கள் 'வாத்தியார்'என்று பிரியத்துடன் அழைத்தார்கள். இத்தனைக்கும் அவர் படித்ததோ மூன்றாம் வகுப்பு வரையில்தான். அவர் படித்ததெல்லாம் வாழ்க்கைப்பள்ளியில். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அப்பள்ளி அனுபவங்களை அவர் எவ்விதம் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றியீட்டினார் என்பது பிரமிக்கத்தக்கது. ஏனையோரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாக இருப்பது அவரது வாழ்க்கை என்பேன்.

டிசம்பர் 24 எம்ஜிஆரின் நினைவு தினம். அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பாடலான 'அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்' பாடலை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கேட்டு, பார்த்து மகிழுங்கள். கூடவே கவிஞர் கண்ணதாசனையும் , மெல்லிசை மன்னர்களையும் , மற்றும் டி.எம்.எஸ் அவர்களையும் நினைவு கூர்வோம்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்