Wednesday, April 6, 2022

(பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

- ஜீவநதி வெளியீடான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் பார்வையிது. - பதிவுகள்.காம்-


அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.

புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் உள்ளத்து உணர்வுகள் சிக்கலானவை. புதிய தாயகத்தில் காலூன்றித் தலையெடுக்கவும் கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளவும், மொழிவழக்கினை அறிவதற்கும், தனக்கோர் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்குமான முயற்சிகள் மிகமிகக் கடினமானவை. புலம்பெயராத வாசகர் ஒருவரால் இவற்றை உள்ளபடி உணர்வது சிரமமானது. எனினும் அந்த இலக்கினைப் படைப்பாளி வெற்றிகரமாக எட்டியுள்ளார் என்றே கூறலாம். புலம் பெயர்வாளனாகவும், அவனை உற்று நோக்கும் வேறொரு மனிதனாகவும் எதிர்நின்று தன் புதிய தாயகத்தின் உள்ளக பரிமாணங்களை, இழந்த தாயகத்துடன் எடைபோடும் அணுகுமுறையில் வாசகருக்குப் புதியதோர் வாசலைத் திறந்து விட்டிருக்கிறார் கதாசிரியர்.
சம்பவக் கோர்வைகளால் கதைகளின் போக்கை நிர்ணயிக்காமல், உணர்வுகளின் மிகச்சிறிய இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தேழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஜீவநதி பதிப்பகத்தின் 194 ஆவது வெளியீடாகும்.

கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது.
 
களமும் காட்சிகளும் முன்னே அறிமுகம் ஆனவையாக இருந்தாலும், மானுடதரிசனத்தின் பல்வகைமை, கதாசிரியரின் மொழிநடையூடாகத் தெளிவான மனப்பதிவுகளை வாசகரிடம் உருவாக்குகிறது. கதைகளை வாசித்து முடித்த போது, இலங்கையில் பேரினவாத மேலாண்மையின் கீழ் உழலும் ஒருவராக, எனக்குள் எழுந்த கேள்வி, அங்கேயுமா? இப்போதுமா? என்பதே.

காரணம், வாசகராக என்னை அதிகம் சிந்திக்க வைத்த கேள்வி Where are you from? அல்லது அண்ணை ஊரிலை எந்த இடம்? என்பது.இந்தக் கேள்வி, புகுந்த தேசத்தில் புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் இடையே மிகுந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்பது உண்மை. கனடா போன்ற நாடுகளில் முதலில் வந்த குடிவரவாளர்கள், பின்னர் வந்தவரைப் பார்த்து இக் கேள்வியைக் கேட்பதில் உள்ள நியாயத்தன்மை மிகவும் குறைவானதே. இக்கேள்விக்கான நியாயம் தன் சகமனிதனை அறிவது என்பதற்கு அப்பால், நிறத்தையும் தேசத்தையும் இனத்தையும் அடிப்படையாக வைத்தே அதிகம் அமைந்திருப்பதாக கதைகளில் இருந்து கணிக்க முடிகிறது. இதனை நமது தாயகத்தின் 'நீங்கள் ஊரிலை எவடம்' என்ற கேள்வியின் சாதியம் சார்ந்த தாத்பரியத்துடன் ஒப்பு நோக்கி மனம் வியந்து கொள்கிறது. எனினும் மனித உரிமைகள் மேனிலையில் அனுசரிக்கப்படும் கனடா போன்ற நாடுகளில், இன்றைய நாளில் பாகுபாட்டையும் இனத் துவேஷத்தையும் வெளிக்காட்ட இக்கேள்வி கேட்கப் படுவதில்லை என்பதும் பொதுவான கருத்தாக பலரால் முன்வைக்கப் படுகிறது.
 
தத்தமது நாடுகளில் தேவையற்ற பிரிவினைகளைக் கொள்ளும் மனிதர்கள், புலம் பெயர் தேசத்தில் நிறம் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் வகைப்படுத்தப்படும் விந்தை இது. யமேய்க்கன், கறுவல்ஸ், தொப்பிபிரட்டி, மோட்டுச் சிங்களவன் என்று அடைமொழி கூறும் எம்மவர் மனப்போக்கும் இதே அடிப்படையைக் கொண்டதுதானா ? "கறுப்பர்கள் என்று வெகு இளக்காரமாக அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டே மனித உரிமை ஊர்வலங்களில் கலந்து கண்ணீர் வடிக்கும் மனதின் சித்து விளையாட்டு" என்ற படைப்பாளியின் கூற்று இவ்விடத்தில் சிந்திக்க வேண்டியது. அந்த யமேய்க்கர்களும் மனிதநேயம் மிகுந்த மகத்தான தருணங்களை உருவாக்குவார்கள் என்பதை 'பொந்துப் பறவைக'ளும், 'யமேய்கனுடன் சில கணங்கள்' கதையும் வெளிப்படுத்துகின்றன.
 
புலம் பெயர்ந்த புதிய தாயகத்தில் மானுடர்களின் உயிர் வாழ்தலுக்கான தேடலைத் தனது சிறுகதைகளில் உணர்த்தும் அதே வியப்புடன், ஆறறிவு அற்ற சிறு உயிர்களினது முயற்சியையும் படைப்பாளி வெளிப்படுத்துகிறார்.

"அற்புதமான பிரபஞ்சத்தில் உயிரினங்கள் எத்தகைய சிரமமான சூழ்நிலையிலும் தப்பிப் பிழைக்க வழிகண்டு பிடிக்கும் நூதனமான வைராக்கியத்தைக் கொண்டவை. இயற்கையின் தேவையை இருப்பதைக் கொண்டு அடையும் வல்லமை பெற்றவை" என்ற படைப்பாளியின் கூற்று எத்தனை நம்பிக்கை அளிக்கும்சக்திகொண்டது.'சுண்டெலிகள்', 'தப்பிப்பிழைத்தல்', 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்', 'ஒருமா(நா)ட்டுப்பிரச்சனை' முதலான கதைகள் இதனை உறுதி செய்கின்றன.
 
எனினும் 'காங்ரீட் வனத்துக் குருவிகள்' போல் இதுவரை வாழ்ந்த வீட்டை இழக்க முடியாமலோ அன்றி சூழல் மாற்றத்தைத் தாங்கும் சக்தி இன்றியோ கனடாவின் உறைகுளிரில் தமது உயிரைத் துறந்த பறவைகளும் இருக்கலாம். இச்சந்தர்ப்பங்களை இன்றைய நாளில் இலங்கையில் பொறுமை காத்து வாழும் மக்களுடனும், இங்கிருந்து புலம் பெயர்ந்தோருடனும் ஒப்பு நோக்குதல் பொருத்தமுடையதே. தான் பிறந்த கனடா என்னும் வாழ்விடத்தைத் தாயகமாக நினைக்கும், புலம்பெயர்ந்த பெற்றோரின் குழந்தைகளின் மனநிலையும் இந்தச் சின்னஞ்சிறு குருவிகள் போன்றதுதான் என்பது, மென்மையான அழகியல்.

வாழ்விடம் எமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால் மேலைத்தேய நாடுகளிலும் வீடற்ற வீதி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது வியப்புக்கு உரியது. இவ்வாறான மனிதர்களில் சிலர் புலம் பெயர்வாளர்களின் மேல் குரோத மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதில் விந்தைகள் எதுவுமில்லை. 'மான்ஹால்', 'வீடற்றவன்', 'சொந்தக்காரன்', 'கலாநிதியும் வீதிமனிதனும்' சிறுகதைகள் இதற்கு உதாரணமானவை. மனித உரிமைகளுக்குப் பெயர் போன இந்நாடுகளின் பூர்வகுடிகள், தமது சொந்த மண்ணிலேயே அதை இழந்து, மனதால் ஒடுக்கப் பட்டவர்களாக வாழ்வது வசதியாக மறைக்கப் படுகின்றது என்பதும் உண்மை.

மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தாலும் சில விடயங்களில் தமிழர்களின் கீழ்த்தர மனநிலை மாற்றம் அடைவதில்லை. மனைவி என்பவள் தன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவள் என்பதும், கற்புநிலை என்பது மனைவிக்கு மட்டுமே, தனக்கல்ல என்பதும் சந்தர்ப்பங்கள் தனக்கு சாதகமாக இல்லாது எதிராகும் போது வாய் கூசாது வதந்திகளைப் பரப்புவது என்பதுமான பெண்இனத்தைக் கீழ்மைப்படுத்தும் செயல்கள் இன்னும் தொடர்வது வெட்கக் கேடானது. தாயகத்தில் தமது அந்தஸ்து மிகுந்த வாழ்வினைப் புலம்பெயர்ந்தபின் பெறமுடியாது என்பதால் வெளியுலகிற்கு வேஷமிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிலரின் நிலை அனுதாபத்துக்கு உரியது. எந்த வகையிலும் 'புலம் பெயர்ந்தோம் ஆனால் புலன் பெயர்ந்தோமா' என்ற படைப்பாளியின் கேள்வி நியாயமானது.

'சட்டகம் இட்ட உலகம்' என அழகிய அடைமொழியுடன், சில சமயங்களில் அந்த ஜன்னலின் உள்ளிருந்தும், பல சமயங்களில் வெளியில் இருந்தும் உலகை நோக்கும் படைப்பாளி, உள்ளிருந்து பார்க்கும் போது இலகுவாகத் தெரியும் எதுவும் வெளியில் சென்று எதிர்கொள்ளும் போது ஒப்பீட்டளவில் கடினத் தன்மை உடையது எனக் கூறுகிறார். உண்மை. இக்கரையில் நின்று பார்க்கும் போது வர்ணமயமாகத் தோன்றும் மேலைத்தேய வாழ்வும் அவ்வாறுதான். தாயகத்தில் மோதல் எனப் புலம்பெயர்ந்த குடும்பங்கள், தம் வீட்டுக்குள்ளே மோதல்களைத் தவிர்ப்பதற்கு மனதினைத் தயாராக்கவில்லை.
 
இச்சிறுகதைத் தொகுதியின் இரண்டு குறுநாவல்களும் சற்றே மாறுபட்ட மனநிலைகளைக் கூற வருகின்றன. மணவாழ்வு என்னும் அமைப்பு எப்போதும் சில வரைமுறைகளைக் கொண்டு இயங்குவதே தம்பதியருக்கு மனவேற்றுமை அற்ற சந்தோஷமான வாழ்வினைத் தரும். விகற்பங்கள் இல்லாத மனதுடன் தமது பிள்ளைப் பிராயக் காதலை நட்பாகவோ அன்றி முன்னைய மெல்லுணர்வுகளுடனோ தொடர்வது இல்லறத்துக்கு நலம் தராது என்பது ஒன்று.

பிள்ளைப் பிராயத்தில் உயிர் காத்த பெரும்பான்மையின நட்பு ஒன்று பின்னாளில், உளவாளி என முத்திரை குத்தப்பட்டு குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட அவலத்தை, புலம்பெயர்ந்த ஒருவரின் பார்வையாக முன்வைக்கும் கதை 'சுமணதாஸ் பாஸ்'. ஆழமான அரசியல் ஒன்றை இந்நாவல் கொண்டிருக்கிறது. தனிமனிதர்களாக, சிறுபான்மையினரின் உற்ற நண்பர்களாக உயிர்காக்கும் பெரும்பான்மை இனமக்கள், சமூகமாக இணையும் போது இனவாதம் கொள்வதுண்டு. அதே சமயம் சிறுபான்மையினரும் தமது அரசியல் நலன்களுக்காக பெரும்பான்மையின மக்களின் நியாயங்களை மறுக்கிறார்கள். இருசாராரும் புரிந்துணர்வுடன் முரண்நிலைகளில் இருந்து விடுபடும் போது உண்மையான சுதந்திரம் உருவாகும்.

அது போலவே மொழி இனமத பேதங்கள் கடந்த அமைப்பாக, ஒரு இயக்கமோ நாட்டின் அரசோ செயல்பட்டால் மாத்திரமே காத்திரமான சுதந்திரத்தைப் பெற முடியும் என்பதற்கு எரித்தியா நாட்டினை உதாரணம் கொள்கிறார். அவ்வாறு இல்லாத போது, கடலாலும் கடனாலும் சூழப்பட்டு இருளில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இலங்கையின் நிலையினை எய்துவர் என்பது கர்மாவின் எதிர்வினையாக வந்தேறும்.

ranjani.subra54@gmail.com

https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/7177-2022-04-02-13-54-11

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்