அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் அதிக அளவில் மேற்கு ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கத்தொடங்கினார்கள். பூங்காக்கள் சிலவற்றில் பியர் போத்தலுடன் காணப்பட்ட தமிழ் அகதிகளைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் சில பிரசுரித்தன.நினைவுக்கு வருகின்றது. அக்காலகட்டத்தில் ருஷ்யாவின் 'ஏரோஃபுளெட்'டில் அகதிகள் கிழக்கு ஜேர்மனியூடாக மேற்கு ஜேர்மனிக்குச் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். இந்நாவல் கிழக்கு ஜேர்மனியூடு ஏன் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் படையெடுத்தார்கள் என்பதை விபரமாக விபரிக்கின்றது. அக்காலத்தில் உலகில் நிலவிய குளிர்யுத்தச் (Cold War)சூழல் காரணமாகக் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்த பேர்லின் நகர் இரண்டாகக் கிழக்கு பேர்லின், மேற்கு பேர்லின் என்று பிளவுண்டிருந்த சூழல் எவ்விதம் இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் கூறுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் மேற்கு நாடுகளுக்கும் , சோவியத் குடியரசுக்குமிடையில் உருவான 'பொட்ஸ்டம்' (Potsdam) ஒப்பந்தம் எவ்விதம் இவ்விதச் சுழலை உருவாக்கியது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கின்றது. மேலும் தமிழர்கள் பலருக்கு மேற்கு பேர்லின் மேற்கு ஜேர்மனியிலும், கிழக்கு பேர்லின் கிழக்கு ஜேர்மனியிலும் இருப்பதாகத்தான் நினைப்பு. ஆனால் உண்மையில் பேர்லின் நகரானது முழுமையாகக் கிழக்கு ஜேர்மனிக்குள்தானிருந்தது என்பது தெரியாது. ஆனால் அவ்விதமிருந்ததுதான் தமிழர்கள் கிழக்கு பேர்லினுக்குள் நுழைந்து மேற்கு பேர்லினுக்குள் நுழைய வழி வகுத்தது என்பதை நாவல் எடுத்துக்காட்டுகின்றது. கிழக்கு பேர்லினுக்குள் இருந்த மேற்கு பேர்லினுக்குள் மேற்கு ஜேர்மன் எவ்விதம் ஆடம்பரப் பொருட்களைக் குவித்தது என்பதையும், ஆடம்பரப்பொருட்கள் பல அற்ற நிலையில் வாழ்ந்த கிழக்கு ஜேர்மனி மக்கள் அதனால் ஈர்க்கப்பட்டு மேற்கு பேர்லினுக்குள் படையெடுப்பதைத்தவிர்க்க கிழக்கு ஜேர்மனி அரசால் உருவாக்கப்பட்டதுதான் பேர்லின் சுவர் என்பதையும் எடுத்துக்காட்டும் நாவல் எவ்விதம் கிழக்கு ஜேர்மனிக்குள் ஆடம்பரப் பொருட்களைக் (ஆடைகள் உட்பட) கொண்டு வந்து விற்று வெளி நாட்டு மாணவர்கள் பணம் சம்பாதித்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றது.
இது ஒரு புறமிருக்க இது போல் இன்னுமொரு களமும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. அது மும்பை தாராவிக் குடியிருப்புத் தமிழர்கள் பற்றியது. அகதிகளை அனுப்பும் பிரயாண முகவர்கள் எவ்விதம் செயற்பட்டார்கள், குறிப்பாகப் பெண்கள் எவ்விதம் பல்வேறு வகையான பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்பதை நாவல் பேசு பொருளாக்கியிருக்கின்றது. முகவர்களால் அகதிகளுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு வகையான இடர்களைப்பற்றிப் பல்வேறு கதைகள் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் பெரிதாக யாரும் அவை பற்றி எழுதியதாக நினைவிலில்லை. ஆனால் இவ்வகையில் இந்நாவல் முக்கியத்துவம் மிக்கது. இந்நாவலைப் படிப்பவர்கள் நிச்ச்யம் வளர்மதி என்னும் இலங்கைத் தமிழ்ப்பெண்ணை மறக்கவே மாட்டார்கள். பிரான்சில் இருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவனால் முகவன் ஒருவன் மூலம் அழைக்கப்படும் வளர்மதி மும்பாயில் நிராதரவான நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். அழைத்து வந்த முகவன் கடவுட் சீட்டையும் பறித்த நிலையில், அவனாலும், அவனது இன்னுமொரு நண்பனாலும் (அவனும் முகவன்) பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் அவள் கர்ப்பமாகின்றாள். அப்பொழுது அவள் தவராசா என்னுமொரு தமிழ் இளைஞனைச் சந்திக்கின்றாள். அவனும் இவ்விதம் மும்பாயில் நிராதரவாகவிருக்கும் ஓரிளைஞன். அவன் அவளுக்குப் பல்வேறு வகைகளிலும் உதவி அவளது பயணத்தைத் தொடர வழி சமைக்கின்றான். இவன் நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இவனது ஆளுமையை நாவலாசிரியர் அவனது குறை நிறைகளுடன் விபரிப்பது அவனைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள வாசகர்களுக்கு உதவுகின்றது. அவனது ஆளுமையின் நல்ல பகுதி மேலோங்கியிருப்பதன் விளைவே அவன் வளர்மதிக்கு உதவக் காரணமென்பதை மிகவும் திறமையாக நாவலாசிரியர் விபரித்து வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பாயைப் பற்றி விபரிக்கையில் அதன் காமாத்திபுரா பகுதி பற்றியும் ,அதன் சிவப்பு விளக்குப் பகுதி பற்றியும், அது உருவான வரலாறு பற்றியும் நாவல் விரிவாகவே எடுத்துரைக்கின்றது. அதுவும் ஏனைய புலம்பெயர் நாவல்கள் எவற்றிலும் இந்நாவலிலுள்ளதுபோல் விரிவாகக் கையாளப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
இந்நாவல் வெளிப்படுத்தும் இன்னுமொரு முக்கியமான விடயம். எவ்விதம் முன்னாள் தமிழ்ப்போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அகதிகளைப் போதைப்பொருள் கடத்துவதற்குப் பயன்படுத்துகின்றார்கள் என்பதுதான். கொன்டோம் எனப்படும் ஆணுறைகளைக் ஹிரோயின் போதைப்பொருளால் நிரப்பி , ஆசன வாசல் வழியாகப் பெருங்குடலுக்குள் தள்ளிக் கடத்துகின்றார்கள். இவ்விதம் அகதியாக வரும் ஒருவனுக்கு நான்கு கொண்டோம்களை நிரப்பி அனுப்பியதில் வழியில் ஒரு கொன்டோம் வெடித்து, ஹிரோயின் இரத்தத்தில் கலந்து மரணம் சம்பவிக்கின்றது. இவ்விதம் வரும் சிலருடன் தவராசாவும் வருகின்றான். அவனையும் பொலிசார் சந்தேகிக்கின்றார்கள். இந்நிலையில் கிழக்கு ஜேர்மனிக்குப் புலமைப்பரிசு பெற்று வந்து கல்வி கற்கும் பாலமுருகன் மொழிபெயர்ப்பாளனாகவும் பணியாற்றுகின்றான். அவனது உதவியை தவராசா அனுமதிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலை நாடுகின்றது. தவராசா இவனது ஊர் நண்பனும் கூட.
மேலும் போர்ச்சூழலில் அமைப்பொன்றினால் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி பாலமுருகினின் தாய் இறந்து விடவே அப்போதிருந்த ஊரங்கு நிலை காரணமாக அவனால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அவளது அந்தியேட்டிக் கிரியைகளுக்காகச் செல்கின்றான். அச்சமயம் அவனை மாப்பிள்ளையாக்கத் துடிக்கும் பலரின் செயல்கள் அவனை அருவருப்படைய் வைக்கின்றன. இதே சமயம் தவராசாவைச் சுற்றி இன்னுமொரு கதை பின்னப்பட்டுள்ளது. பெண்களைப்பற்றி எண்ணி உண்ர்ச்சியடையும் அவனால் அவர்களை நெருங்கியதும் உறவுகொள்ள முடிவதில்லை. அவனை மணப்பதற்காக ஊரிலிருந்து அனுப்பப்படும் பெண் ஒருத்தி இறுதியில் வெறுப்படைந்து ஊர் திரும்புகின்றாள். நாவலின் இறுதியில் ஒரு பாலினத்தவனாக்கி விட்டார் நாவலாசிரியர். தவரசா தன் அறுபதாவது வயதில் அலெக்ஸ் என்பவனை ஒருபாலினத் திருமணம் செய்கின்றான்.
கதையின் பிரதான நாயகன் பாலமுருகன். நாவல் தவராசாவுடன் ஆரம்பமானாலும் நாவலைப் படித்து முடிக்கையில் பாலமுருகனே நாவலின் நாயகன் என்பதை உணரும் வகையில் ஆசிரியர் அவனைப் படைத்திருக்கின்றார். கிழக்கு ஜேர்மனிக்குப் புலமைப்பரிசில் பெற்றுச் செல்லும் அவன் , படித்துக் கலாநிதி பட்டம் பெற்று, சிறந்த அறிவியல் அறிஞராக மாறி, அதற்கான விருதை ஜப்பானிலிருந்து பெறுவதற்காகச் செல்வதுடன் நாவல் முடிவுறுகின்றது. நாவல் அவரது உறவுக்காரப்பெண்ணும் , அவன் மேல் மிகுந்த காதல் மிக்கவளுமான சித்திரலேகா என்னும் பெண் இன்னுமொருவனை வீட்டாரின் வற்புறுத்தல் காரணமாகத் திருமணம் செய்கின்றாள்.
நாவல் நடை சுவையானது. எழுத்தாளர் எஸ்.பொ.வின் பாதிப்பைச் சில சொற்கள் நினைவு படுத்துகின்றன. பவுசு , வாலாயம் போன்ற சொற்கள் எஸ்.பொ.வை நினைவு படுத்தின. எழுத்துலகில் எஸ்.பொ. தன் ஆசான என்று நாவலாசிரியர் கூறியது நினைவுக்கு வந்தது. பிடித்த நாவலாசிரியர் ஒருவரின் பாதிப்பு ஒருவரது படைப்பில் தென்படுவது இயல்பானதுதான். ஆனால் எஸ்.பொ.வுக்கும் இவருக்குமிடையிலுள்ள முக்கியமான வித்தியாசம் : எஸ்.பொ பாலியல் விடயங்களை அப்பட்டமாக விபரிப்பார். ஆசி கந்தராஜா பட்டும் படாமலும் , தொட்டும் தொடாமலும் விபரித்துச் செல்வார்.
இந்நாவல் மிகவும் விரைவாகச் செல்கின்றது. தவராசா, வளர்மதி, பாலமுருகன் ஆகியோரின் அனுபவங்களை வைத்து மூன்று நாவல்கள் விரிவாகப் படைத்திருக்க முடியுமென்று நாவலைப் படித்து முடிக்கையில் தோன்றியது. இருந்தாலும் தமிழ் இலக்கியத்துக்குப் புதுக்களங்களை அறிமுகப்படுத்திய பெருமை இந்நாவலுக்குண்டு. புலம்பெயரும் பயண அனுபவங்களை விபரிப்பதுடன் நின்றுவிடாது அவற்றை விமர்சிக்கின்றது இந்நாவல் . அதுவும் இந்நாவலின் முக்கியமானதோர் அம்சம். இன்னுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நாவல் வாசகர்களுக்கு வழங்கும் தகவல்கள். மும்பாய் காமாத்திபுராச் சிவப்பு விளக்குப் பகுதி, மும்பாய் தாராவித் தமிழர் குடியிருப்பு , 'பொட்ஸ்டம்' ஒப்பந்தம் எனப் பல தகவல்களை நாவல் வாசகர்களுக்கு அள்ளித்தருகின்றது. பேராசிரியர் ஆசி. கந்தராஜா தனது உரையொன்றில் அறிவியல் விடயங்களை வாசகர்கள் மத்தியில் இலகுவாக எடுத்துச் செல்வதற்காக அவற்றை வைத்துப் புனைவுகள் படைப்பதாகக் குறிப்பிட்டதும் இத்தருணத்தில் நினைவுக்கு வருகின்றது. ஒருவேளை மேற்படி தகவல்களையெல்லாம் வாசகர்களுக்கு வழங்குவதற்காக அவர் பின்னிய புனைவோ 'அகதியின் பேர்ளின் வாசல்'?
girinav@gmail.com
நன்றி: பதிவுகள்.காம்
No comments:
Post a Comment