Saturday, April 21, 2018

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
http://e-paper.lakbima.lk/…/Apr…/last_22_04_18/manjusawa.pdf  (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -
"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

(பதிவுகள்.காம்) வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்.. - வ.ந.கிரிதரன் -


அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

Monday, April 9, 2018

பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' - வ.ந.கிரிதரன் -

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

Saturday, April 7, 2018

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்... சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ | தமிழில் : வ.ந.கிரிதரன் -



சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக
விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  -



நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.
வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

ஓ! நான் இப்பொழுது தனிமையை உணர்கின்றேன்.
இந்த வெறுமையான வானத்தின் கீழ்
நான் கனத்த இதயத்துடன் காத்திருக்கின்றேன்.
தூரத்துக் கனவினில்
தமது தாய் மண்ணிலிருந்து பறந்து சென்ற
எனது வடக்குப் பறவை நண்பர்களின்
சிறகடிப்பினை நான் கேட்கின்றேன்.
அவர்கள் திரும்பி வருவதைக் காண்கின்றேன்
இந்த இனிய ஆனால் இன்னும் தூரத்துக் கனவினில்

புகைப்படம் உதவி: கத்யானா அமரசிங்க

Kathyana Amarasinghe: kathaish@gmail.com

ngiri2704@rogers.com
[- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில' என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - ]

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை  புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட  காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார். இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.

Tuesday, April 3, 2018

(பதிவுகள்.காம்) நேர்காணல்: பிரபல தமிழ் -சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடனான கலந்துரையாடல். நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன்.

பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த , Nadigamvila Ggs Ananda , அவர்களுடன் அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று 'பதிவுகள்' கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.

இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான  'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?

நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.

சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement)  ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer)  வேலை பார்த்து வருகின்றேன்.

பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.

2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?

 நான் வாழும் பகுதியில் தமிழ் மொழி பாவனையிலில்லை . கல்விப்பொதுத்தராதர உயர்தரப் (G.C.E - A/L)  பரீட்சைக்காக விஞ்ஞான பாடங்களை படிக்கும் காலத்தில் நல்லோர் ஆசிரியரைச் சந்தித்தேன். அந்த ஆசிரியரின் பெயர் M.H.M. நவாஸ். அவர் மூலம் தமிழ் மொழியைப் படித்தேன். A/L முடித்தவுடன்  றுஹுண பல்கலைக்கழகத்தில் ‘Certificate course in Tamil language’ படித்து சான்றிதழைP பெற்றுள்ளேன். மற்றும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ (Centre for policy alternatives) மூலம் நடாத்திய ‘விபாஷா மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தி'ல்  திறமைச் சித்தி பெற்று,  'டிப்ளோமா' சான்றிதலைப் பெற்றுள்ளேன். அப்பாட நெறியைக் கற்கும்போது பிரபல உரை மொழிபெயர்ப்பாளரான எஸ்.சிவகுருநாதன் அவர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. தமிழ்ப் படைப்புகளை சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்தான் எனக்கு எடுத்துரைத்தார். இந்தப் பாதைக்கு என்னைக் கொண்டு வந்தவர் அவர். அது மட்டுமல்ல. இலங்கையில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் அவர் எனக்குத் தந்தார். அவற்றை வாசிக்கும்போது அந்த அனுபவங்களை எனது சிங்கள சமூகத்துக்கும் தர வேண்டும் என நினைத்தேன்.

முதலாவதாக நான் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் வெளியிட்டேன். பிறகு தான் நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன். என் முதலாம் நூல் தான் ‘பேத நெத்தி ஹதவத்’ (பேதமில்லா நெஞ்சங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு. அது 2003ஆம் ஆண்டில் வெளியானது. 2004ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of official languages)  நடாத்திய ‘எழுத்துக்கலை மூலம் மொழி அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் வழங்கும் பங்களிப்புக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்’ முதலாம் இடத்தை அந்த நூல் பெற்றது. அதற்கான பரிசாக 10,000 ரூபாய் பெறுமதியுள்ள ஒரு காசோலையும் கிடைத்தது. என் ஆர்வமும் அதிகரித்த்து.     அவ்வாறு தான் இத்துறைக்கு பிரவேசித்தேன்.

கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -

காலவெளி பற்றிக் கதைப்பதென்றால், உன்னுடன் கதைப்பதென்றால் களி மிகும் கண்ணம்மா. கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும், தேர்ந்த சொற்களும் உன்...

பிரபலமான பதிவுகள்