Monday, April 9, 2018

பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி' - வ.ந.கிரிதரன் -

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.
ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யும், சாண்டில்யனின் 'ஜீவபூமி'யும் விளங்கின.

ஒரு காலகட்ட நினைவுச்சின்னங்களாக விளங்குபவை இவ்வகையான நூல்களே. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டிருக்கின்றேன். அவை என் வாசிப்பனுபவத்தின் படிக்கட்டுகள் என்பதால், அக்காலகட்ட இன்பகரமான நினைவுகளை மீண்டும் நெஞ்சில் பரவ விடும் அழியாத கோலங்கள் என்பதால் அவற்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அவ்வகையில் என் அவ்வாசை அண்மைக்காலமாக படிப்படியாகத் தீர்ந்துகொண்டு வருகின்றன. கல்கியில் வெளியான பல தொடர்கதைகளை அழகான ஓவியங்களுடன் பைண்டு செய்து  வைத்திருந்தவை மீண்டும் கல்கியின் இணையத்தளத்தில் பெற முடிந்தது. அந்த ஆசை அவ்வகையில் தீர்ந்து போனாலும், ராணிமுத்துகளை மட்டும் மீண்டும் பெறவே முடிந்ததில்லை. ஆனால் அந்த விடயத்திலும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் என் பால்ய காலத்து நண்பர் வவுனியா விக்கியிடம் இதுபற்றிக் கூறியிருந்தேன். எங்காவது பழைய புத்தகக் கடைகளில் இவ்வகையான புத்தகங்களைக் கண்டால் அறியத்தரவும் என்று கூறியிருந்தேன். அவர் குறுகிய காலத்திலேயே பழைய புத்தகக் கடையொன்றில் ராணிமுத்து பிரசுரமாக வெளியான நந்திவர்மன் காதலி  நாவலினைக் கண்டு பிடித்துக் காணொளி அனுப்பியிருந்தார்.

சிறு குறை: அட்டைப்படத்தைக் காணவில்லை. ஆனால் அட்டைப்படம் தவிர நூல் முழுமையாகக் கிடைத்தது. நன்றி விக்கி

அந்நூலிலுள்ள ஜெயராஜின் ஓவியங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அவ்வோவியங்களைப்பார்த்தபோது நான் அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டேன். இவையெல்லாம் காலத்தைத் தாண்டி எம்மைக்கூட்டிச் செல்லும் காலக்கப்பல்கள்.

மேலும் சில ஓவியங்கள்:

ngiri2704@rogers.com

No comments:

எழுத்தாளர் காத்யானா அமரசிங்கவின் யாழ் நூலகம் பற்றிய பத்தி பற்றி...

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபா...

பிரபலமான பதிவுகள்