இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார். இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.
இவரது எழுத்தினைப்பற்றி மேற்படி 'அக்கா' சிறுகதைத்தொகுப்பில் அணிந்துரை வழங்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இவரைப்பற்றிக் கூறுவதையும், அ.மு. அவர்கள் நூலுக்கான முன்னுரையில் தன்னைப்பற்றிக் கூறுவதையும் நோக்குவது பயன் மிக்கது. அவரது எழுத்து பற்றிய சிந்தனையில் தெளிவினை அடைய அவ்வகையான நோக்கு உதவும். முதலில் கைலாசப்தி அவர்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம்:
"தனக்கென ஒரு நடையையும் போக்கையும் வகுத்துக் கொண்டு எழுதி வந்தார் அவர். தொகுதியிலடங்கியுள்ள கதைகள் எனது கூற்றுக்குச் சான்று... 'அக்கா' என்னும் தலைப்புப் பெயரைப் பார்த்துவிட்டு வாசகர் எந்த விதமான அவசர முடிவுக்கும் வந்துவிடக் கூடாது, காதல், சகோதர பாசம், குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான 'பல்லவி இங்கு பாடப்படவில்லை. காதல் போயிற் சாதலென்றே, சமூகத்தின் கொடுமை என்னே என்றே, வஞ்சனை செய்யும் மனிதரைப் பாரீர் என்றும், கதாசிரியர் எம்மை நோக்கிக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர். நேர்மை, எளிமை, நுட்பம், விளக்கம், ஆகிய பண்புகள் பசுமை குலையாத ஓருள்ளத்திலிருந்து வந்து எமக்குப் புத்துணர்ச்சியளிக்கின்றன. நமது உணர்வைத் தொட்டுத் தடவிச் செல்கின்றன...... திரு. முத்துலிங்கம் பல்கலைக் கழகத்திலே விஞ்ஞானம் படித்த பட்டதாரி. கணிதத்தையும், பெளதீகவியலையும் இரசாயனவியலையும் படித்த அளவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துள்ளார் என்று கூறமுடியாது. அது காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றினால் கவரப்பட்டு, அவற்றின் வழிநின்று எதிரொலிக்கும் பண்பு அவரிடம் காணப்படவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும். இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவமும், போலியுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு, எழுதி வருகின்றார், இலக்கிய அறிவும், நூற் படிப்பும் எழுத்தாளனுக்கு ஆகாதன என நான் கூறுவதாக எவரும் கருத வேண்டியதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக் குதவாது என்னும் பழமொழியையே நான் இலக்கிய சிருட்டித் துறைக்கு ஏற்றிச் சொல்கின்றேன்; அவ்வளவுதான். தனது அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு திரு. முத்துலிங்கம் எழுதிவருவதினுல் அவர் எழுத்துக்களில் பலமும் பலவீனமும் விரவிக் காணப்படுகின்றன. எனினும் தராசில் பலம் தாழ்ந்தே காணப்படுகின்றதென்பதில் ஐயமில்லை. சிறு கதை, நாவல் ஆகியவற்றில் அடிக்கடி காணப்படும் நைந்து போன சொற்றொடர்களோ, கதை நிகழ்ச்சிகளோ, பாத்திரங்களோ இக்கதைகளில் காணப்படா; அதே சமயத்தில் பிரச்சினைகளும் காணப்படா. ஆனால், ஆசிரியர் திறம்படச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகளையும், குமைவுகளையும், சலனங்களையும், கொந்தளிப்பையும், நாம் இலகுவில் உணர்ந்து கொள்கிறோம்..... ஆசிரியரின் சிறப்பியல்பு. இவ்வெற்றிக்குத் துணை செய்யும் அமிசங்கள் சிலவற்றையும் குறிப்பிடல் வேண்டும். யாழ்ப்பாணத்திலே கொக்குவில்கோண்டாவில் - இணுவில் - பகுதியே ஆசிரியரது பெரும் பாலான கதைகளின் களம். அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருக்கள், ஒழுங்கைகள், கோயில் ஆகியன உயிர்த்துடிப் புடன் கதைகளில் இடம் பெறுகின்றன; மக்களின் ஊண், உடை, பழக்கவழக்கங்கள், கம்பிக்கை முதலியன பாத்திரங்களின் சூழலுக்கு வரம்பு செய்கின்றன; அவ்வரம்பிற்குள்ளேயே மனித உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன; அவ்வுணர்ச்சிகள் தாம் பிறந்த சொல் வடிவிலேயே எமக்குப் பொருள் விளக்கஞ் செய்கின்றன; நுணுக்கமான ஒலியலைகளைப் பதியும் நுண் கருவிபோலத் தனக்கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறையில் சொற்களிலே தேக்கியுள்ளார் திரு. முத்துவிங்கம்."
பேராசிரியர் கைலாசபதியின் இந்த நூல் அணிந்துரை ஒரு வகையில் தீர்க்கதரிசனம் மிக்கது. இத்தொகுதி வெளியாகிப் பல வருடங்களுக்குப் பின்னர் , புலம் பெயர்ந்திருந்த சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற சூழலில், மீண்டும் எழுத்துலகில் தீவிரமாக இயங்கத்தொடங்கிய அ.மு.வின் இரண்டாவது 'இன்னிங்ஸ்'ஸில் எழுதிய அவரது எழுத்துகளுக்கும் குறிப்பாக அவரது புனைவுகளுக்குமுரிய எழுத்துகள் பற்றிய திறனாய்வுப்பார்வையாகக் கூறலாம். கொக்குவில், கோண்டாவில் போன்ற அவரது ஆரம்ப காலக்கதைகளின் களமாக விளங்கிய இடங்களுக்குப் பதில் , அவரது பிற்காலப்புனைவுகளின் களங்களாக அவர் பணியின் பொருட்டுச் சென்று பணியாற்றிய , வாழ்ந்த பிரதேசங்கள் விளங்கின. கைலாசபதி அவர்கள் கூறுவதைப்போல் 'நுணுக்கமான ஒலியலைகளைப் பதியும் நுண் கருவிபோலத் தனக்கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறையில் சொற்களிலே ' தனது பிற்காலப் புனைவுகளையும் கூறியுள்ளார் என்று கூறலாம். உண்மையில் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 'அக்கா' நூற்தொகுப்பு அணிந்துரையானது அ.மு.அவர்களின் எழுத்துகளைப்பற்றிய சிறப்பான திறனாய்வாக விளங்குகின்றது. இது பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் திறனாய்வுச் சிந்தனையின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றது.
இதே 'அக்கா' தொகுப்பு நூலில் அ.மு. அவர்கள் தன் எழுத்தைப்பற்றிக்கூறுவதையும் அவதானிப்பது முக்கியமானது. அதிலவர் பின்வருமாறு கூறியிருப்பார்: "நண்பர் திரு. கைலாசபதி தமது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான்; சமுதாயத்தைச் சீர்திருத்தவோ, பிரச்சினைகளைப் பிட்டுக்காட்டவோ, எழுந்தனவல்ல என் கதைகள். நான் கண்ட, கேட்ட, அனுபவித்த, சம்பவங்களை, உணர்ச்சிகளை என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்; வேறென்றுமில்லை.
கதையைப் படித்து முடிந்ததும் வாசகனிடத்து ஒரு பூரண நிறைவு நிலவ வேண்டும். வாசித்ததை நிதானிக்கக்கூடிய ஒரு பக்குவம், தன் சுற்றாடலை ஒரு புதுக் கோணத்தில் கண்டுவிட்ட திருப்தி, படித்த பொருளின் மீது ஒரு லயிப்பு, இவை என் வாசகனுக்கு ஏற்பட்டால் அதுவே எனக்குப் போதுமானது. என் கதைகளில் சமுதாயத்தின் ஊழல்கள் தொனிக்கலாம்; தொனிக்காமல் விடலாம். சமூகக் குறைபாடுகளை நான் நிர்மூலம் செய்யப் புறப்படவில்லை; நான் பிரசாரகனும் அல்லன். ஆனால், என்னைச் சுற்றிலும் நான் காணும் மனிதப்பண்பற்ற, மனித நிறைவற்ற நிகழ்ச்சிகளைச் சொல்லாவிட்டால், சொல்லிப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என்னில் எனக்கே திருப்தி ஏற்படுவதில்லை."
இவ்விரு கூற்றுகளும் அ.மு. அவர்களின் எழுத்துகளைப்பற்றிய ஆழமான திறனாய்வுக்கு ஆரம்பப்படிக்கட்டுகளாக விளங்கும் கூற்றுகள். அ.மு.வின் பிற்கால எழுத்துகள், ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் அனைத்திலுமே இக்க்கூற்றுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் விரவிக்கிடப்பதை அவரது எழுத்துகளை வாசிக்குமொருவர் உணர முடியும்.
எழுத்தாளர் அ.மு.வின் இலக்கியப்பங்களிப்பின் ஆரம்ப காலகட்டமான அவர் புலம்பெயர்வதற்கு முற்பட்ட காலகட்டத்தில் அவரது எழுத்துகளில் பெரும்பாலானவை சிறுகதைகளாகவே இருந்திருந்தாலும் அவரது இலக்கியப்பங்களிப்பானது சிறுகதை வடிவத்துடன் மட்டும் நின்று விடவில்லை. நாடகத்திலும் அவரது பங்களிப்பு இருந்திருப்பதை அறிய முடிகின்றது. சி. மெளனகுரு, எம்,.ஏ. நுஃமான் மற்றும் சித்திரலேகா போன்றோர் இணைந்து எழுதி, 'வாசகர் சங்க' வெளியீடாக வெளிவந்த 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் அதனை வெளிப்படுத்துகின்றது. அந்நூலில் வரும் பின்வரும் கூற்றானது அதனையே புலப்படுத்துகின்றது:
"பேராசிரியர் கணபதிப்பிள்ளை அறிமுகம் செய்த பேச்சுத் தமிழையும், இயற்பண்பு நாடக நெறியையும் நன்கு புரிந்து கொண்டு நாடக நிலை நோக்குடனும், பிரக்ஞையுடனும் ஈழத்தில் தமிழ் நாடகத்தை வளர்த்தவர்கள் பல்கலைக்கழகத்தினரும் பல்கலைக்கழக வழிவந்தோருமே. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கிருந்தன. அ. முத்துலிங்கத்தின் 'சுவர்கள்', 'பிரிவுப்பாதை', சொக்கனின் 'இரட்டை வேஷம்', அ. ந. கந்தசாமியின் 'மதமாற்றம்' என்பன பேராசிரியர் மரபில் பல்கலைக்கழகம் மேடையேற்றிய நாடகங்களாகும்."
அ.ந.க.வின் புகழ்பெற்ற 'மதமாற்றம்', சொக்கனின் 'இரட்டை வேஷம்' ஆகிய நாடகங்களுடன் அ.மு.வின் 'சுவர்கள்', 'பிரிவுப்பாதை' ஆகியனவும் இணைந்து குறிப்பிடப்பட்டிருப்பதானது அவரது இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அவரது நாடக வடிவப்பங்களிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் , எதிர்காலத்தில் அ.மு.வின் இலக்கியப்பங்களிப்புகள் பற்றி ஆராய விரும்பும் அனைவரும் கவனத்தில் வைக்க வேண்டிய கூற்றாகவுமுள்ளது. இதுவரையில் அ.மு.வின் பல்வகை எழுத்துகள் பற்றிய விரிவான ஆய்வுகள் வெளிவராதிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் அவரது எழுத்துகள் பற்றிய விரிவான திறனாய்வுகளுக்கு இவ்விதமான ஆய்வு நூல்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் முக்கிய சான்றுகளாக அமையும்.
அ.மு.வின் புலம்பெயர்ந்ததற்குப் பின் வெளியான எழுத்துகளைப்பொறுத்தவரையில் அவை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள், நாவல்கள் எனப் பன்முகப்பட்டவையாக விளங்குவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் வடிவங்கள் வேறானவையாகவிருந்த போதிலும், அவற்றில் பாவிக்கப்பட்டுள்ள எழுத்து நடையினைப்பொறுத்தவரையில் கூறப்படும் விடயங்கள் சுவையாக, வாசகர்களை ஈர்க்கும் வகையில் கூறப்பட வேண்டும் என்னும் நோக்கில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை அவரது பலவீனங்களிலொன்றாக நான் கருதுவேன். புனைவுகளைப்பொறுத்தவரையில் வேண்டுமானால் பாவிக்கப்பட்டுள்ள மொழியின் சுவைக்கு ஆசிரியர் முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால் இலக்கிய விமர்சனங்கள், நேர்காணல்கள போன்ற அபுனைவுகளைப்பொறுத்தவரையில் அவற்றின் ஆழத்தினை வெளிப்படுத்தும் வகையிலான மொழி நடைக்கே ஆசிரியர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதென் கருத்து. ஏனெனில் இவ்வகையான அபுனைவுகளின் அடிப்படை நோக்கம் வாசகர்களைத் திருப்திப்படுத்துவதல்ல. மாறாக அவர்களுக்கு அவ்விடயங்களில் மேலும் புரிதல்களை ஏற்படுத்துவது. ஆயினும் அ.மு.அவர்களின் அபுனைவுகள் பல பல்வேறு சஞ்சிகைகள். பத்திரிகைகளில் வெளியான பத்தி எழுத்துகளாகவும் அமைந்திருப்பதால், பத்தி எழுத்துகளின் அடிப்படைத்தன்மை வாசகர்களுக்குச் சுவையாக விடயங்களைத் தருவது என்றிருப்பதால், அதன் காரணமாக அ.மு. அவர்கள் அவ்விதமான வாசகர்களை ஈர்ப்பதை மையமாகக் கொண்ட நடையினைக் கையாண்டிருக்கலாம்.
புனைவுகளைப்பொறுத்தவரையில் அ.மு.அவர்களது எழுத்துகளில் முக்கியமாக அமைந்திருப்பது அவரது அனுபவங்கள் வாயிலாக அவரடைந்த உணர்வுகளின் வெளிப்பாட்டைத்தான். ஒரு சில புனைவுகளில் அவர் ஏனையவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து படைப்புகளைத் தந்துள்ளார். அவ்வகையான படைப்புகள் அவற்றின் உண்மைத்தன்மை காரணமாகப் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியுள்ளன. இவ்விதமான வாதப்பிரதிவாதங்கள் அவரது சொந்த அனுபவங்களின் விளைவாக உருவான படைப்புகளுக்கு எழுந்ததில்லை என்பதையும் சிறிது நோக்குவதும் பயன் மிக்கதே.
அவரது புனைவுகள் பல அவரது சொந்த அனுபவங்கள் வாயிலாக அமைந்திருப்பதால், இலங்கைத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலத்தில் அவர் பெரும்பாலான காலகட்டங்களில் பிறநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தததால் , அவரது படைப்புகள் அக்காலகட்ட ஈழத்தமிழர்களின் வலியினை, துயர்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. இருப்பினும் அவ்விதமான படைப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையான ஒரு படைப்பாக, முதல் வாசிப்பிலேயே என்னை அதிர வைத்த படைப்பாக நான் அவரது சிறுகதையொன்றினைக் கூறுவேன். அது அவரது 'புதுப் பெண்சாதி' என்னும் சிறுகதையாகும். அ.மு. கதைகள் தொகுப்பிலுள்ள கதைகளிலொன்று (தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியான தொகுப்பு). இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த , தொகுப்புகளில் தவிர்க்க முடியாத கதைகளிலொன்றாக, அ.மு.வின் சிறுகதையாக அச்சிறுகதையினையே நான் குறிப்பிடுவேன். அவரது புனைவுகள் எல்லாமே அவற்றின் தனித்தன்மை காரணமாகவும், நடைச்சிறப்பு காரணமாகவும் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவைதாம்; தடம் பதித்தவைதாம். இருந்தாலும் தொகுப்பென்று வரும்போது எவ்விதம் வ.அ. ராசரத்தினத்தின் 'தோணி' சிறுகதையினைத் தவிர்க்க முடியாதோ, அ.ந.கந்தசாமியின் 'இரத்த உறவு' சிறுகதையினைத் தவிர்க்க முடியாதோ, செங்கை ஆழியானின் 'கங்கு மட்டை'யினைத் தவிர்க்க முடியாதோ அவ்விதமே அ.மு.வின் இச்சிறுகதையினையும் தவிர்க்க முடியாது என்று தனிப்பட்டரீதியில் கருதுகின்றேன். அச்சிறுகதை கூறும் கதை இதுதான்: படிப்பறிவற்ற தன் கணவனுடன் கொக்குவில் கிராமத்துக்கு வரும் படித்த அழகியான புதுப்பெண்சாதி தன் கணவனின் கடையில் வியாபாரத்துக்கு உதவுகின்றாள். கணவன் இறந்ததும் மகளுடன் கடையினைக் கொண்டு நடத்துகின்றாள். அவளது வாழ்க்கையானது இலங்கையில் நிலவிய போர்ச்சூழல்கள் காரணமாகச் சீர்குலைகின்றது என்பதை விளக்குவதுதான் கதை. கதையின் இறுதியில் அவளை இந்தியப்படையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்கள். அதன் பிறகு அவள் மீண்டும் திரும்பவேயில்லை. இன்று வரை அக்கதையினை வாசித்ததிலிருந்து அப்புதுப்பெண்சாதிக்கு ஏற்பட்ட துயரகரமான முடிவு என் மனத்தைப்பாதித்துக்கொண்டேயிருக்கின்றது. அவ்விதப்பிரச்சாரமுமற்ற, பாத்திரங்களினூடு, மொழியினூடு நடத்தப்படும் கதையானது எவ்வளவு சிறப்பாக அக்காலகட்டப்போர்ச் சூழலின் மீது, அதனாலேற்பட்ட மானுடத் துயரங்கள் மீது சீற்றமடைய நம்மை, வாசிப்பவரை வைத்து விடுகின்றது.
மேலும் 'இலங்கைத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலத்தில் அவர் பெரும்பாலான காலகட்டங்களில் பிறநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தததால் , அவரது படைப்புகள் அக்காலகட்ட ஈழத்தமிழர்களின் வலியினை, துயர்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை ' என்றாலும் அவரது புனைவுகள் அவர் வாழ்ந்த பிரதேச மக்களின் வாழ்க்கையினை, அவர்கள் மத்தியில் நிலவிய கலாச்சாரக் கூறுகளை, 'புழங்கிய' சொற்களை எனப் பல்வேறு விடயங்களைப்பதிவு செய்திருக்கின்றன. செய்கின்றன. அவ்வகையிலும் அவரது எழுத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால்தான் கைலாசபதி அவர்கள் தனது 'அக்கா' நூலுக்கான அணிந்துரையில் "கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழிலக்கியத்திலே காணப்படும் புத்தொலியின் ஒரு குரல்தான் திரு. முத்துலிங்கம். தேசீயப் பண்பிற்கும் பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கும் நமது பாரம்பரியத்திற்கும் கொடுக்கப்பட்டு 'வரும் முக்கியத்துவமே, யாழ்ப்பாணத்தின் ஒரு சிறு பகுதியை உணர்ச்சி வடிவிற் கண்டுணர்ந்து எழுதும் முத்துலிங்கம் துரிதமாக வளரக்கூடிய வாய்ப்பையும், அவ்வளர்ச்சியின் சின்னங்களாகிய கதைகளுக்கு நிரம்பிய ஆதரவையும் அளித்தது" என்று கூறுகின்றார். உண்மையில் எவ்வித 'இசங்க'ளுக்குள்ளும் சிக்கி விடாது, தனித்தன்மையுடன் அன்றிலிருந்து இன்றுவரையில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அ.மு,.வின் குரலானது புத்தொலியின் ஒரு குரலாகத்தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அதுவே அவரது எழுத்தின் தனித்துவமும், சிறப்புமாகும்.
ngiri2704@rogers.com
No comments:
Post a Comment