இவர்களுடன் களிப்புடன் கழித்த நாட்களை நான் அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. மறக்க முடியாத இன்பம் மிக்க நாட்கள் அவை. இவர்களுடன் கழித்த பொழுதுகள் இனியவை.
ஆனால் என் நண்பர்களிருவருக்கும் ஏற்பட்ட நிலை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அப்போது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலிருந்ததால் உடனடியாக ஓடிச்சென்று அவர்களைப்பார்க்க என்னால் முடியவில்லை. ஆம்! அவர்கள் ஜூன் 1, 1981 அன்று எரித்துச் சிதைக்கப்பட்டார்கள். எரிந்து குற்றுயிருடன் அவர்களிருந்த கோலம் கண்டு உலகமே ஒரு கணம் அதிர்ந்தது. ஆம்! என் நண்பர்களான யாழ் நூலகத்தையும், ஈழநாடு பத்திரிகையையும் தாம் குறிப்பிடுகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் அவை அஃறிணைகளல்ல. உயர்திணைகள். அவைகள் அல்ல. அவர்கள். உயிர் நண்பர்கள்.
என் இனிய பால்ய, பதின்மப் பருவத்து நண்பர்கள் எரியுண்ட தினம் ஜூன் 1. அவர்களுடன் கூட யாழ் சந்தை எரிந்தது. யாழ் எம்.பி. யோகேஸ்வரனின் வீடு, கார் எரிந்தன.இன்று யாழ் நகர் மீண்டும் எழிலுடன் திகழ்கின்றது. யாழ் நூலகம் பொலிவுடன் திகழ்கின்றது. ஈழநாடு என்னும் பெயரில் புதியதொரு பத்திரிகை வெளியாகின்றது. ஆனால் வரலாறு ஒருபோதுமே அழிந்து விடுவதில்லை. வரலாற்றுச்சுவடுகள் நினைவுகளில், பல்வகை ஊடகங்களில், படைப்புகளில் நிலைத்து நிற்கும். இனிய நண்பர்களே! உங்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரநாளை இன்று நினைவு கூர்கின்றோம். என்றும் நினைவு கூர்வோம். நீங்கள் எனக்கு, எம் மக்களுக்கு, மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு எம்மால் கைம்மாறு ஒரு போதுமே செய்ய முடியாது. தன்னலமற்றைசேவைகளை வழங்கினீர்கள். அவற்றுக்காக நன்றி நண்பர்களே!
No comments:
Post a Comment