Monday, January 10, 2022

பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -

- பதிவுகள் வெளியிட்டுள்ள அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ள அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலில் வெளிவந்துள்ள வ.ந.கிரிதரனின் அறிமுகக் கட்டுரை. -
(பதிவுகள்.காம்) அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல்! ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.
அ.ந.க. வாசிப்பு அனுபவமும், எழுத்தனுபவமும் அதிகம் வாய்க்கப்பெற்றவர். இந்த நாவலை மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னிப் படைத்துள்ளார். மேற்படி முடிவுரையில் வரும் அவரது பின்வரும் கூற்று அ.ந.க.வின் நாவல் பற்றிய புரிந்துணர்வினையும், அப்புரிந்துணர்வின் விளைவாகவே அவர் இந்நாவலினைப் படைத்துள்ளார் என்பதையும்தான்:
"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது. “மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது."
கட்டுரையை முழுமையாக வாசிக்க https://www.geotamil.com/.../202.../7026-2022-01-01-15-12-29

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்