Monday, January 10, 2022

(பதிவுகள்.காம்) அஞ்சலி: எழுத்தாளர் கோவி மணிசேகரன் மறைவு! - வ.ந.கிரிதரன்


இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி.
தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி நினைத்ததும் பல நினைவுகள் படம் விரிக்கின்றன. என் பால்ய காலத்து வாசிப்பனுவத்தில் இவருக்கும் பங்குண்டு. கல்கியில் இவரது சிறுகதைகள் பலவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன். இவரது தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது. ராணிமுத்துப் பிரசுரமாகவும் இவரது வரலாற்று நாவலான 'சோழநிலா' வெளியாகியுள்ளது. 'ராஜசிம்மன் காதலி'யும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளிவந்த விடயத்தையும், அந்நாவல் பின்னர் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக 'ராஜசிம்ம பல்லவன்' என்னும் பெயரில் வெளியான தகவலையும் தமிழ் வரலாற்று நாவல்களை ஆவணப்படுத்தி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் அறியத்தந்திருந்தார். அத்துடன் 'ராஜசிம்ம பல்லவன்' நூலின் பிரதியினையும் அனுப்பி உதவினார். அவருக்கு என் நன்றி.

'ராஜசிம்மன் காதலி' நாவலைப் பற்றி எண்ணியதும் பால்ய பருவத்து நினைவுகள் மேலும் சில சிறகடிக்கின்றன. எழுபதுகளில் யாழ்ப்பாணம் தமிழ்ப்பண்ணையில் தினத்தந்தி பத்திரிகையை வாங்கி வாசிப்பது வழக்கம். முக்கிய காரணம் அப்போது இவரது 'ராஜசிம்மன் காதலி'அதில் தொடராக வெளியாகிக் கொண்டிருந்ததுதான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அந்நாவலின் நடை. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது 'ராஜசிம்மன் காதலி'. ஏதோ சில காரணங்களினால் அந்நாவலை என்னால் தொடர்ந்து வாசிக்கச் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. படிப்பு காரணமாகத் தினத்தந்தியை வாங்குவதற்குத் தவற விட்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அன்றிலிருந்து அரைகுறையாக வாசித்திருந்த அந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற நினைவு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் அந்நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் சுந்தர் கிருஷ்ணன் அனுப்பும் வரை அமைந்திருக்கவில்லை. உண்மையில் இன்றுதான் அவரிடமிருந்து 'ராஜசிம்ம பல்லவன்' நாவல் கிடைத்தது. அது பற்றிய தகவலில் அவர் இந்நாவல் ராஜசிம்மன் காதலி என்னும் பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும், வள்ளுவர் பண்ணை வெளியீடாகவும் வெளியான விபரங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னரே இணையத்தில் கோவி மணிசேகரன் பற்றித் தேடுகையில் அண்மையில் அவர் மறைந்த தகவலையும் அறிந்துகொண்டேன். என் நீண்ட காலத்துப் பால்ய பருவத்து நிறைவேறாத ஆசைகளிலொன்றினை நிறைவேற்றியதற்காக மீண்டுமொரு தடவை சுந்தர் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
கோவி மணிசேகரனுக்கு அவரது நாவலான 'குற்றாலக் குறிஞ்சி'க்காகச் சாகித்திய விருது கிடைத்தது. அப்போது அதற்கெதிராகப் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததும் நினைவுக்கு வருகின்றது. என்னைப்பொறுத்தவரையில் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்புக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார். மேலும் விருதுகள் எழுத்தாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிப்பவையாக நான் கருதுவதில்லை. விருதுகளுக்கு அனுப்பப்படும் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நூல்களிலொன்றுக்கு விருது வழங்கப்படுகின்றது. கூடவே அவ்விருதுகளை வழங்கும் அமைப்புகள் அல்லது குழுக்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் அவ்விருதுகளுக்கான தேர்வுக்க்கு முக்கிய காரணங்களிலொன்றாகவுமிருக்கின்றார்கள். உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புகளூடுதாம் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கின்றார்கள். அதே சமயம் விருதுகள் பெற்ற பலரைக் கால வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. யாரும் அவர்களை நினைப்பதுமில்லை. வாசிப்பதுமில்லை.
கோவி மணிசேகரனின் என்னைக் கவர்ந்த தமிழ் நடைக்கு ஒரு மாதிரியாக அவரது 'ராஜசிம்மன் காதலி' (ராஜசிம்ம பல்லவன்) நாவலிலிருந்து சில வரிகள்:
"நிலாத் திலகமிட்டுப் பவனி வந்த அந்த இரவென்னும் கரிய மங்கைக்குத்தான் எத்துணை வரவேற்பு. எத்துணை வாழ்த்துரைகள். பொதிகை மலைத்தூதன் - பூந்தென்றல் காற்றழகன் பூக்காட்டை முத்தமிட்டுப் புழுங்கித் தவிக்கும் மக்களின் வேக்காட்டைத் தணிக்கத் தொடங்கினான். மேனி சிலிர்க்க - மெய்வண்ணம் பொலிந்தசைய - நாணித் தலைசாய்க்கும் நல்லினத்து நங்கையர் போல், வெண்மலரினங்கள் மாரவேள் நடனம் புரிந்தன. இருளில் வெண் சிரிப்பு. பொருளில் பொன் மயக்கம். "
ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்