Tuesday, March 28, 2023

அத்தியாயம் இருபத்திமூன்று - நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக்  கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின்  சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப்  பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை  அறிந்து கொள்வதும்.

இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி  நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

Thursday, March 16, 2023

வாழ்த்துகிறோம்: பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' நாவல் 'சர்வதேச புக்கர்' விருதுக்குப் பரிந்துரைப்பு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' ,அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  'பூக்குழி' தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு  Hamish Hamilton Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகமானது பென்குவின் நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சேய் நிறுவனமாகும் என்பதும், குறிப்பிடத்தக்கது.  

Tuesday, March 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -

"என்ன  கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே  வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.

"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும்  எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "

வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத்  திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.

Saturday, March 4, 2023

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -


 - எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க  

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில்  இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட  அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ்  இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர்.  தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால்  எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்.   நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.

தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம்.  அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில்  அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம்.    இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு  செய்யப்பட வேண்டிய  கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள்  நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்  வெளியிட்ட நூல்.  'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக  மனக்கண் (நாவல்) ,  எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) &  நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்