Thursday, March 16, 2023

வாழ்த்துகிறோம்: பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' நாவல் 'சர்வதேச புக்கர்' விருதுக்குப் பரிந்துரைப்பு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' ,அனிருத்தன் வாசுதேவனால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  'பூக்குழி' தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு  Hamish Hamilton Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகமானது பென்குவின் நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சேய் நிறுவனமாகும் என்பதும், குறிப்பிடத்தக்கது.  இந்த பூக்குழி நாவல் இரு வேறு சமூகப்பின்னணியைக் கொண்ட குமரசேனனும், சரோஜாவும் மணம் செய்து , இருவரும் குமரேசனின் கிராமத்துக்கு வருகின்றார்கள். அக்கிராமத்தில் சாதி வெறி  பிடித்தலையும் குமரேசனின் கிராமத்தவர்கள் இளம் மனைவியான சரோஜாவைப் பல் வழிகளிலும் துன்புறுத்துகின்றார்கள். முடிவில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் பூக்குழி நாவலின் மையக்கரு. முடிவைக்கூட பலவிதங்களில் வாசகர்கள் அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளும் வகையில் எழுதியிருக்கின்றார் பெருமாள் முருகன். நாவலை தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் நாவலாசிரியர். இளவரசன் சாதி வெறியர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஒருவர்.


இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு இது வெகுசன இதழான கல்கியில் தொடராக வெளியான நாவல். பொதுவாக வெகுசனப் படைப்புகளை எள்ளி நகையாடும் தீவிர இலக்கியவாதிகள் இன்று இவ்விதம் எழுதப்பட்ட தொடர் நாவலொன்று மதிப்பு மிக்க 'புக்கர்' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக்கண்டு நிச்சயம் வியப்படைந்திருப்பார்கள்.

பூக்குழி என்றால் தீ மிதிப்பு அல்லது குளிப்புக்காகத் தணல்களுடனிருக்கும் நெருப்புப் படுக்கையை.  உண்மையில் பூக்குழி என்பது இங்கு இடக்கரடக்கல் சொல்லாகப் பாவிக்கப்படுகின்றது.


இந்நாவல் விரிந்ததொரு பெரு நாவலல்ல. 146 பக்கங்களை உள்ளடக்கியுள்ள நாவலே. ஆனால் இந்நாவலுக்கு இன்று கிடைத்துள்ள முக்கியத்துவம் பல வழிகளிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்களுக்கும் ,  மொழிபெயர்ப்பாளர்களுக்கும் , வாசகர்களுக்கும் நன்மையினையே அளித்துள்ளது எனலாம். தமிழில் உலகத்தரம் மிக்க புனைகதைகள் பல இருக்கின்றன. ஏனைய இந்திய மொழிகளிலும் எத்தனையோ படைப்புகளுள்ளன.  இவற்றையெல்லாம் மொழி பெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் இனிமேல் நிச்சயம் முயற்சிகள் செய்வார்கள். ஏனெனில் இவ்விதமான மொழிபெயர்ப்புகளுக்கு பண விருதுகள் கிடைக்கும்போது அதனை மூல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் பகிர்ந்து கொள்வார்கள். 

மேலும் 'சர்வதேச புக்கர் விருது'க்குப் பரிந்துரை செய்யப்பட்டதுமே உலக அளவில் இந்நூலின் விற்பனை அதிகரிக்கும். விருதினைப் பெற்றால் இன்னும் அதிகரிக்கும். இது நூலாசிரியருக்கு நன்மை தருவது.

அண்மையில் ஆஸ்கார் விருது RRR திரைப்படப்பாடலான 'நாட்டு. நாட்டு' பாடலுக்குக் கிடைத்தது. தமிழ் ஆவணபடமான The Elephant Whisperersற்கும் சிறந்த ஆவணப்பட  ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இப்போது பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் 'சர்வதேச புக்கர்'' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள செய்தி வந்துள்ளது. வாழ்த்துகள்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்