Tuesday, March 7, 2023

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -

"என்ன  கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே  வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.

"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும்  எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "

வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத்  திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.

"அப்போ, வேறெதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தாய் கண்ணா?  வழக்கம்போல் ஆகாயம் , பிரபஞ்சம், இருப்பு, காலவெளி இப்படி எதைப்பற்றித்தானே நினைத்துக்கொண்டிருப்பாய். அப்படித்தானே கண்ணா?"

"கண்ணம்மா சொன்னால் பிழையாக எதுதானிருக்கும்? இல்லையா கண்ணம்மா?"

"சரி , சரி சுற்றி வளைக்காமல் விடயத்துக்கு வா கண்ணா. அப்போ நான் சொன்னது சரிதானே. சரி நானே சொல்லுறேன் நீ என்ன நினைத்துக்கொண்டிருந்தாயென்று. சொல்லட்டுமா கண்ணா?"

"சொல்லு கண்ணம்மா. பார்ப்போம் சரியாகக் கண்டு பிடிக்கிறாயாயென்று."

"காலப்பயணம் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாயென்று நினைக்கின்றேன் கண்ணா."

"கண்ணம்மா மிகவும் நெருங்கி வந்து விட்டாய. அதற்கு மிகவும் நெருங்கியதொரு விடயம் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்."

"சரி சரி கண்ணா, ஓரளவு நெருங்கி விட்டதே போதும், நீ கூறு என்ன விடயமென்று.."

"எல்லாம் ஒளி வேகத்தையும் மிஞ்சிச் செல்லக்கூடிய துகள்களுண்டா என்ற சிந்தனை திடீரென ஏற்பட்டது.  அவ்விதமான துகள்கள் இருப்பதாக முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவுண்டு."

'கண்ணா, நீ கூறுவதும் சரிதான்., எனக்கும் நினைவுண்டு.  நானும் வாசித்திருக்கிறேன்.  'டகியோன்ஸ்' (Tachyons) என்ற துகள் பற்றி ஊடகங்களில் வாசித்திருக்கின்றேன். "

"ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லையென்றுதான் நினைக்கிறேன் கண்ணம்மா"

"ஏன் கண்ணா, அப்படிச் சொல்லுகிறாய்? ஆனால் நீ தானே அடிக்கடி சொல்லுவாய். அரிஸ்டாட்டில் போல், நியூட்டன் போல் , ஐன்ஸ்டனும் பிழையென்று வரும் சாத்தியங்களும் வரலாம் இல்லையா?"

"உண்மைதான் கண்ணம்மா, ஒளிக்கு மிஞ்சிய வேகம் எதுவுமில்லையென்று ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல்  தத்துவம் கூறுகிறது. ஆனால் இவ்விதம் ஒளியை விஞ்சிய துணிக்கை இருக்கும் பட்சத்தில் ஐன்ஸ்டைனின் அந்தக் கோட்பாடு தவறென்றல்லவா ஆகிவிடுகிறது. கண்ணம்மா, காலத்துக்குக் காலம் நிலைத்து நின்ற கோட்பாடுகள்  பல ஆட்டங்கண்டிருக்கின்றன. அந்த வகையில் ஐன்ஸ்டைனி  கோட்பாடுகளும் ஏன் ஆட்டங்காண்க் கூடாது? அப்படி ஐன்ஸ்டைன் தவறாகவிருந்து, ஒளியை விஞ்சிய துகள்ளின் இருப்பு நூறு வீதம் சரியென்று நிரூபிக்கப்பட்டால் காலத்தை மீறிச் செல்லல் எவ்வளவு இலகுவாக விருக்கும்?"

"கண்ணா, உன்னுடன் இவ்விதமான விடயங்களைக் கதைக்கும்போதுதான் எவ்வளவு இன்பமாகவிருக்கிறது. இருப்புப் பற்றி இவ்விதம் சிந்திப்பதிலுள்ள இன்பத்துக்கு நிகரேது."

"உனக்கு மட்டுமல்ல, எனக்கும் கூடத்தான் கண்ணம்மா."

இவ்விதம் கூறிய கண்ணம்மாவைக் காதலுடன் நோக்கினேன்.வாரியணைத்துக்கொள்கின்றேன். "வாரியணைப்பதில் உனக்கென்ன அப்படியொரு பேராசை கண்ணா" என்று சிணுங்கினாள் மனோரஞ்சிதம்.


ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல்,
உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றி
 எனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்! "நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்கள...

பிரபலமான பதிவுகள்