இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.இதுவரை நீங்கள் அறிந்தவற்றிலிருந்து முக்கியமாக சில விடயங்களை நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றி நீங்கள் உய்த்துணர்ந்திருப்பீர்கள். முதலாவது இவன் இருப்பு பற்றித் தீராத தேடல் மிக்க ஒருவன். அதே சமயம் அறிவியல்ரீதியில் இருப்பு பற்றிய தேடலைத் தொடர்வதில் ஆர்வமுள்ளவன். உண்மைதான் அறிவியல்ரீதியிலான தர்க்கமே இவனுக்கு ஏற்புடையதானதொன்று. அதுவே சரியான இயற்கைத் தேடலுக்கான வழியென்பதில் இவனுக்கு எவ்விதத்திலும் சந்தேகம் எப்போதுமிருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. காலவெளிக் கைதியாக இருப்பதால் இவன் தன் அறிதல், புரிதலுக்கான எல்லைகளை நன்குணர்ந்திருக்கின்றான். அவ்வெல்லைக்குள் நின்றுகொண்டே தன் சிந்தனைத் தேடலைத் தொடர்வதில் மிகுந்த நாட்டமுள்ளவன் என்பதையும் நீங்கள் நிச்சயம் நன்குணர்ந்திருப்பீர்கள். இரவு வானும், கொட்டிக்கிடக்கும் சுடர்களும் எப்பொழுதும் இவன் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடும் ஆற்றல் மிக்கவை. அத்துடன் இவனுக்குக் களிப்புத் தருபவையும் கூட.
அடுத்ததாக இவனது கலை, இலக்கியத் தாகம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக இவனொரு கவிதைப்பிரியன் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.இவனது கவிதைகள் இவனது தேடலுக்கு உதவும் கருவிகளாகச் செயற்படுவதையும் அவதானித்திருப்பீர்கள். அத்துடன் அவற்றால் நீங்கள் இன்பமும் அடைந்திருப்பீர்கள். உண்மைதான்.
இன்னுமொரு விடயத்தையும் நிச்சயம் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அது என் நட்புக்கும், காதலுக்குமுரிய 'கண்ணம்மா' நான் பிரியத்துடன் அழைக்கும் என் நெஞ்சிற்கினியவளுடனான எனது உரையாடல்கள். அவள் என் சிந்தனையோட்டத்துக்கு ஈடுகட்டும் வகையில் சளைக்காமல் என்னுடன் உரையாடக் கூடியவள் என்பதையும் , என்னைப்போல் தேடல் மிக்கவள் என்பதையும் கூட நீங்கள் புரிந்திருப்பீர்களென்றும் நான் கருதுகின்றேன்.
சில விடயங்கள் , கதாபாத்திரங்கள் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டவர்களாக உங்களுக்குத் தோன்றிருக்கக் கூடுமென்பதையும் நான் உணர்கின்றேன். ஆனால் அவர்கள் யாவரும் என் இருப்பில் முக்கியமானவர்கள். தேடல் மிக்க என் சிந்தைக்கு இதமூட்டிய, தெளிவூட்டிய நண்பர்கள். நீங்கள் யாரை நான் குறிப்பிடுகின்றேன் என்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன். சதுரன் , வட்டநிலா தம்பதியர், மின்காந்தமணி ஆகியோரைத்தாம் குறிப்பிடுகின்றேன் என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பதையும் நானுணர்கின்றேன்.
உண்மையில் இதுவரையில் நானிங்கு விபரித்தவை ஓரளவுக்கு நவீன விக்கிரமாதித்தனாகிய இவனது ஆளுமையைப்பற்றி அறிவதற்கான உதவிகளாகவே கருதப்பட வேண்டும். இதற்கு மேலும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றி அறிவதற்கு இவனைப்பற்றிய வாழ்க்கை அனுபவங்களை , அவற்றினூடு வெளிப்பட்ட இவனது புரிதல்களை, சிந்தனைகளை அற்நிது கொளவதும் அவசியமானது. ஆனால் அதற்கான சமயம் இதுவல்ல. இன்னுமொரு தடவை , உரிய தருணத்தில் அவை பற்றி உரையாட வருவேன். அதுவரையில் உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்கின்றேன்.
" என்ன கண்ணா? இவ்வளவு விரைவில் விடைபெறப்போகின்றாயா? எனக்குக் கூடக்கூறாமல் அப்படியென்ன அவசியம் , அவசரம் கண்ணா?"
திரும்பினால் எதிரில் அவளுக்கேயுரிய புன்னகையுடன் மனோரஞ்சிதம்.
"என்ன கண்ணா, என்னை இத்தருணத்தில் எதிர்பார்க்கவில்லையா?"
"என்ன கண்ணம்மா சொல்லுறாய்? "
"என்ன கண்ணா, எனக்கும் சொல்லாமல் ஓடுவதற்குத் தானே பார்த்தாய்?"
மனோரஞ்சிதம் இவ்விதம் கூறவும் அவளையே சிறிது நேரம் உற்று நோக்கத்தொடங்கினேன். அத்துடன் கூறினேன்:
"கண்ணம்மா, என்ன சொல்லுறாய்? உன்னை விட்டு ஓடிப்பொறதா? நானேன் ஓடிப்போகோனும்., நீதான் என்னுடன் எப்பொழுதும் கூடவே எங்கும் பயணித்துக்கொண்டிருக்கப் போகின்றாயே."
"கண்ணம்மா, என் இருப்பின் வழிகாட்டியே, திசை காட்டியே நீதானடி"
இவ்விதம் கூறியவனை ஓடி வந்து ஆரத்தழுவி, மார்புடன் அணைத்துக்கொண்டாள் மனோரஞ்சிதம்; என் கண்ணம்மா.
'கண்ணம்மா! வா! காலவெளிக் குளத்தில்
குளித்துக் களிப்போம்.'
'என்ன கண்ணா? காலவெளிக்
குளத்தில் தானே களித்துக்கொண்டிருக்கின்றோம்'
'கண்ணம்மா! நீயென் கண்ணம்மா! ஞானக்
கண்ணம்மா!'
'கண்ணா! இவளுன் ஞானக்
கண்ணென்றால், நீயென்
ஞானம் அன்றோ.'
'கண்ணம்மா! ஒப்பற்ற
காலவெளிச் சித்திரமடீ நீ'
'கண்ணா! நீ மட்டுமென்ன?
காலவெளி அற்புதம் அன்றோ.'
'காலவெளியை நான் மறக்கின்றேன்
கண்ணம்மா! உன்னுடன் உரையாடும்போதெல்லாம்.'
'கண்ணா! காலவெளிப்பேரின்பத்தில் சுகித்துக்
களிக்கின்றேன் அப்போதுகளிலெல்லாம்.'
'காலவெளிக் கனவா நம்மிருப்பு
கண்ணம்மா! நானறியேன். ஆயினக்
கனவே எப்போதுமென் நனவாகக்
காண்கின்றேன்; காண்பேனடி
கண்ணம்மா.'
'கண்ணா! நீயென் உயிர்.'
'கண்ணம்மா! நீயுமெனக்கு
அப்படித்தான்.
அதுபோதும். அதுபோதும்'
'கண்ணா! வா!
காலவெளியில் களித்துக்கிடப்போம்.'
'களித்துக் கிடப்போம் கண்ணம்மா! இக்
காலவெளி உள்ளவரை.'
முற்றும்.
girinav@gmail.com
No comments:
Post a Comment