அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை. அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார். 2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது.
மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.
தமிழகத்தில் எனது நூல்கள் வெளியான தருணத்தில் நிச்சயமாக யாருக்கும் என்னை அங்கு தெரிந்திருக்காது. அந்நிலையில் என் நூல்களை வாசித்து எனக்கு எழுத வேண்டுமென்று அவருக்குத் தோன்றியிருக்கின்றது. அந்த அன்பு என்னை உண்மையிலேயே திக்குமுக்காட வைத்து விட்டது. பின்னர் எனக்குப் பிடித்த தேவையான நூலொன்றையும் தேடி எடுத்து அனுப்பி வைத்தார். அதை எப்படி மறக்க முடியும்?
கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வந்தார்: http://tamilpukkal.blogspot.ca/
நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியொன்றை 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் அவரது மறைவுக்குப் பின்னர் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி. 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:
"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.
இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்."
குறுநாவலை வாசிக்க - https://www.geotamil.com/index.php/2021-02-14-02-59-48/2075-2014-04-23-09-43-08
No comments:
Post a Comment