'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, August 15, 2023
(பதிவுகள்.காம்) வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- எழுத்தாளரும் , கலை, இலக்கிய விமர்சகருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிய விரிவான பார்வையிது. பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. -
இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.
இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.
இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.
மரபுக்கவிதையின் இலக்கணங்களோ அன்றி புதுக்கவிதையின் அழகுகளான படிமம், குறியீடு, தொன்மம் பற்றியோ கவிதைக்குள் உணரப்படும் மீமொழி பற்றியோ தெளிவான அறிவற்ற ஒரு வாசகியின் மழலைமொழி இதுவென முதலில் கூறிக்கொள்ள வேண்டும். எனினும் 'உளப்புயல்கள் வீசியடிக்கும் போது, அகக்கடலில் படகுகளாயிருந்து நினைவுச் சுழலுக்குள் சிக்கும்' ஒரு கவிஞனின் உணர்வுகளை மாற்றுக்குறையாமல் உள்வாங்கும் உளப்பாங்கு வாய்த்திருப்பதில் மகிழ்வும் கொள்கிறேன். நவீனமும் தொன்மமும் இணைந்ததொரு போக்கில், இயற்கையின் பொக்கிஷங்களான விண்ணும் மண்ணும், கதிரும் நிலவும், கிரகங்களும் கண்சிமிட்டும் தாரகைகளும் , ஓடும் நதியும் விருட்சங்களும், ஒட்டகங்களும் இன்னபிற உயிரினங்களும் இவரது கவிதைப் படைப்புகளில் உயிர்ப்புடனும் குறியீடுகளாகவும் வாழ்கின்றன.
உணர்வுகளால் மட்டுமே கவிபடைக்காமல் பேரண்டத்தின் இரகசியங்களுடன், அன்பிற்குரிய கண்ணம்மாவின் பெண்மனதினையும் இருப்பினையும் ஒப்புநோக்கி அறிய முயலும் ஒருவர், காலவெளி கடந்த கற்பனைச் சிற்பியாக தம்மை உருவகம் கொள்வதில் தவறேதும் இல்லை. இது இத்தன்னிமிர்வு கலைஞனின் சொத்து.
'விண்ணும் மண்ணும்',
'காலவெளி மீறிய கவிஞன்',
'எங்கோ இருக்கும் கிரகவாசிக்கு' ஆகிய கவிதைகளில் மனங்கவர்ந்த வரிகள் சில...
'காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள...
தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும் விசும்பு'
'குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில் நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சமகாலத்தில் இருப்பன அறிவாயா கண்ணம்மா
காலமே காலமாகி விட்ட நிலைதான் குவாண்டம் நிலை...
காலவெளி பிரபஞ்சத்தில் காலவெளி மீறிப் பயணிக்க என்னால் முடியுமடி
கண்ணம்மா...'
' உனக்கும் எனக்கும் இடையிலோ ஒளியாண்டு தடைச்சுவர்கள்
காலத்தின் மாயவேடங்கள்...'
இவ்வரிகளை வாசிக்கையில் 'காலம் எப்படி காலமாகும்' , இந்த ஒளியாண்டு என்பதன் விந்தையென்ன, காதலில் அது எப்படி தடைச்சுவராகும்? என்ற சிந்தனை யார்க்கும் வரும். ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது சுருக்க மாக 9.4605284 × 10^12 கிலோ மீட்டர்கள் ( 9.46 ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் ) தொலைவாகும் என்பது அறிவியல் தகவல்.
'ஐன்ஸ்டீனும் நானும்' (ஒரு பிதற்றல்) எனும் மற்றுமோர் கவிதை இங்கிருந்து ஆரம்பித்து இந்த விந்தையை விவரிக்கிறது.
'ஒளியின் வேகத்தில் செல்வதென்றால் அக்கணத்தில்....
நீளமெல்லாம் பூச்சியம் தான்...'
நீளம் பூச்சியம் ஆகுமென்றால் அதைக் கடப்பதற்கு எடுக்கும் காலமும் பூச்சியம் ஆகும் என்பது நிஜம்தான். இது பிதற்றலாகுமா? பேருண்மை. விஞ்ஞான வளர்ச்சியில், இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள் நிஜமாகக் கூடும்.
இந்த விந்தையினை அறிந்து கூறும்படி எங்கோ இருக்கும் கண்ணம்மாவிடமும் தூதுவிடுகிறார் இவ்வாறு..
'நாமறியாக் காலவெளி...
நீ என் காலவெளி... '
என்கிறார் 'அறிந்தால் அறிவியடி' கவிதையில்.
சூரியனே பூமிக்கு மிக அருகில் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில், அதாவது 8.3 ஒளிநிமிட தூரத்தில் உள்ள நட்சத்திரம். அதன் ஒளியானது, எமது கண்களை வந்தடையவே 8.3 நிமிடங்கள் ஆகுமெனில், பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள எண்ணற்ற நட்சத்திரத் தொகுதிகளையும் , அண்டவெளி அதிசயங்களையும் நினைத்துப் பார்த்தல் எத்தனை விந்தையானதும் பிரமாண்டமானதும் ஆகும் . உயிர்ப்புடன் இல்லாத இறந்ததோர் நட்சத்திரத்தின் ஒளியைக் கூட இன்று மாயையாக பூமியில் இருந்து கண்டு கொண்டிருக்கும் விந்தைமிகு பேரண்டம் இது.
இதை ஒத்ததே, பாரதியார் பாடலொன்றின் தீர்க்கதரிசனமான இடை வரிகள்.......
'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம்
சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ...
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ '
'எமக்கும் கீழே தட்டையர் கோடி' என்ற கவிதை வினோதமான உணர்வினைத் தருவது. முப்பரிமாண உலகில் வாழும் மானுடராகிய நாம், இருபரிமாண உலகொன்றில் வாழும் தட்டையர்களைப் பார்த்து எள்ளி நகையாடுதல் இயல்பு. அதுபோல எம்மை விட அதிக பரிமாண உலகில் வாழும் உயிர்களும், மானுடராகிய எம்மைப் பார்த்து எள்ளி நகையாடக் கூடும் என்ற கருத்தமைந்த இக்கவிதையில், கண்ணதாசனின்
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' எனும் வரிகளைப் பொருத்தி மானுட இயல்பின் உளச்சிக்கல்களைக் காட்டுகிறார்.
இயற்பியல் மேல் கொண்ட தீர்க்கமான காதலை, இயற்கை மேலும் கொண்டவர் இக்கவிஞர். பிரிந்து வந்த சொந்த மண்ணின் அழகை எண்ணி ஏங்கும் இடத்து, பல்வேறு நிர்ப்பந்தக் காரணிகளால் புலம்பெயர்ந்தோரது அகக் கனலை வாசகரிடத்தும் பற்ற வைக்கிறார்.
' இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு மாடுமாகினேன்....
துருவத்துக் கட்டடக் காட்டுக் கானுயுருமானேன்
முடிவற்ற நெடும்பயணம் !
தங்குதற்கும் ஆறுதற்கும் தருணங்களற்ற நெடும் பயணம்
எங்கு முடியும்? ....
இன்றோ சுடர் தேடுமொரு துருவத்துப் பரதேசி!
இருந்தும் சிந்தையின்னும் இழக்கவில்லை,
காலவெளிக் குழந்தை நான்'
என்ற வரிகளில் தாயக ஏக்கம் உச்சம் தொடுகிறது.
நவீன உலகின் மாற்றங்களால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மனங்கலங்கிக் கூறுமிடத்து,
'சுடர்களை மறைத்தன நகரத்துச் சுடர்களே
மரங்களை மறைத்தன நகரத்து மரங்களே'
'கதிருறிஞ்சிக்
கனலுதிர்த்திடும் காங்ரீட் காடுக'ளிடையே
'தமையழித்த போதும் தகிப்பினை வாங்கித் தண்ணிழல் தரும்' 'விருட்சக் கன்னியரின் இளநகை'
என எண்ணி ஏங்குகிறார்.
'அதிகாலைகளில், அந்திகளில் கொடியாக வான் வீதியில் நடந்து சென்ற மின்னல் சுடர், காலவெளியினில் கரைந்து போனதை' நினைத்தும்,
'பேசாத் திரைப்படமாய் வயற்புறத்து மண்டூகங்களின் கச்சேரிகள் அற்ற மாநகரத்து மழைப் பொழுதுகளை' எண்ணியும் சிந்தை வாடித் துடிக்கின்றார்.
இயற்கையை மனிதன் கையகப்படுத்திய நவீன யுகத்தின் உச்சமாக ஒரு கவிதை 'கொரோணா கால இரவொன்றில் நகர் வலம் ' .
'மானுடரின் மெளனத்தில் மிருகங்கள் புத்துயிர்ப்பு பெற்ற இரவொன்றில்...
ஒண்டாரியோ வாவிக்கரையில் குழந்தையை வாரிமுகர்ந்தபடி
நரி அன்னை
வீதியை ஊடறுத்து மான்கள்....
நகர்வலம் முடிந்து மீள்கையில்
மென்துயரில் தோய்ந்ததென் நெஞ்சம் தெளிவிழக்கப் போகிற நதிகளை உலகை எண்ணினேன்'
என்ற வரிகளில் பல்லாயிரமாண்டு கடந்து பழமைக்குச் சென்று ஏக்கத்துடன் மீண்டது மனது.
விஞ்ஞான வளர்ச்சியானது எண்ணிலடங்கா நன்மைகளைத் தந்திருந்தாலும், அறமில்லா அரசியலும், ஆயுதங்களும், வர்க்கப் போர்களும் நாம் வாழும் பூமிக்கு நினைத்துப் பார்க்க முடியாத அழிவினையும் தந்திருப்பதை உள்ளக்குமுறலுடன் வெளிப்படுத்தும் கவிதை 'எழுக அதிமானுடா'
'வாயுப்படைகளின் வடிகட்டலில் வடியுமுஷ்ணக் கதிர்கள்..
பொறிகக்கும் புகையினில்
சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால் ....
எங்கே அந்த அமைதி!
அந்த இனிமை....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன?
அதிமானுடரே எங்கு
போயொளிந்தீர்...'
என்ற கேள்வியில் தகிக்கும் வெப்பமானது ,1880 ம் ஆண்டின் பின் புவி மேற்பரப்பின் வெப்பநிலை குறைந்தது 1.1° செல்சியஸ் உயர்வடைந்திருப்பதையும், இன்று நாம் இதனால் அனுபவிக்கும் இயற்கை அனர்த்தங்களின் விளைவுகளையும் சேர்த்தே நினைவில் நிறுத்துகிறது.
இவ்வாறான, புறவுலகின் நெஞ்சக்கனல் நீங்க கவிஞருக்கு கண்ணம்மாவின் பசிய நினைவு வேண்டும்.
'காற்றுவெளியிடை கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களித்தவன்' பாரதி. ஐன்ஸ்டீனின் வழிநின்று சிந்திக்கும் கலியுகக் கவிஞரோ இவ்வாறு கூறுகிறார்
'காலவெளியிடை கண்ணம்மா
உன் கனிமனம் எண்ணி வியக்கின்றேன்...
காலமென்றொன்றில்லை கண்ணம்மா
வெளியும் அவ்வாறே...
காலம் நீயென்றால் கண்ணம்மா
வெளி நானன்றோ..'
என காதலின் பிரிவின்மையை விளக்குபவர், மெல்லுணர்வு மிகும் வரிகளால் அதிகாலைப் பொழுதொன்றில் கண்ணம்மா வீசிச்சென்ற 'ஓரப்பார்வையினை' நினைவில் நிறுத்தி
'அக்கணத்தினை சிறைப்படுத்தி ஆழ்மனதினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'
எனக் கூறி, தீராக்காதலின் தரிசனங்களையும் வெளிப்படுத்துகிறார்.
எல்லாக் காதலர்களுக்கும் மனப்பத்தாயத்தில் பத்திரப்படுத்தப்பட்ட நினைவுகள் ஏராளம். அதனால்,
' சென்று வருகிறேன் என் இனிய மேரி.... விதித் தேவதைகள் பிரித்தாலும் அவளது உருவம் என் நெஞ்சில் குடியிருக்கும்' எனும் இதே உணர்வு கிரிதரனால் மொழிபெயர்க்கப்பட்ட 'என் இனிய மேரி ஆனுக்கு' என்னும் பைரனின் கவிதையிலும் வெளிப்பட்டிருப்பது வியப்புக்கு உரியதல்ல.
இது போன்ற சில சிறப்பான மொழிபெயர்ப்புக் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட கிரிதரனின் கவிதைகளும் இங்கு காணக் கிடைக்கின்றன.
நிறைவாக,
'படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல் போல
பாரிலெதுவும் இல்லை.
இருப்பொன்று போதாது
இருத்தல்
பற்றியெண்ணி
இருத்தற்கு'
எனும் கவிவரிகளால் தனது உளக்கிடக்கையை வெளிப்படுத்திய கவி, தனது அன்னைக்கு பாசமிகு சொற்களால் அஞ்சலி செலுத்தவும் மறக்கவில்லை.
'தாயே !
உனை நாமெங்கினிக் காண்போமோ? ...
உயிரின் உறவின் உதிரத் துளியாய்
இன்னுமிங்கே இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன்
உன் இருப்பின் பொருள் உணர்ந்தேன்'.
'இருக்கும் இருப்பில்
இருக்கும் வரை
இன்புற்று
இருத்தலே
என் இ( வி )ருப்பு'
உணர்வின் வீரியத்துடனும் அறிவின் ஆளுமையுடனும், படைப்பு மொழியின் எழிலுடனும் எழுதப்பட்ட இக்கவிதைகள், வாசகரது எண்ணப் பரப்பில் பிரமாண்டமான தேடுதலையும் அறிவின் விரிவையும் ஏற்படுத்துகின்றன. இலக்கியத்திற்காக கிரிதரனின் இருப்பு நீண்டு நிலைபெற்று இருக்கட்டும் என்பது என் விருப்பு. நலம் சூழ்க !
ranjani.subra54@gmail.com
நன்றி: பதிவுகள் இணைய இதழ் - https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2023-06-12-05-40-55/8071-2023-08-15-14-12-43
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment