Thursday, August 17, 2023

மறக்க முடியாத வீதி ஓவியரும், அவர் வரைந்த ஓவியமும்! - வ.ந.கிரிதரன் -


மறக்க முடியாத ஓவியமிது.  எண்பதுகளின் ஆரம்பத்தில், நாட்டை விட்டுப் புகலிடம் நாடி புறப்பட்ட பொழுதில், சுமார் ஒரு வருடம் நியூ யோர்க் மாநகரத்தில் அகதிக்கோரிக்கையாளனாக அலைந்து திரிந்த காலகட்டத்தில் வீதி ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட ஓவியம்.

நியூ யோர்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில், அமெரிக்கன் அவென்யுவில் நடைபாதையொன்றில் ஓவியர்கள் சிலர் சிலரை அவர்கள்முன் கதிரைகளில் இருத்தி வரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் வரைவதற்கு எவரும் கிடைக்காமல் ஓடு மீன் ஓட, உறு மீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்காகக் காத்துக்கொண்டிருந்தார். என்னக் கண்டதும் அவர் முகம் மீனைக் கண்ட கொக்காக மலர்ந்தது. நான் எவ்வளவு என்றேன்.அதைப்பொருட்படுத்தாமல் வந்து உட்காரு. வரைகிறேன். உன்னைப் பார்த்து மேலும் பலர் வரையச்சொல்லி வருவார்கள் என்றார். நானும் மகிழ்ச்சியுடன் அவர் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். வரையத் தொடங்கினார். அவர் கூறியவாறே பார்வையாளர்கள் எம்மைச் சுற்றிக் கூடி விட்டார்கள். என்னை அப்படியே வரையும் ஓவியத்திறமையை மெச்சத்தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் என்னைப்பார்த்து நீ நேரில் இருப்பதை விட ஓவியத்தில் நன்றாகவிருக்கிறாய் என்றார். நான் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருந்தேன்.

ஓவியத்தை அவர் பென்சிலால் வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். ஓவியத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கின்றார். ஆனால் அது மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் போல் எனக்கு இன்றுவரை புரிபடாமலேயுள்ளது. உங்களுக்குப் புரிபட்டால் கூறுங்கள்.

அவர் வரைந்து முடிந்ததும் அவருக்கு ஐந்து டொலர் கொடுத்தேன். மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். பார்வையாளர்களில் ஒருவர் அவரது ஓவிய ஆற்றலால் கவரப்பட்டு அவர் முன் இருந்த நாற்காலியில் குந்தவே அவர் மேலும் மகிழ்ந்து போனார். மீண்டுமொரு தடவை எனக்கு நன்றி கூறினார்.

இந்த ஓவியத்தை இழந்து விடக்கூடாதென்பதற்காக டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வைத்துள்ளேன். அத்துடன் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும்  என் சிறுகதைத்தொகுப்பின் அட்டைப்படமாகவும் பாவித்துள்ளேன். மேலும் சில எனது மின்னூல்களின் அட்டைககளிலும் பாவித்துள்ளேன்.

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்