கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமான பங்களிப்புகள். பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள்.
கலைஞரின் 'தொல்காப்பியப் பூங்கா' தற்போது இணையத்தில் கிடைக்கின்றது.
கலைஞரின் எழுத்தின் முக்கியமான அம்சம் - அது சாதாரண வாசகர்கள் தொடக்கம், தீவிர வாசகர்கள் வரையில் செல்லும் தன்மை மிக்கது. அனைவரையும் மகிழ்விப்பது. அதனால்தான் அறிஞர்கள் தொடக்கம் சாதாரண வாசகர்கள் வரையில் அவரது எழுத்தை இரசிக்கின்றார்கள்.
அழகு மிகு ஓவியங்களுடன் கூடிய அவரது தொகுப்புகள் கருத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிப்பவை.
'தொல்காப்பியப் பூங்கா'வில் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் முக்கிய அம்சங்களை எவ்வளவு இனிமையாக, எளிமையாக & சுவையாகச் சாதாரண வாசகர்களிடம் எடுத்துச் செல்கின்றார் என்பதை அத்தொகுப்பை வாசிக்கும் எவரும் அறிந்து கொள்வர்.
கலைஞரின் எழுத்து நடை வாசகர்களைக் கட்டிப்போடும் தன்மை மிக்கது. அதற்கு ஓர் உதாரணமாக இந்நூலில் அவர் திணை என்னும் சொல்லுக்குத் தரும் விளக்க்த்தை இங்கு தருகின்றேன். கூடவே நூலுக்கான இணைய இணைப்பினையும் தருகின்றேன்.
'திணை என்றால் என்ன என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பார்கள்!
திணை என்றால் ஒழுக்கம், குலம், நிலம் தொடர்பாக வழங்கப்படும் பெய்ர் - உயர்திணை என்பது மக்களையும், அஃறிணை என்பது மக்கள் அல்லாதவற்றையும் குறிக்கும்.
அகத்திணை என்பது தலைவன் தலைவியரின் உள்ளங்கள் இணைதல், பிரிவு, ஊடல் போன்ற செய்திகளையும் பொதுவில் இல்லற வாழ்க்கையையும் கூறுகிற அகம் எனப்படும் உள்ளத்தை அடிப்படையாகக்கொண்டது.
இதில் ஆடவன் காதலித்துப் பெண் காதலிக்காமல் இருந்தாலும், பெண் காதலித்து ஆடவன் காதலிக்காமல் இருந்தாலும் அதைக் 'கைக்கிளை' என்றும் , வலியச் சென்று கூடுவதற்கு முனையும் பொருந்தாக் காதலை பெருந்திணை என்றும் கூறப்படுகின்றது.
ஐந்திணை என்பது , தலைவனும் தலைவியும் அன்பால் பிணைந்து கூடி மயங்குவதைக் குறிஞ்சித் திணை எனவும், கூடிய பிறகு அவர்கள் பிரிந்திடும் நிலையைப் பாலைத்திணை எனவும், ஊடல் கொள்ளுவதை மருதத்திணை எனவும், ஊடல் காரணமாகவோ வேறு காரணமாகவோ பிரிவு காலத்தில் காத்திருந்து வரவு பார்த்தலை முல்லைத்திணை எனவும், பிரிந்த நாட்களின் எண்ணிக்கை பெருகிடப் பெருகிட இரங்கலுக்குரிய நிலை அடைவதை நெய்தல் திணை எனவும் கூறப்படுகிறது.
தலைவன், தலைவிக்கிடையே கூடலோ, ஊடலோ, பிரிவோ , எதுவும் எல்லாத்திணைகளிலும் நிகழக்கூடியதே. இங்கே திணை என்பதை இடமென்றோ , நிலமென்றோ கொண்டிடல் வேண்டும்.
அகத்திணைக்கு மாற்றாக அல்லாமல் வேறொரு திணையாகக் குறிக்கப்படுவதே புறத்திணையாகும்.
அகம் எனப்படுவது காதல், இல்வாழ்க்கை என்று ஆடவர் பெண்டிர் இருவர்க்கு மட்டுமே உரியதானதும், பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாததுமானது என்றிருக்கும் நிலையில் , புறம் என்பது இல்வாழ்க்கையைக் கடந்து வெளியே நிகழக்கூடிய போர்கள், பொருளீட்டும் செயல்கள், பொதுப்பணிகள் போன்ற பகிர்ந்துகொண்டு ஆற்றக்கூடியவை என்ற நிலையுடையதாகும்.'
தொல்காப்பியப் பூங்கா நூலினை வாசிக்க -
No comments:
Post a Comment