'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, March 6, 2025
சிறுகதை: ஒரு முடிவும் விடிவும் - வ.ந.கிரிதரன் -
மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் எழுதிய என் ஆரம்ப காலச் சிறுகதைகளிலொன்று இந்தச் சிறுகதை. தொண்ணூறுகளில் தாயகம் பத்திரிகையாக வெளியானபோது வெளியான சிறுகதை.
அக்காலகட்டத்தில் மணிவாணம் என்னும் பெயரில் மேலும் சில சிறுகதைகளும், 'கணங்களும், குணங்களும்' நாவலும் எழுதியிருந்தேன்.
*************************************************************************
மெல்லமெல்ல இருண்டு கொண்டிருக்கிறது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப் போன கதிரவன் பொங்கி எழுந்த காதலுடன் அடிவானைத்தழுவித் தன்னை மறந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது குளக்கரை, பறவைகள் கூட்டம் கூட்டமாய் தத்தமது உறைவிடங்கள் நாடிப்பறந்த வண்ணம் இருந்தன. இந்த நேரத்திலும் சில மீன் கொத்திகள் பேராசையுடன் இரைக்காக அருகில் உள்ள மரக்கொப்பொன்றில் காத்துக்கிடந்தன. அமைதியில்இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.
குளக்கரையில் மேட்டில் பரந்திருந்த புற்றக்கரையில் அலைந்து கொண்டிருந்த குழந்தையின் மேல் கையும் விரிந்திருந்தநீர்ப்பரப்பில் பார்வையுமாக யமுனா கூர்ந்த பார்வை. அகன்ற நெற்றி. அடர்ந்திருந்த கூந்தலைமுடிந்துவிட்டிருந்தாள்.
சாதாரணநாற்சேலையில் செக்கச்சிவந்த உடல்வாகு. எந்நேரமும் கனவு காணும் அந்த அழகான கண்களில். அந்தச் சோகம் படர்ந்திருந்தது.இவளிற்கு இந்தநிலை வந்திருக்க வேண்டாம். எனக்குள் ஒருமுறை கூறிக் கொண்டேன். பாழாய்ப் போன சமூகத்தின் மேல் கோபம் கோபமாய்ச் சலிப்பும் வெறுப்புமாய் வந்தது அவளது இந்தநிலைக்கும் இந்த சிந்தனையோட்டங்களும் நடைமுறைகளும் அல்லவா காரணம்.
நீண்ட நாட்களின் பின்னால், கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அந்நியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பின் கிராமம் வந்திருந்தேன். வந்திருந்த என்னை யமுனாவின் இந்த கோலம் பெரிதும் சித்திரவதை செய்தது. சிறுவயது முதலே ஒன்றாக ஓடி விளையாடி இந்த மண்ணில் என்னுடன் வளர்ந்தவள். என்னை விட இரு வயதுகள் மூத்தவள். அவளது அறிவும் அந்த அழகும்... இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளுக்குத் திருமணம் ஆகியிருந்தது. அவளது திருமணத்துக்குக் கூட நான் போகவில்லை. மோதலும் இரத்தக் களரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நடந்த அந்தத் திருமணத் தினத்தன்று சந்தேகத்தின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக நான் இருந்தநிலையில் கலந்துகொள்வது சாத்தியமாகவிருக்கவில்லை. இந்த இருவருடங்களில் எத்தனையோ மாறுதல்கள். வாழ்வே ஒரு மோதல்தான் தப்பிப்பிழைத்தல்தான்.இந்த மோதல்களிற்குள் இன்னுமொரு மோதலாக தப்பிப்பிழைத்தலாக, நடந்து முடிந்து போன சம்பவங்கள். இன்று மழை விட்டும் தூவானம் விடாதநிலை. மோதலும் அழிவுமாகப் போய்விட்டிருந்த கடந்த காலத்தின் ஒரு அவமானகரமான கணத்தில் படையினன் ஒருவனின் மிருக உணர்வுகளுக்கு பலியாகிப் போன யமுனாவின் கதை.... இது யார்தவறு? அவளென்ன விரும்பியா இந்த தவறைச் செய்தாள்? நாதியற்ற குழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையில் கருகிப் போனது யார் குற்றம்?
காந்தி பாரதியிலிருந்து எத்தனை எத்தனையோ பேர் பெண் விடு தலை சமூதாயச் சீர்திருத்தம் அது இதென்று மேடைக்கு மேடை கத்திக் கத்தி கூப்பாடு போட்டதுதான் மிச்சமாகப் போனதா?
'உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்ந்திரும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா! ஊது கொம்புகள், ஆடுகளி கொண்டே' பாரதியின் பாடல் ஞாபகத்தில் எழுகிறது கூடவே ஏளனம் கலந்த ஒரு விதஇளநகையும் பரவிட. தியாகராசன்.அவன் தான் யமுனாவின் புருசன். அம்மி மிதித்து அருந்ததிகாட்டி 'உயிருள்ள வரை என் கண்ணின் மணி போல் காப் பேன்'உறுதி கூறி கைப்பிடித்த பெண்மையை சோதனை நேர்ந்த இக்கட் டான சந்தர்ப்பத்தில், ஆறுதலும் அரவணைப்பும் தந்து அன்பு செய்து காக்க வேண்டிய நேரத்தில், ஆண்மைத்தனத்தையே இழந்து 'மானம் கெட்டவள், கற்பிழந்தவள்' எனத் தூற்றிச் சென்று விட்ட பாவி. ஒரு குழந்தைக்குதாயான யமுனாவின் நிலை என் நெஞ்சில் வேதனையைப் பெருக்கிற்று. ஏற்கனவே ஒரு மிருகத்தால் கொத்திக்குதறப்பட்டிருந்த யமுனாவின் வேதனை தீருமுன்னரே இன்னுமோர் பேரிடி. கற்பு. கற்பு என்பது மனத்துடன் கூடுதலாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமே அன்றி பெண்களை வெறுமனே அடக்கி ஒடுக்கும் கருதுகோளாக இருக்கவே கூடாது.
தியாகராஜன் ஏன் அவ்விதம் நடந்து கொண்டான். 'ராஜேந்திரா நான் பாரதியல்லடா முற்போக்கு பேச. என் மனைவி இன்னொருத்தனால் கெடுக்கப்பட்டாள் என்ற நினைப்புடன் அவளுடன் வாழ்வ தென்பது என்னால் நினைக்கவே அருவருப்பாய் இருக்கிறதடா'
'தியாகு. யமுனா என்ன வேண்டும் என்றா தவறிப் போனாள். ஆறுதலும் அரவணைப்பும் தரவேண்டியநீஇவ்விதம் பேசலாம்? ஒரு கணம் குழந்தையைநினைத்துப் பாரேன்."
'ராஜேந்திரா, குழந்தையை நான் பொறுப்பெடுக்கத் தயார் ஆனால் அதற்கு யமுனாசம்மதிக்கமாட்டாள் என்று கேள்விப்பட்டேன். நீயே நினைத்துப் பார். றோட்டாலை யமுனாவோட போகேக்கை பின்னால் வாற குத்தல்களை ஏற்றுக் கொண்டு வாழ ஆண்மைக்கே இழுக்காகப்படவில்லையா...'
ஆண்மைக்கே இழுக்கா. ஆண்மைக்கு இழுக்கு அது இல்லையடா. உனது செயல்தான் ஆண்மைக்கே இழுக்கடா. உண்மையாகப் பார்க்கப் போனால் ஒருவிதத்தில் தியாகராசனின் இந்த நடத்தைக்கு காரணம் இந்த சமூகமும் அல்லவா. இந்த சமுதாயம். இங்கு நிலவும் கோட்பாடுகள். இதனால் தானே தியாகராசன் அவ்விதம் நடந்து கொள்கிறான். அவனால் அவன் வாழும் சூழலையும் மீற முடியவில்லை. அந்தச் சூழல் அவன் மேல் ஏற்படுத்திய பாதிப்பையும் மீற முடிய வில்லை.
கதிரவன்தொலைவில் அரைவாசிதன்னைத்தொலைத்துவிட்டி ருந்தான். முன்னை விட இருள் கூடி இருந்தது. இரை பார்த்துக் கொண் டிருந்த அந்த ஒரு சில மீன் கொத்திகள் கூட போய் நெடுநேரமாகிவிட்டி ருந்தன. இதமான தென்றல் மட்டும் இதமாக வீசியபடியிருந்தது. யமுனா அருகில் இருந்த சிறு கற்களை குளத்தில் எறிந்து அதனாலேற்படும் வட்ட வட்டமாகப் பரவும் நீரலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழம்பி யிருந்த எனது நெஞ்சிலும் ஒரு விதத் தெளிவு. நானும் ஒரு முடிவு செய்து கொண்டேன். தெளிவான ஆனால் உறுதியான முடிவு. என் முடிவை அவளிடம் கூறினேன். ஒருகணம் அவள் திகைத்துப் போனாள் சிறிது நேரம் அத்திகைப்பின் விளைவாக எழுந்த மெளனத்தில் மூழ்கிக் கிடந்தாள்.
'ராஜேந்திரா"அவள் கண்கள் கலங்கின. அவளால் மேலே பேசவே முடியவில்லை. அவளால் என்ன பேசமுடியும்? அவள் வாழ்ந்த சமூக அமைப்பு அப்படி. அவளோ மணமானவள். ஒரு குழந்தை வேறு உள்ளவள். இந்த இளம் வயதிலேயே வெறிமிருகம் ஒன்றால் கடித்துக் குதறப்பட்டு கணவனாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். ஆனால் அவளும் ஒரு பெண் தான். அவள் நெஞ்சிலும் உணர்வுகள் பொங்கத்தான் செய்யும் என்பதை இச்சமுதாயம் என்ன நினைத்துப் பார்த்தா தீர்ப்புச் சொல்லப் போகிறது?
எனக்கு இவளுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிந்தால் ஊரவர்கள் என் அம்மா, உறவினர்கள் காறித்துப்ப மாட்டார்களா? காமவெறி பிடித்தவள் அப்பாவிப் பெடியனை வளைத்துப் போட்டாள்-இவ்விதம் வாய்க்கு வந்தபடி அவளைக் கிழிக்க மாட்டீர்களா? ஒரு ஆண் எத்தனை திருமணங்கள் செய்து கொண்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. அறுபது வயதுக் கிழவன் ஒருவன் பதினாறு வயதுச்சிறுமியைத் திருமணம் செய்யலாம். ஒன்றல்ல இரண்டு மூன்று கள்ளத் திருமணங்கள் கூடச் செய்து கொள்ளலாம். யாருமே கவலைப்படப் போவதில்லை. ஆனால் ஒரு பெண். அதிலும் யமுனா வைப் போல் அனாதரவானநிலையில் உள்ள பெண் ஒரே ஒருமுறையே வாழும் இந்த வாழ்வில் பெரு பகுதியைத் துணையின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உள்ளத்து உணர்வுகளை கொன்றடக்கித் துறவினியாக வாழ வேண்டும். இதுதான் சமூக நியதி. சமூதாயம் வேண்டுவது அதைத்தான். இவற்றை நான் உணர்ந்திருந்தேன் அதனால்தான் என் முடிவில் உறுதியாயிருந்தேன். ஆனால் யமுனாவோ அருகில் புற்றரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கினாள். பரிதாபமாக என்னை நோக்கினாள்.
மீண்டும் நானே தொடர்ந்தேன்.
'யமுனா திருமணம் என்பது ஒரு வரை ஒருவர் புரிந்து விளங்கி ஒன்று சேர்வதுதான். ஆனால் தியாகராஜனின் நடத்தை அவன் உங்களுக்கு ஏற்றவன் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை உங்களது இந்த இக்கட்டான நேரத்தில் உங்களிற்கு தேவை ஒரு துணை பாதுகாப்பு தரக்கூடிய ஆதரவும் அன்பும் கலந்த துணை. அது சிறுவயது முதலே உங்களுடன் பழகி வளர்ந்தநானாக ஏன் இருக்கக் கூடாது?"
'ராஜேந்திரா, நீஇலேசாகக் கூறிவிட்டாய். ஆனால் இது எத்தனை பேரின் எதிர்ப்பை உருவாக்கும் தெரியுமா. உங்கம்மா. ஊரவர்கள். எல்லோரும் என்னைத் தானே திட்டுவார்கள். அவர் என்னைக் கைவிட்டது சரிதான் என்றல்லவா கூறுவார்கள். எனக்காக நீயேன் உன் வாழ்வை வீணாக்குகிறாய். என் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் பொறுப்பை என்னிடமே விட்டுவிடு'
இவ்விதம் கூறிய யமுனா சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். எல்லாவற்றையும் தாங்கித்தாங்கி அடங்கிவிட்ட பெண்மையல்லவா பேசுகிறது. ஆனால் நானோ. என் முடிவில் உறுதியாய் இருந்தேன்.
'யமுனா அம்மாவைக்காலப்போக்கில் சமாதானப்படுத்த என்னால் முடியும். நீங்கள் மட்டும் சரியென்று சொல்லுங்கள். அது போதும் எனக்கு உங்களை இந்நிலைக்குதள்ளிவிட்ட சமூக கோட்பாடுகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அதுவே போதும்.'
இவ்விதம் கூறியவன் அவள் கண்களையே உற்று நோக்கினேன். அவளோ மெளனமாக எனது கண்களை உற்றுநோக்கினாள். அந்த மெளனத்தில் பொருளை நான் உணர்ந்து கொண்டேன் அதில் பொங்கிய தூய உணர்வுகளை அன்பினை காதலை, நம்பிக்கையை நன்றியைநான் உணரமுடிந்தது.
'யமுனா'அவளை வாரியணைத்துக் கொள்கிறேன்.
என் பிடிக்குள் தன்னை அடைக்கலமாகத் தன்னையே தந்த யமுனா அந்த அணைப்பில் தன்னையே மறந்தாள்.
அடிவானோ, கதிரவனின் முழுமையான இழப்பில் தழுவலில் சிலிர்த்து, நாணிக்கிடந்தது
நன்றி: தாயகம் (கனடா)
Subscribe to:
Post Comments (Atom)
மிகுல் டீ செர்வான்டீஸின் 'டொன் கியூடே' - முதலாவது நவீன நாவல்!
நவீன நாவல் இலக்கியத்தில் முதலாவது நவீன நாவலாகக் கருதப்படும் நாவல் மிகுல் டீ செர்வான்டீஸ் (Miguel de Cervantes Saavedra ) எழுதிய் புகழ் பெற...

பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
No comments:
Post a Comment